நாலடியார் (37) பன்னெறி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – பன்னெறி இயல்

37. பன்னெறி

செய்யுள் – 01

“மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு”
விளக்கம்: மேகம் தவழும் மேன் மாடம் உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காகி ஒளி வீசுவதாக இருப்பினும் மாட்சிமை பெற்ற மனைவியை பெறாதவனுடைய இல்லம் என்ன பயனுடைது. அது பார்க்க கூடாத சுடுகாடே ஆகும்

செய்யுள் – 02

“வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினை தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதேஅச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது”
விளக்கம்: தளரவில்லாத கொடிய வாள்வீரன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம்
சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பெரிதாம்!

செய்யுள் – 03

“எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி – அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் – இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை”
விளக்கம்: கணவன் சொல்லுக்கு அஞ்சாது ‘அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன். காலையில் சமையலறைக்கு போகாதவள் போக்கரிய நோய்; சமைத்த உணவைத் தராதவள் பிசாசு; இந்த பெண்கள் மூவரும் கணவனை கொள்ளும் கொலைக் கருவிகளாகும்.

செய்யுள் – 04

“கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான் – பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண் டெறியுந் தவறு”
விளக்கம்: இல்வாழ்க்கை நீக்கி விடு என்று பெரியோர் சொல்லைக் கேட்டு அதை நீங்காத வனாய், தலை வெடித்து போகும்படி சாப்பறை கேட்டும், இல்வாழ்க்கை நிலையில்லாப்பொருள் என தெரிந்து கொள்ளா தவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் மேல் எறிந்து கொள்ளும் தவறு போன்றது என சான்றோர் கூறுவர்.

செய்யுள் – 05

“தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல் கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை”
விளக்கம்: ஒருவர்க்கு தவத்தில் முனைந்து வாழ்வது தலைசிறந்த நிலையாகும். இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுவது இடைப்பட்ட நிலையாகும். கிடைக்காது எனத் தெரிந்தும் பொருளாசையால் தமது பெருமையை அறியாதவர்கள் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்.

செய்யுள் – 06

“கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்”
விளக்கம்: தலையாய அறிவினர் நல்ல நூல்களை கற்று வாழ்நாளை பயனுடை யதாக கழிப்பர். இடைப் பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்து காலத்தை கழிப்பர். கீழ்மக்களோ உண்ண இனிய உணவு கிடைக்கவில்லையே,
செல்வத்தை மிகுதியாக பெற முடியவில்லையே என்ற வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருத்திக் கொண்டிருப்பர்

செய்யுள் – 07

“செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
வயனிறையக் காய்க்கும்
வளவய லூரா மகனறிவு தந்தை யறிவு”
விளக்கம்: நல்ல நெற்களால் ஆன நல்ல விதைகள் மேலும் விளைந்திருக்கும் வயல்களை உடைய நாட்டுக்கு வேந்தனே! தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைய அறிவு இருக்கும்.

செய்யுள் – 08

“உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைபெண்டீர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு”
விளக்கம்: மிகுந்த செல்வமுடையோரும் சான்றோரும் தம் நிலையிலிருத்து தாழ்ந்து, புறப்பெண்டிரின் மக்களும் கீழ்மக்களும் உயர்ந்து, கால்புறம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்பு போல உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது.

செய்யுள் – 09

“இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார் – மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட
வாழ்வின் வரைபாய்தல் நன்று”
விளக்கம்: மணிகளை வாரிக் கொண்டு விழும் அருவிகளை உடைய நல்ல நாட்டுக்கு அரசனே! நண்பர்கள் தம் மனதில் இருக்கும் துன்பத்தை கூற அதை போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதை விட மலை மீது ஏறி கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.

செய்யுள் – 10

“புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல – புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்”
விளக்கம்: புது வெள்ளமும் அழகிய காதணி அணிந்த பொது மகளிரின் நட்பும் நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல ஒரே தன்மையுடையது. புது வெள்ளம் மழை நீங்கினால் நீங்கும், பொது மகளிர் அன்பு, பொருளின் வரவு நீங்கியதும் நீங்கி விடும்.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...