பறவையின் பாதை – நூல் விமர்சனம்

கவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam.

கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய கருத்துக்களாலும் அறிய வைத்திருக்கிறார் அற்புதக் கவிஞர் அப்துல் ரகுமான். மனிதனின் நற்பாதையில் மனிதனாலேயே நடக்க முடியாத சூழலில் பறவையின் பாதையில் தன் கவிதைச் சிறகுகளை விரித்து உயரே பறக்கிறார் கவிஞர்.

மேய்ச்சல் எனும் கவிதையில் அவர் இறைவனிடம் வேண்டி கேட்பதாக எழுதிய வரிகள் மெய்சிலிர்க்க வைத்தன. அக்கவிதையின் இறுதி வரிகள் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது. இதோ அவ்வரிகள் – paravaiyin pathai puthaga vimarsanam

“குடிப்பதற்கோ கறப்பதற்கோ
யாரும் இல்லை என்றாலும்
என் பால், காம்புகளின் வழியே கசிந்து சிந்துகிறது”

பறவையின் பாதை

கிழிந்த வேதம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் அற்புதத்தில் அற்புதம்..

“குழுக்கிய நிலையில் வெட்டப்பட்டு கிடக்கின்ற கரங்கள்..
ரத்த மலையில்
தெரியாமல் போனது
கண்ணீர்
இடிபாடுகளில் வித்தியாசம் தெரியவில்லை கோபுரத்திற்கும் மினாராவேக்கும்”

ஆம் இக்கவிதை வரிகளில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது எனக்கு.. பறவையின் பாதை – பறவையைப் போல் நான் பயணம் செய்கிறேன் என்று தொடங்கும் இக்கவிதை வரிகள்..

“என் பாதை
என் சொந்தப் பாதை
எந்த அடிச்சுவடும்
கறைப்படுத்தாத
யாரையும் பின்பற்றாத
யாரும் பின்பற்ற முடியாத
அரூபப் பாதை
அந்தப் பாதையில்
சாலை விதிகள் இல்லை..
விபத்துகள் இல்லை…
உங்கள் பாதைகள்
உங்கள் ஊர்களுக்குச் செல்கின்றன”

விலாசம்

ஆம் அப்துல் ரகுமான் என்னும் பறவையின் பாதையில் பயணிக்கும் போதே கவிதையின் உலகம் புலப்படுகிறது. விலாசம் என்ற கவிதையில்… நான் ரசித்த வரிகள்.. – paravaiyin pathai puthaga vimarsanam

“இறைவா
நீ இல்லாத
இடம் உண்டா?
என்று கேட்டேன்
உண்டு என்றான்
எது என்றேன்
ஆலயம் என்றான்
ஏன் என்றேன்
வியப்போடு…
மாறி மாறி இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அதனால் அங்கே
இருக்க முடியவில்லை
என்றான்”

ஆம் மனிதன் என்ற விலாசத்தை நாம் தொலைத்துவிட்டு அலைகிறோம் என்பதை காட்டும் நிதர்சன வரிகள்…

மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு என்ற கவிதை என் மனதில் மனிதமாய் மொழிபெயர்க்கப்பட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அது உங்கள் காதுகளுக்குள்ளும் ஒலிக்கட்டுமே…

“இறந்த காலக் கவிஞர்கள் எழுதியது..
நிகழ்காலக் கவிஞர்கள் எழுதுவது
வருங்காலக் கவிஞர்கள்
எழுதப்போவது

எல்லாம் ஒன்றுதான்…
எல்லோருமே இறைவனின் கவிதையை மொழிபெயர்க்கிறார்கள்
சரியாக வருவதில்லை
அதனால்தான் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்”

ஆம் எழுதிக் கொண்டே இருப்போம்.. இறைவன் வசப்படுவான் என்ற நம்பிக்கையில் எழுதுவோம்.

பெயர்

பெயர் என்ற தலைப்பில் அப்துல் ரகுமான் எழுதிய வரிகள் பேசப்படும் வரிகளே…

“உன் அம்புகளிலிருந்து
தப்பிக்க
உன் கருணையையே
கவசமாக அணிந்திருக்கிறேன்
அளவற்ற அருளாளனே
என்னைக் காப்பாற்றி
உன் பெயரைக்
காப்பாற்றிக் கொள்”

இறைவனிடம் வேண்டிக் கேட்டுக் கொள்ளும் வரிகளாக
இவ்வரிகளை பார்க்க முடிகிறது.

தறிநாடா

தறிநாடா என்னும் தலைப்பில் அவர் எழுதிய வரிகள் அனைத்தும் அற்புதமான வரிகள்.

“உனக்கும் எனக்குமிடையே
தறிநாடாவைப்போல்
ஓடுகிறது ஒரு கவிதை”

ஆம் நம்மை இணைக்கிறது ஒரு கவிதை.

“கேரம்” இந்தக் கவிதையில்
வாழ்க்கை பளிச்சிடுகிறது.

“அடித்தது
யாரென்றும் தெரியாது
விழுந்தது எங்கென்றும் புரியாது…
பாவம்…மனிதர்கள்”

இச்சமூகத்தில் வாழும் மனிதர்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும் அற்புதக் கவிதையே கேரம்.

கவிதை எழுதுவது வரம்

மேலும் இத்தொகுப்பில் நான் மிகவும் ரசித்த கவிதைகளான
“கடவுளுக்கு ஒரு கடிதம்”
“நீயற்ற நீ”
“ஆயுத பூஜை”
“என் வெளிச்சம்”
“காணாமல் போதல்”
கவிதைகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு – paravaiyin pathai puthaga vimarsanam.

கவிதை எழுதுவது வரம் என்றால்… அப்துல் ரகுமான் அவர்கள் கவிதைகளுக்கே வரம் என்பேன் நான்… இந்த அகிலத்தில் அப்துல் ரகுமானின் பறவையின் பாதையில் நடந்து பாருங்கள்… உலகமும் புரியும் உள்ளமும் புரியும்… “பறவையின் பாதை” எளிய மனிதரையும் அதன் வழியிலேயே நடக்க வைக்கும் அற்புதப்பாதை. [நூல் தேவைக்கு -நேஷனல் பப்ளிஷர்ஸ் – 044-28343385]

– ம.சக்திவேலாயுதம், நெருப்பு விழிகள்

You may also like...

4 Responses

  1. Kavi devika says:

    அருமையான விமர்சனம்..படிக்க தூண்டும் ஆவல்.. வாழ்த்துகள்

  2. Rajakumari says:

    நன்றாக இருக்கிறது நூல் விமர்சனம்

  3. தி.வள்ளி says:

    அருமையான திறனாய்வு நூல் விமர்சனம்… ஒவ்வொரு கவிதையும் மிக விளக்கிய விதம் மிகவும் அருமை …பறவையின் பாதை கடவுளுக்கு ஒரு கடிதம் ..விளக்கம் மிக அருமை..சகோதரர் சக்தி வேலாயுதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  4. போற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் செய்தற்கரிய செயலாற்றல்.