அம்மா! என் அம்மா (குறுங்கதை)
“சேகர்..ராசாவ சாப்பிடக் கூப்பிடு! மணி பத்தாகப் போகுது! இன்னும் கட்சிக்காரங்க கூட பேசிகிட்டிருக்கான். வேலை எப்போதும் இருக்கும் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட வேணாமா..”கல்யாணி அம்மாள் ‘ராசா’ என்று குறிப்பிட்டது கட்சித் தலைவர் அறிவழகனை – sirukathai amma en amma
சேகர் சிரித்துக்கொண்டே அப்பாவை கூப்பிடப் போனான் 70 வயது அரசியல்வாதி அப்பா…. 90. வயது பாட்டிக்கு இன்னும் ராசாதான்.. பாட்டிக்குத் தான் அப்பா மேல எவ்வளவு பாசம். ஒரே மகன்ல்ல …
“சேகர்! எங்க போற? அம்மா ராஜி கேட்க “பாட்டி அப்பாவ கூப்பிடச் சொன்னாங்க… அப்பா இன்னும் காலை டிபன் சாப்பிடலம்மா..”
“எல்லாம் பசிச்சா சாப்பிட வருவாங்க …அங்க ஒரு கூட்டமே வெளியே நிக்குது …இந்த கொரோனா காலத்துல ஒருத்தரையும் உள்ளே விடாதீங்க ன்னு சொன்னா உங்க அப்பா கேட்க மாட்டேங்குறாரு .எப்ப பாரு கட்சிக்காரங்க வந்துட்டு போயிட்டு இருக்காங்க ..”
அம்மாவுக்கு அரசியல் அவ்வளவாக பிடிக்கவில்லை. அப்பாவோ கட்சி கட்சி என்று எப்போதும் ஒரு பரபரப்பு ….சுற்றி எப்போதும் பெரும் கூட்டம் … குடும்பத்திலிருந்து சற்று விலகி இருப்பது போல தோன்றும்…. சேகருக்கு அம்மாவின் பக்கமும் நியாயம் இருப்பது போல தோன்றும். அவளுக்கென்று எப்போதுமே அப்பா நேரம் ஒதுக்கியதில்லை .அதுவே அவளுக்கு அரசியல் பிடிக்காமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.ராஜியின் ஒரே ஆறுதல் சேகர் மட்டுமே … – sirukathai amma en amma
“சேகர் நீயாவது நிறைய படிச்சு… வேலைக்கு போ… பொண்டாட்டி, புள்ள, குடும்பம்னு சந்தோஷமாக இரு…அரசியல் நமக்கு வேணாம்” என்பாள்.
ஒருபக்கம் அப்பா கட்சி கட்சி என்று இருந்தால்… வீட்டுக்குள் வந்தால் ஆச்சி கொஞ்ச நேரம் கூட அப்பாவை பிரிய மாட்டாள். எப்போதும் சாப்பாடு வைப்பதிலிருந்து சகல காரியத்திற்கும் ஆச்சிதான்…அப்பாவுக்கும் அவர் அம்மா மேல கொள்ளைப் பிரியம்.கடைசியில் தன் அம்மாதான் பாவம் வீட்டுக்குள்ளும் அவளால் கணவனிடம் நெருங்க முடியாத ஒரு சூழல்.
சாப்பிட்டு விட்டு படுத்த அறிவழகன் …மாலையே சற்று சோர்வாக இருக்கிறது சொன்னார். காய்ச்சலும் உடல் சோர்வும் எழுந்திருக்க விடாமல் செய்தது …சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திரன், அறிவழகனின் நெருங்கிய நண்பர் என்பதால், “அறிவு! இப்போ இருக்கிற சூழ்நிலையில சாதாரண காய்ச்சலா எடுக்க முடியாது… சாயந்தரம் நம்ம அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வரச் சொல்றேன் எதுக்கு டெஸ்ட் பண்ணி பாத்துருவோம்”
“ஒன்னும் இல்லப்பா! லேசா காய்ச்சல்… ரெண்டு நாளாவே சோர்வாகத்தான் இருக்கு. நான் வீட்ல ஒன்னும் சொல்லல “
என்றார் .அடுத்த இரண்டு நாட்களும் பாட்டி அவரை விட்டு நகரவே இல்லை.
” பாட்டி! உங்களுக்கு வயசாயிடுச்சு! அப்பாக்கு என்ன காய்ச்சல்ன்னு தெரியல… அதனால நீங்க ஏதுக்கும் கொஞ்சம் அப்பாகிட்ட வராமல் இருங்க” என்று சேகர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பாட்டி கேட்கவில்லை.
டெஸ்ட் ரிசல்ட் வந்தபோது கொரோனா நோய்த்தொற்று உறுதியானது… அறிவழகனுக்கு லேசாக மூச்சு திணறலும் ஏற்பட… உடனடியாக நகரின் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டில் எல்லோருக்கும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்போது, பாட்டிக்கும் நோய் தொற்று இருப்பது தெரிய, அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் …
அம்மா ,மகன் இருவர் நிலைமையும் சற்று கவலைக்கிடமாக .. ராஜி அழுது ,அழுது ஓய்ந்து போனாள். 90 வயதில் இந்த நோய்த்தொற்றின் கடுமை தாங்க முடியாமல் கல்யாணி பாட்டி இறந்துபோக ..சேகரும்,, ராஜியும் ஸ்தம்பித்துப் போனார்கள் ..கட்சிக்காரர்கள் யாரையும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு ..கொரோனா விதிப்படி பாட்டியின் உடலை அடக்கம் செய்தார்கள்.
சேகர்,”பாட்டி பாவம்! மகன் மேல உயிர வைச்சிருந்தாங்க… அந்த மகன் கையால கொள்ளி போட முடியாம, இப்படி ஒரு சாவு என்று வருத்தப்பட்டான்..பாட்டி இறந்ததை அப்பாவிடம் சொல்ல முடியாத நிலை…தாய் இறந்தது தெரியாமல் அவர் அரை மயக்க நிலையில் உயிர்காக்கும் கருவிகளுடனிருக்க …
அடுத்து 20 நாட்கள் ஐசியூவில் உயிருக்கு போராடிய அறிவழகனுக்கு நோய்தொற்று எமனாய் முடிய… வீடு அதிர்ந்து போனது ..
ராஜி “அம்மாவே போதும்ன்னு வாழ்ந்துட்டு கடைசி வரைக்கும் என் கூட நல்லா வாழாம போயிட்டீங்களே! “என்று அழும்போது சேகருக்கு மனது கஷ்டமாக இருந்தது.
மகன் மேல் உயிராய் இருந்த பாட்டி மகனுக்கு முந்திக் கொண்டது. ..தாய் மேல் உயிராய் இருந்த அப்பா தாயின் இறப்பை அறியாமல் இறந்தது… என்ன ஒரு விந்தை என்று நினைத்தது சேகர் மனது…இவர்கள் தாய் மகன் பாசப் பிணைப்பில் தன் அம்மா இழந்தது தான் அதிகம் என்று தோன்றியது.
அந்த வீட்டில் பத்து நாள் காரியங்கள் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் முடிந்ததும், சேகர் உடனே தன் அம்மாவை கூட்டிக்கொண்டு ஊரில் இருக்கும் தன்னுடைய பூர்வீக வீட்டிற்கு கிளம்பினான்.கட்சிக்காரர்கள் …
“ஐயாவோட வாரிசாக நீங்க வரவேண்டும் தம்பி ” என்று வற்புறுத்த, கையெடுத்து பெரிதாக கும்பிட்டான் சேகர்..
“இனி என் அம்மாவோடு என்னோட நாட்களை நான் நிம்மதியாக கழிக்கணும். எனக்கு அரசியல் வேண்டாம் .இந்த ஊரும் வேண்டாம்…” என்று மனம் கனக்க கூறிவிட்டு, சரியான முடிவுதான் எடுத்திருக்கிறோம் என்ற நினைப்போடு அம்மாவை அணைத்தபடி நடந்தான்.
– தி.வள்ளி, திருநெல்வேலி
அருமை. 👏
கதை மிகவும் அருமை..
நெகிழ்ச்சியான கதை மேடம்.