மழலை கதைகள் – முயற்சி திருவினையாக்கும்
நீரோடையில் புதிய முயற்சியாக சிறுவர் கதைகளை அறிமுகம் செய்கிறோம். இனி கதை கேட்டு காத்திருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை சொல்லலாமே – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum
ஒரு ஊரில் அருண், வருண் என்ற இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். அருண் வயதில் வருணை விட மூன்று வயது மூத்தவன். இருவருமே மிகவும் துடிப்பாகவும், குறும்பாகவும், வேடிக்கையாகவும் விளையாடும் சிறுவர்கள். இவ்விருவரின் குறும்பு அவ்வூர் மக்களுக்கு புதியதல்ல – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum.
அன்று மழைக்கால விடுமுறை நாளானதால் இருவரும் வெளியே சாலையில் விளையாடக் கிளம்பினர். சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஏதாவது புதியதாக விளையாட இருவருமே நினைத்தனர். காரணம் மழை நேரத்தில் காகிதக் கப்பல் விட்டு அவர்கள் சலித்துப் போயினர். அப்பொழுது வருணின் கண்களுக்கு சாலை திருப்பத்தில் நின்று கொண்டிருந்த ஓர் பால் வண்டி புலப்பட்டது.
அதற்கு பக்கத்தில் பால் நிரப்பப்பட்ட இரண்டு கேன்கள் இருந்தன. வருண் அருணிடம் அதன் அருகில் சென்று பார்க்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினான். பால் நிறைந்த கேன்களை பார்த்த வருணின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. அருகில் இரண்டு தவளைகள் தண்ணீரில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. அவற்றை கையில் பிடித்த வருண் அருண் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் கேன்களின் மூடியைத் திறந்து ஒவ்வொரு கேனிலும் இரு தவளைகளையும்(ஒன்று வீதம் )போட்டு கேன்களை இறுக்கமாக மூடி விட்டான்.
தலைவிதி முடிந்து விட்டது
வயதில் மூத்தவனான அருணிற்கு வருணின் செயல் அறவே பிடிக்கவில்லை. இருந்தும் நண்பனை தடுக்க இயலவில்லை. ஒரு அரைமணிநேரம் இருவருமே தங்கள் செயலின் விளைவை அறியாமல் வேறு விளையாட்டில் ஏற்பட்ட ஈடுபாடால் அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர்.
குழந்தைகளே அந்த தவளைகளுக்கு என்ன நேர்ந்திருக்குமென அறிய ஆவலாக உள்ளதல்லவா? தவளையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமே! ஆனாலும் இரண்டு கேன்களும் இறுக்கமாக மூடியால் மூடப்பட்டு விட்டதால் அந்த தவளைகளைப் பற்றிய கவலை நம் மனதில் எழுகிறதல்லவா?
அழத் தொடங்கி விட்டான்
முதல் கேனில் உள்ள தவளையானது இரண்டாவது கேனில் உள்ள தவளையை விட சோம்பேறி அது இவ்வாறு சிந்தித்தது ‘ஆ’ இது என்ன சோதனை! தீடீரென என்னைச் சுற்றி இருள் சூழ்ந்து விட்டதே எனக்கு என்ன நேர்ந்தது சிறிது நேரத்தில் தன் சூழ்நிலையின் ஆபத்தை உணர்ந்தது. ஆனாலும் தன் சோம்பேறித் தனத்தால் தன்னால் ஆன முயற்சியை செய்ய தவறிவிட்டது. இந்த கடினமான மூடியை தன்னால் திறக்க முடியாது. இத்துடன் என் தலைவிதி முடிந்து விட்டது. நான் தப்ப இயலாது என்று நினைத்து விட்டது.
அதே நேரம் இரண்டாவது கேனில் இருந்த தவளையோ இருட்டைக் கண்டு அஞ்சவில்லை. என்னால் இந்த இறுக்கமான மூடியை திறந்தோ, ஓட்டை போட்டோ வெளியேற தான் முடியாது. ஆனால் கடவுள் அருளால் திரவத்தில் மூழ்காமல் நீந்த முடியுமே என்று நினைத்தது. தொடர்ந்து நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டே இருந்ததால் அதன் செயலானது மத்தால் பாலைக் கடைவது போல் ஆனதால் பாலிலிருந்து வெண்ணை திரண்டு வந்தது. அந்த வெண்ணையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டது.
மறந்தும் கூட மறுமுறை செய்யாதே
அதே சமயம் நம் கதாநாயகர்களான அருணும், வருணும் பாலில் போட்ட தவளைகளின் நினைவு வந்து அதே இடத்திற்கு திரும்பி வந்தனர். வருண் முதல் கேனின் மூடியைத் திறந்தான். அதற்குள் அந்த தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்தான். இரண்டாவது கேனின் மூடியை அருண் திறந்தான் உடனே அதிலிருந்து மூடி திறக்கப்படும் சத்தத்தைக் கேட்ட அத்தவளையானது வெளியே குதித்து ஓடியது. அதனை இருவருமே கண்டனர்.
உடனே அருண், வருணைப் பார்த்தான் வருணிற்கு தன் செயல் எவ்வளவு கொடுமையானது என புரிந்தது. தன்னால் ஓர் தவளை இறந்து விட்டதே என எண்ணி அழத் தொடங்கி விட்டான். அதே சமயம் அவனைவிட மூத்தவனான அருணிற்கு அந்த இரண்டாவது கேனிலிருந்து உயிர் தப்பிய தவளையின் விடாமுயற்சியும் அறிவாற்றலும் புரிந்தது. அவன் வருணைப் பார்த்து இரண்டாவது தவளையின் விடாமுயற்சியைப் பற்றி விளக்கமாகக் கூறி இது போன்ற கடுமையான செயலை மறந்தும் கூட மறுமுறை செய்யாதே என புத்திமதி கூறி தேற்றினான்.
பிள்ளைகளே இக் கதையிலிருந்து நாம் அறிவது என்ன? வருணைப் போன்று விளையாட்டாகக் கூட எந்த உயிரினத்திற்கும் நாம் தீங்கு விளைவிக்க கூடாது. அறியாமல் செய்த பிழையாதலால் கடவுள் வருணை மன்னிப்பாராக! மேலும் முயற்சி திருவினையாக்கும் என்பதும் நமக்கு இக் கதையிலிருந்து விளங்குகிறதல்லவா? எத்தகைய துன்பம் வந்தாலும், அந்த இரண்டாவது கேனிலிருந்த தவளை போல் நாம் தொடர்ந்து முயன்றால் இயலாதது என்பது எதுவும் இல்லை என்பதும் விடாமுயற்சிக்கான பலனை இறைவன் நமக்கு அருள்வார் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா!
குழந்தைகளே இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் முயற்சி இருந்தால் எந்த செயலையும் செய்ய முடியும். சோம்பேறியாக இருந்தால் வீழ்ந்து தான் போக வேண்டும் – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum.
– ஆண்டாள் பிரசன்னா, கோவை
அருமை அருமை… குழந்தைகளுக்கு நல்ல நீதி சொல்லும் கதை.தவளைகளுக்கு என்றாயிற்று என்று குழந்தைகளுக்கு என்ன நமக்கும் ஒரு ஆர்வம் வந்தது …அது கதாசிரியருக்கு கிடைத்த வெற்றி ..வாழ்த்துக்கள்
அருமை… கருத்தும் கதையும். வாழ்த்துகள்
நன்று.