நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool thiranaaivu

neerodai pen

தமிழ் மனங்கள் உலகமெல்லாம் மொழி உணர்வுகளின் பால் இணையம் வழியாகவும் புத்தம் புதிய மொழியின் நறுமணங்களுடன் கவித்துவமாக கவிதைகளை எழுதி வருகின்றனர். இது ஆரோக்கியமானதே என்று இளஞ்சேரல் அவர்கள் வாழ்த்துரை தந்திருக்கின்றார். மொழியின் தாய்ப்பறவை கவிதை என்று சொல்லியிருப்பதில் நெகிழ்கிறேன்.

இதற்கு சற்று நேர்மாறாக, கவிதை என்ற பெயரில் வந்து குவியும் காலமொன்றில் என்னைப் போன்ற கவிதை எனும் பிரமாண்டத்தைக் கண்டு அஞ்சி ஓடுவோரும் இதைப் போன்ற வாழ்த்துரைகள் எழுதும் சூழல் அறியா விபத்தென அவையடக்கமாகச் சொல்கிறார் பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள். உலகத்தில் கவிதை மட்டுமே இருந்து வருகிறது. கவிஞன் என்று ஒருவருமே இல்லை என்ற ஓஷோ சொன்ன உண்மையை நம்புவோமாக. வாசித்த சில, வாசிக்கத் தவறிய புத்தகங்களை விட தாய்ப்பாசமும், காதல் திரைப்படக் காட்சிகளுமே அதிகம் கவிதை எழுதத் தூண்டியதாக தன்னுரை தந்திருக்கின்றார் நீரோடை மகேஸ்.

கவிஞராக ஆவதற்கு பயிற்சியும் முயற்சியும் இருந்தாலும் தமிழின் பாலும் ஒரு அளவிட முடியாத காதலும் ஈடுபாடும் இருந்தேயாக வேண்டும். அவர்களுக்கு கவிதை வசப்படுகிறது. கவிஞர்களுக்கே அதீத காதலும் தன்தமிழ் என்ற உணர்வும் அதிகமாக இருக்கும். அதனை மெய்மைப்படுத்தி இருக்கின்றார் நீரோடை மகேஸ் என்று பதிப்புரை தந்திருக்கின்றார் பாவையர்மலர் ஆசிரியரும் பாவைமதி வெளியீட்டாளருமான
ப. வான்மதி அவர்கள்.

தியாகத்தாய்…

“எத்தனை நாள்
உன் பசியின்
முரண்பாடுகளில்
என் வயிற்றில்
குளிர்ச்சி!”
எத்தனை உண்மை வரிகள் இவை. பசியின் முரண்பாடுகளி் தன் வயிற்றில் குளிர்ச்சி என்பது சாலப் பொருத்தமான சொல்.

“பிறப்பையும் இறப்பையும் இணைக்கும்
கல்லறை கல்வெட்டின்
நாட்கள் சொல்லும்
கருவில் சுமந்து
அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது
சுமந்து கொண்டிருக்கிறேன்..”
ஆம்.! அன்னையின் நினைவுகளை என்று மறப்போம். தம் தாய்க்கு எழுதிய கவிதை வரிகளில் அவரது பாசம் தெரிகிறது.

அப்படியே,

“எதிர்பார்ப்பில்லா ஏணி!
சுயம்பு மணற்கேணி!”
என்று தவமாய் தவமிருந்து எனும்தலைப்பில் தந்தைமையை வணங்குகின்றார்.


நீரோடைபெண்..

“ஒற்றை சூரியன் மறைந்து
சிதறி ஆயிரம் சூரியனகளாக விண்மீன் கூட்டம்
என் வழி பாதைக்கு வட்டமிட்டு கண்ணே!”

நல்ல கற்பனையின் உச்ச வரிகள். சிதறி ஆயிரம் சூரியன்களாக என்பது திரையில் பார்ப்பது போன்ற கண்ணாடி உடைந்த பின்பு தெரியும் பிம்பாக தெரிகின்றது. அக்கவிதையிலேயே தொடர்ந்து

” கலங்கரை விளக்குகள் எல்லாம்
வான்நோக்கி வெளிச்சம் காட்டி
உன்னை அடையாளப் படுத்தும் பணியில்..”
வரிகளில் வானிற்கே கலங்கரை விளக்கொளியாய் வெளிச்சம் காட்டுகின்றார்.

“என் பேனா முனைப்பந்தின்
முற்றத்தின் கடைசி சொட்டு
மை தான்
இந்த கவிதைக்கு
இடைவெளி தர முடியும்”
ஆம். காதலுக்கு இடைவெளி தர நாம் யார்.?

பொக்கிஷமே..

“ஒவ்வொரு முறை பிரிவை
நீ நினைவூட்டிய போதும்
என் காதல் கருவறையின் வாயிற்கதவு
கல்லறையின்
நுழைவாயில் ஆனது”

இது ஊடலாக இருந்து மீண்டும் இணைந்து கொள்ளட்டும் எனத் தேற்றச் சொல்கிறது மனம். பிரிவென்னும் சொல்லை நான் புறக்கணிக்கிறேன்.

நீரோடைநிலா..

“என்னில்
நான் விதைத்த பூகம்பத்தை
உலகறியச் செய்யும் மழை நீ!
ஒரு முறை உன் தரிசனம்
காண விழையும் விரிசல் விழுந்த மண்..”
விதைத்த பூகம்பமாம்.. அதனால் விழையும் மழையாம். அதுவும் விரிசல் விழுந்த மண்ணில்.. நல்ல கற்பனையும் உவமையும்.


மரகதப்பெண்ணே..

“உறக்கங்களை உருக்குலைக்கிறாய்
தூக்கங்களை தொலைத்த
கண்களின் கருவளையம்
உச்சரிக்கும் உன்
பெயரை மட்டும்.”
கண்களின் கீழ் தூக்கமின்மையால் கருவளையம் தோன்றிடும். காதலின் மரண வலி அது.

“மண் பொம்மைகளுக்கு நடுவே
ஒரு மாய பொம்மை
விழிகளை துளைத்து மனதில் படி(ப்படியாக) இறங்குகிறாள்”
மண்பொம்மைக்கு நடுவே மாய பொம்மை. நல்ல உவமை.

“தாகம் தணித்து விட்டு
உயிரை குடித்து செல்கிறாள் பாசத்துளிகளாய்…
சாரலாய் வருடியும் ஏக்கத்தை
மிச்சம் வைத்து செல்கிறாள் இதயத்தில் துளிர்த்த தளிராய்…”
இதயத்தில் துளிர்க்கும் தளிர்தான் எப்போதுமே.

“பரிசலில் பயணிக்கிறாய் மீன்களுக்கு பொறாமை
நீரில்லாமல் வாடும் இரு மீன்கள்..” அவளின் கண்களுக்கான சொல் வெகு பொருத்தம்.


“இவையாவும்
இரவல் வாங்கிய
மண்பாண்ட குடிநீரல்ல
மனமென்னும் இதயக்கேணியில் உறிய நீரோடையூற்று..”

இதயக்கேணியில் ஊறிய நீரோடையூற்று என்பது தொட்டணைத்தூறும் மணற்கேணி எனும் குறளை நினைவூட்டுகிறது. இறைக்க, இறைக்க கேணி ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும்.


நான்வாழ்ந்தசொர்க்கபூமி..

“சாதிப்பிரிவினையை
சாக்கடையில் போட்ட
நிலாச்சோற்றுப் படையல்” நல்லதொரு வரிகள். பரந்து விரிந்த வானத்தில் நிலவின் ஒளிவீச்சில் சாதீயாவது.? மண்ணாவது.?

மைவிழிமொழியாள்…

“வாழ்வின் மிச்சங்களையாவது
எழுத்துகளின் இடைவெளிகளில் தொலைக்காமல்
நீ நீயாக
வாழ்ந்துவிடு”
எழுத்துகளின் இடைவெளி என்பது ஒற்றோ இல்லை வெற்றிடமோ. வாழ்ந்து கொள்வோமே.

ஜென்மங்கள்தாண்டியஉறவு…

“பயணச் சூழலில்
சிலநேரம்
பார்வைகளில் பயணிக்கும்
உனைப் பற்றிய
என் நினைவுகள்!
சிலநேரம் என்னில்
சங்கமித்த நீயெனும்
கற்பனைப் பாத்திரத்துடன்
உரையாடல்” – neerodai pen nool thiranaaivu
உண்மையில் நாம் இந்த சூழலை அனுபவித்து இருப்போம். பயணத்தில் மனதிற்கு பிடித்தமானவர்களின் சாயல் கண் முன்னே தோன்றி மறையும். உண்மையாக இருக்காது என்று மனம் சொன்னாலும் கண்கள் என்னவோ தேடத்தான் செய்யும். அப்படியே ஜன்னலோரம் கிடைத்தால் நினைவுகளின் தாலாட்டில் நாம் நம் மனதிற்குள்ளே உரையாடிச் செல்வோம்.


செல்லமகளே…

“மேகத்தை் திரித்து
காலணி செய்வேன்
மகளே!
நீ நடக்கும் தடங்களில்
சுடும் கற்கள் இருந்தால்…”

மகளைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும் என்று மகளிற்காக ஆனந்தயாழை மீட்டிய நா. முத்துகுமாரின் நினைவு நிழலோடியது இந்த வரிகளை வாசிக்கும் போது.

தாய், தந்தையரிடம் ஆரம்பித்து மனைவி, தமிழ்க்காதலி, மகள் மகன் என நம் கண் முன்னே உறவினை கவிதைகளாக்கி தமிழப்படையல் தந்திருக்கின்றார். அவர் பார்த்த திரைப்படங்கள், கேட்ட பாடல்களின் பாதிப்பு கவிதை வரிகளில் மிளிர்கிறது.

கணிதமும்,கணினி அறிவியும் கவிதைக்குத் தடையில்லை. தாய்மொழி தன்னை தந்தெடுத்துக் கொண்டதால் இது சாத்தியமாயிற்று என்று நிரூபித்திருக்கிறார். தமிழுக்கு நன்றி என்பது கவிஞனுக்கான நன்றி என்று பொருள் கொள்க வாசகர்களே என்று பதிப்புரையை நிறைவு செய்யும் அக்கா வான்மதியின் வார்த்தைகளால் நானும் நிறைவு செய்கிறேன். இன்னும் இன்னும் நிறைய, நிறைவான கவிதை படைக்க வாழ்த்துகள்.

பாவைமதிவெளியீடு,
முதற்பதிப்பு ஜனவரி 2021,
விலை ரூ 120,
பக்கங்கள் 98

– தாணப்பன் கதிர்

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    நூல் விமர்சனம் மிக அருமை…. வாழ்த்துகள் நீரோடை கவித்தென்றல் அவர்களுக்கு

  2. தி.வள்ளி says:

    அருமையான விமர்சனம்.. இன்னொரு கவிதை நூலை படித்தது போன்ற உணர்வு…கவிதைக்கு ஒரு கவிதையே விமர்சனமாயிற்று…கவிபொழிவின் சாரலாய் மகேஷ்..குளிர்மழையாய் சகோதரர் தாணப்பன் அவர்கள் ….இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐