அதிகாரம் - 102முகப்பு / Home
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
(1011) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
கலைஞர் மு. கருணாநிதி - ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
(1012) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
கலைஞர் மு. கருணாநிதி - உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
(1013) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
கலைஞர் மு. கருணாநிதி - உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
(1014) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நாணம் இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.
கலைஞர் மு. கருணாநிதி - நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
(1015) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
கலைஞர் மு. கருணாநிதி - தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
(1016) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
கலைஞர் மு. கருணாநிதி - பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
(1017) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
கலைஞர் மு. கருணாநிதி - நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
(1018) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
கலைஞர் மு. கருணாநிதி - வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
(1019) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
கலைஞர் மு. கருணாநிதி - கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
(1020) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
கலைஞர் மு. கருணாநிதி - உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை