திருக்குறள்

அதிகாரம் - 129முகப்பு / Home

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

(1281) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

கலைஞர் மு. கருணாநிதி - மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின்.

(1282) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

கலைஞர் மு. கருணாநிதி - பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

(1283) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

கலைஞர் மு. கருணாநிதி - என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

(1284) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

கலைஞர் மு. கருணாநிதி - ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

(1285) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

கலைஞர் மு. கருணாநிதி - கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

(1286) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

கலைஞர் மு. கருணாநிதி - அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

(1287) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?

கலைஞர் மு. கருணாநிதி - வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

(1288) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

கலைஞர் மு. கருணாநிதி - என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

(1289) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

கலைஞர் மு. கருணாநிதி - காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

(1290) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்

கலைஞர் மு. கருணாநிதி - விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்

Previous | Next