திருக்குறள்

அதிகாரம் - 130முகப்பு / Home

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

(1291) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

கலைஞர் மு. கருணாநிதி - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

(1292) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

பேராசிரியர் சாலமன் பாப்பையா - என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

கலைஞர் மு. கருணாநிதி - நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

(1293) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

கலைஞர் மு. கருணாநிதி - நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

(1294) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கலைஞர் மு. கருணாநிதி - நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

(1295) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

கலைஞர் மு. கருணாநிதி - என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

(1296) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

கலைஞர் மு. கருணாநிதி - காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

(1297) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

கலைஞர் மு. கருணாநிதி - அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

(1298) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

கலைஞர் மு. கருணாநிதி - பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

(1299) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

கலைஞர் மு. கருணாநிதி - துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

(1300) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

கலைஞர் மு. கருணாநிதி - நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

Previous | Next