அதிகாரம் - 132முகப்பு / Home
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
(1311) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
கலைஞர் மு. கருணாநிதி - பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
(1312) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)
கலைஞர் மு. கருணாநிதி - ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
(1313) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
கலைஞர் மு. கருணாநிதி - கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
(1314) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
கலைஞர் மு. கருணாநிதி - ``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
(1315) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
கலைஞர் மு. கருணாநிதி - ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
(1316) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.
கலைஞர் மு. கருணாநிதி - ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
(1317) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.
கலைஞர் மு. கருணாநிதி - தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
(1318) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
கலைஞர் மு. கருணாநிதி - ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
(1319) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
கலைஞர் மு. கருணாநிதி - நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(1320) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.
கலைஞர் மு. கருணாநிதி - ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்