அதிகாரம் - 15முகப்பு / Home
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
(141) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
(142) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
(143) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்
கலைஞர் மு. கருணாநிதி - நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
(144) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?
கலைஞர் மு. கருணாநிதி - பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
(145) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
கலைஞர் மு. கருணாநிதி - எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
(146) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
(147) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
(148) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்
கலைஞர் மு. கருணாநிதி - வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
(149) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
(150) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது
பேராசிரியர் சாலமன் பாப்பையா - அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
கலைஞர் மு. கருணாநிதி - பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்