அதிகாரம் - 87முகப்பு / Home
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
(861) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
கலைஞர் மு. கருணாநிதி - மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
(862) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?
கலைஞர் மு. கருணாநிதி - உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
(863) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
கலைஞர் மு. கருணாநிதி - அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
(864) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
கலைஞர் மு. கருணாநிதி - சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
(865) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
கலைஞர் மு. கருணாநிதி - நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
(866) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
கலைஞர் மு. கருணாநிதி - சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
(867) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.
கலைஞர் மு. கருணாநிதி - தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
(868) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
கலைஞர் மு. கருணாநிதி - குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
(869) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
கலைஞர் மு. கருணாநிதி - அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
(870) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.
கலைஞர் மு. கருணாநிதி - போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்