உறவுகளை வெல்வோம்

அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க வைத்துக் கொண்டிருந்தார்.

குழந்தை நன்றாக அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க வாட்ஸாப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜை அவர் கேட்க, எனக்கு அழும் ஒரு பெண் குரல் மட்டும் புரிந்தது. அதற்கு பிறகு தான் அவரை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன். ஏதோ நீண்ட பயணக் களைப்பில் இருப்பதாய் தெரிந்தது. அந்த குழந்தையின் பையில் INIYA LKG என்று எழுதியிருந்தது. அதைத்தவிர அவர்களிடம் வேறு எதுவும் இல்லை.முந்தைய நாள் பள்ளி முடிந்து குழந்தையை வீட்டுக்கு அழைத்துச்செல்லாமல் கோபித்துக்கொண்டு வந்திருக்கலாம் என யூகித்தேன்.. அடுத்த Whatsaap Voice Message இல் உறுதியானது.. காற்று அடித்ததால் வலது புறத்திலிருந்து இடது புற காதில் செய்தியை கேட்க எனக்கும் நன்றாக புரிந்தது, குழந்தையும் எழுந்தது.”எந்த கோவமா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம், எங்க இருக்கீங்க இனியா என்ன பண்ரா” (குழந்தை பெயர் மாற்றப்பட்டுள்ளது).”குழந்தை மேல அக்கறை கம்மியா இருந்தது தப்பு தான், உங்ககிட்டையும் பாசமா நடந்துக்கல, காரணம் சொன்னா உங்களுக்கு புரியாது, தயவு செஞ்சு கிளம்பி வாங்க”குழந்தையின் ஸ்கூல் பேக்கில் இருந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்க.. தாகம் தீர்ந்ததும் அக்குழந்தை சுற்றம் பற்றி யோசிக்காமல், தந்தையிடம் ஓயாமல் மழலை மொழியில் பேச துவங்கியது.

குழந்தையை ரசித்தவாறே பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். சட்டென பேச்சை நிறுத்திக்கொண்ட குழந்தை தந்தையின் மார்பில் சாய்ந்துகொண்டது.. நானும் அவரும் முயற்சித்தும் என்னிடம் பேசவே இல்லை.. குழந்தையை பேசவைக்கும் முயற்சியை விட்டுவிட்டு என்னிடம் பேச்சு கொடுக்க துவங்கினார். ஹாஸ்டலில் இருக்கும் முதல் குழந்தையை பார்க்க செல்வதாய், அண்ணனுக்காக தங்கை உண்டியலில் காசு சேர்த்து வைத்திருப்பதாக அதை அவளே நேரில் கொடுக்க வேண்டுமாம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக, நானும் நம்பியபடி தலையை ஆட்டிக்கொண்டே பயணித்தோம்.

சக பயணியிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை அதுவும் இவ்வளவு விளக்கம் தரவேண்டியதில்லை. பேச வேண்டிய நபரிடம் அமர்ந்து மனம் விட்டு பேசினாலே பாதி விரிசல்கள் எழாது.. பேசவேண்டிய இடத்தில் பேசாமல் ஒதுங்கிப் போவதும், பேசக் கூடாத நேரத்தில் வார்த்தைகளை விடுவதும் தவறு.. விட்டுக்கொடுத்து கேட்டுப்போனோர் எவரும் இல்லை. ஒரு மனிதனின் வாழ்நாளில் அதிகம் பயணிப்பது வாழ்க்கைத் துணையே.. அவர் மனைவியும் தன்னிலை விளக்கத்தை தந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

உறவுகளை வெல்வோம்
அன்பால்பொறுமையால்

– நீரோடை மகேஸ்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    மிக அருமையான கதை மனதை தொட்டது நல்ல நீதியும் கூட
    பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தியது மிக அருமை