கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்

மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்:

நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க சென்றால் இந்த எதார்த்த விவாதம் இருக்கும் தானே. அவரை பற்றி அறிந்ததும் அவரை பார்க்கலாம் என முடிவேடுத்த பிறகு எனக்குள் பல சிந்தனைகள். “அறம்” சிறுகதைகளில் வரும் யானை டாக்டர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றியும் டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல் பற்றியும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. நண்பரிடம் அந்த உன்னதமான ஆத்மாக்களை பற்றி பேசி கொண்டிருந்தேன்.

வ.உ.சி மைதானம் அருகே பேருந்தில் ஏறி சித்தாபுதூர் அருகே வந்தடைந்தோம். பேருந்து நிலையத்தில் இருந்து அவரின் மருத்துவமனை நோக்கி நகர்ந்தோம். ஆரம்பத்தில் 5 ருபாய்க்கு வைத்தியம் செய்தவர். சமீப காலமாக 20 ரூபாய் அங்கிருந்த மக்கள் கட்டாயப்படுத்தி கொடுத்து வந்துள்ளதை அறிந்திருந்தோம். ஒரு தெருவின் முனை திரும்பியதும் அங்கியிருந்து சற்று தொலைவில் சிலர் சேர்ந்து நின்று கொண்டிருந்தார்கள். அருகே சென்றதும் அது அவரின் மருத்துவமனை என அடையாளம் கண்டு கொண்டோம்.

சிறிய மருந்தகம் வைப்பதற்கான அளவே உள்ள இடம் போல் இருந்தது. உள்ளே பெரியவர்களும் இளைஞர்களுமாக பெஞ்சில் ஆறு பேர் உட்கார்ந்து இருந்தார்கள். உள்ளே இருப்பவர்களின் உடன் வந்தவர்களும் வைத்தியம் பார்க்க வந்த மற்றவர்களும வெளியே நின்று கொண்டிருந்தார்கள். அங்கே வழக்கமான டோக்கன் சீட்டு முறை இல்லாமல் இயல்பாக வரிசை அமைப்பு இருந்தது. நாங்கள் வரிசையை பார்க்கவில்லை. ஆனால் வரிசையில் இருப்பதாக உணர்ந்தோம்.

அவரை பார்க்க சற்று நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் நானும் நண்பரும் வேடிக்கை பார்த்த வண்ணம் பேசி கொண்டு இருந்தோம். எங்கள் அருகில் சிறு குழந்தை ஒன்று காய்ச்சலால் சோர்வுடன் தன் அம்மாவின் மடியில் சாய்ந்து உட்காந்திருந்தது. நாங்கள் குழந்தையை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தோம். நண்பர மகேஷ் தமிழில் நீரோடை.காம் (neerodai.com) எனும் வலைதள பத்திரிக்கையை நடத்தி கொண்டிருந்தார். மருத்துவரை பேட்டி எடுத்து அவரை பற்றி அதில் எழுதி வெளியிட வேண்டும் என ஆவல் அவருக்கு இருந்தது. நானும் அதை ஊக்குவிக்கும் வண்ணம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு வயதான அம்மா புது ஊசியை கையில் வைத்து கொண்டு மருத்துவர் அறைக்குள் உள்ளே நுழைந்தார். அந்த அம்மாவிற்கு மருந்து ஏற்றுவதற்காக மருத்துவர் வாங்க சொல்லியிருந்திருப்பார் என புரிந்து கொண்டோம்.

20 rupees doctor

இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு எங்கள் முறை வந்தது. என் நண்பர் முதலில் சென்றார்.
அடுத்தமுறை நான் அவர் அறைக்குள் நுழைந்தேன். உள்ளே மிக சிறிய அறை. ஒரு பழைய நாற்காலியில் அமர்ந்து இருந்தார். சற்று தடித்த கொஞ்சம் குள்ளமான உருவம். மிக எளிமையான உடையுடன் கண்ணாடி ஒன்றை அணிந்து இருந்திருந்தார். கைபேசியை பார்த்து கொண்டே என்னை திரும்பி பார்த்து வரவேற்றார். அவரிடம் வணங்கி விட்டு பேச ஆரம்பித்தேன். அவரிடம் இருந்த கைபேசி தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புது பொருளாக தென்படவில்லை. நான் நவீன மரு்த்துவமனையின் மருத்துவர்களின் அறை அமைப்பை பற்றி யோசித்தேன். பின்னர மருத்துவர் சமார்வெல் இதுபோல் ஒரு அறையில் தான் இரணியலில் தன் சொத்துக்களை துறந்துவிட்டு இருந்திருப்பார் என மனம் எண்ணியது. கிட்டத்தட்ட ஏழு நிமிடம் பேசிவிட்டு நான் வெளியே வந்தேன்.

வெளியே வந்தவுடன் நண்பர மகேஷ் என்னை ஒரு சிரிப்புடன் பார்த்துவிட்டு கிளம்பலாமா என தலையை ஆட்டி சைகை காட்டினார். நானும் சிரிப்புடனே வெளியே வந்து அவருடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்திற்கு எங்கள் முகத்தில் புன்னகை சொறிந்து கொண்டே இருந்தது. அது மருத்துவர் ஏற்படுத்திய விளைவு என அப்பட்டமாக தெரிந்தது.

ஆம், அது எந்தவோரு அறம் சார்ந்தவர்கள் ஏற்படுத்தும் விளைவு தான். அது ஒரு மன கொண்டாட்டம். நம் கற்பனை உருவத்தை நிஜத்தில் தரிசிக்கும் போது எழுவது. எதிர்பார்த்தது போல் மருந்துகளை அதிகம் தராமல் உணவு மற்றும் பிற அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்து அதில் திருத்தல்கள் சொன்னார். முக்கியமாக பயம் தான் நோய்க்கு மூல காரணமாக இருப்பதை உணர்த்தினார். கிட்டத்தட்ட நண்பருக்கும் இதே போல் தான் கூறி இருந்தார். அவரை பார்க்க செல்லும் போது நான் கூறியது இது தான். பணம் குறைவாக இருக்கும் என்பதை விட சிறந்த மருத்துவம் எதிர்பார்க்கலாம என்பது தான். பற்று அற்றவர்கள் அவர்கள் தொழில் அர்ப்பணிப்புடன் அக்கறையுடன் இருப்பது் எதார்த்தம் தானே.

சேவை பண்புடன் அர்ப்பணிப்புடன தன்னலமற்ற அறத்தின் உருவமாக அவர் விளங்குகிறார் என்பது தான் எங்களின் தரிசனம். அப்துல் கலாம் போல் இன்னொருவரின் மரணத்திற்கு ஊரே வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்ததை அவரின் மறைவு தினத்தில் (18/09/2016) பார்க்க முடிந்தது.அவர் ஆத்மாவின் ஆசிர்வாத்தில் நாம் பூரண நலம் பெற்று வாழ பிரார்த்திப்போம்.

பெயர் சொல்ல விரும்பாத எமது நண்பர்


பொறுப்பாகாமை

You may also like...