நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)
பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு
உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில்
பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
எதுகை மோனை வடிவத்தில் கவிதை
கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே
கோர்த்துக்கொண்டு புலம்புதடி
என் கைவிரல்கள்.
பிரபஞ்சம் தாண்டி நீ சென்றாலும் எழுத்துக்களால்
படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும்
என் நினைவுகள்.
பாவை உனக்கு, பல்சுவைக் காவியம்
செய்து பல்லக்கில் அனுப்பி வைத்தாலும்
உன் காதலை வெல்லும் பாக்கியம்
கிட்டாத சிற்பியாகவே இக்கவிஞன்.
உன்னை தேடிவந்த பயணங்களை
பக்கம் பக்கமாக பதிக்கிறேன் என்
நீரோடையில்.
அலை அலையாய் முயற்சித்தாலும்
கரையே உன்னை களவாட
முடியவில்லையே ?,.
உன்னை தேடிவந்து தொலைந்த போது
பாலைவன மணல் சரிவில் சிக்கித்தவிக்கும்
பட்டம் ஆகிறேன் .
சிறகடித்துப்பறக்கும் நிலையில் கூண்டில் அடைத்துவிட்டாய்,
சிறகைத் தரித்துவிட்டாய் ஊனப்பட்ட பறவையாகி,
ஊர்வன உயிரினமாகி தவிக்கிறேன்.
காலத்தை காட்டினாலும் கடிகாரக் கண்ணாடியிடம்
விடுதலை கிடைக்காத முள்ளாய் கட்டிப்போட்டதடி
உன் காதல் எதிர்ப்புகள்.
“காலம் பதில் சொல்லும்” என்று உலகறிந்த
வார்த்தையை அசைபோட்டு மௌனத்தில்
மூழ்குதடி நீரொடைப்பயணம்.
காதலை வாழவைப்போம் காதலர்களை வீழாமல் பார்த்துக்கொள்வோம்.
அனைவருக்கும் நீரோடை-மகேஸின் காதலர் தின வாழ்த்துகள்.
lovers day 2014 tamil poem kaathalar thina kavithai