நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil

நியாயமா இது நித்யா ?

வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில் வந்தாள்,
“அத்தை! முரளி வீட்டுக்குப் போகணும்னு சொன்னீங்களே! “

“நான் எங்க நித்யா சொன்னேன்? இப்ப எதுக்கு முரளி வீட்டுக்கு? அதுவும் இந்த மாதிரி சூழ்நிலைல… எல்லாரும் கொரானா பயத்துல இருக்கும் போது”

“அதனால என்ன அத்தை? முரளி என்ன தள்ளியா இருக்கார்… இதோ அரைமணிநேரம் தூரத்தில் தான் இருக்காரு..உங்க மகனே பத்திரமாக காரில கொண்டு போய் விட்டு விடுவார்.”

நித்யா பேசப்பேச, அப்பா அம்மா முகம் வாடி போவதை கவனித்தான் மகேஷ். இவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அப்பா, அம்மா மனம் நோக பேசுகிறாள் என நினைத்தான் மகேஷ்.

நித்யா வேலைக்கு கிளம்பிப் போய்விட்டாள். அப்பா, அம்மா அருகில் வந்து அமர்ந்த மகேஷ்,

“அம்மா! நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க! வேலை கொஞ்சம் அதிகமா இருக்கிறதால அலுப்புல பேசுறா.. டியூட்டிக்கும் போக வேண்டியிருக்குல “என்று சமாதானப் படுத்தினான்.

“இல்லப்பா! நாங்க உன் தம்பி வீட்டுக்குப் போறோம்… எங்கள கொண்டு விட்டுடு”

“அம்மா! சொன்னா கேளுங்க… முரளி வீடு சின்னது. பிள்ளைங்க ரெண்டும் ஸ்கூல் இல்லாததால வீட்டில இருக்காங்க… அங்க உங்களுக்கு வசதியா இருக்குமா?

“பரவாயில்லப்பா! கொஞ்ச நாள் அங்கேயே இருக்குறோம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!” என்றார் அப்பா பிடிவாதமாக .அப்பா, அம்மா மனம் வருத்தத்தில் இருப்பது புரிந்தது. வேறு வழியில்லாமல்,இருவரையும் தம்பி வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான் மகேஷ்.

மாலை நித்யா வீடு திரும்ப..” இப்ப உனக்கு சந்தோஷம்தானே நித்யா? வேலைக்கு ஆள் வராதபோதும், அவங்களால முடிஞ்ச உதவியை செஞ்சுகிட்டு தானே இருந்தாங்க. அவங்கள துரத்தி விட்டுட்டு நிம்மதியா இரு!”என்றான் கோபத்தோடு – covid short story tamil

“என்னங்க இது! புரியாம பேசுறீங்க! தினமும் ஹாஸ்பிடல் போக வேண்டியிருக்கு. எக்ஸ்போஷர் இருக்கிறதுனால,பெரியவங்க வீட்ல இருக்காங்க என்பதே ஒரு டென்ஷனா இருக்கு.அவங்க இங்கே இருக்கறதை விட முரளி வீட்ல இருக்கிறது பாதுகாப்பும் கூட .மேலும் எனக்கு எந்த நேரமும் கோவிட் டியூட்டி போடலாம். ரெண்டு வாரம் வீட்டில் இருக்க மாட்டேன். ஆளில்லாம அத்தை இந்த வீட்ல கஷ்டப்படுவாங்க.

அங்கே முரளி வீட்ல அமுதா வேலையை பாத்துக்குவா. அவங்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

ஒவ்வொரு நாளும் ஹாஸ்பிடல் போயிட்டு வரும்போது வயசானவங்க வீட்ல இருக்காங்கன்னு நினைப்பு ஓடிகிட்டே இருக்கு. இந்த விபரத்தை சொன்னா அவங்க முரளி வீட்டுக்கு போக மாட்டாங்க. நமக்கு உதவியாய் இருக்கணும்னு நினைப்பாங்க. அதாங்க கொஞ்சம் கடுமையாக பேசிட்டேன் பின்னால அவங்கள விஷயத்த சொல்லி சமாதானப்படுக்கலாம் ” என்றாள் டாக்டர் நித்யா.

அவளைப் புரிந்து கொள்ளாமல், தவறாக நினைத்து விட்டோமே என மனம் வருந்தினான் மகேஷ் .

தி.வள்ளி,
திருநெல்வேலி,

You may also like...

4 Responses

  1. Ushamuthuraman says:

    இன்றைய காலத்தை கண்முன்னே கொண்டு வந்த அருமையான கதை. வாழ்த்துக்கள்

  2. Priyaprabhu says:

    கதை நன்று.. 👌👌

  3. ஸ்டாலின் ஆண்டனி says:

    உறவுகள் பற்றிய சிறுகதை படித்து வெகு நாள் ஆயிற்று. படிக்க தூண்டும் எழுத்து நடை. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். மருமகளின் நல்ல நோக்கம் எனக்கு புரிந்து விட்டது… அந்த மாமியார் மாமானாருக்கு எப்போது புரியும்?? கொரொனா தான் பதில் சொல்லனும்.

  4. தி.வள்ளி says:

    சிறுகதையை வாசித்து ஊக்கமளித்த சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி …