என் மின்மினி தொடர்கதை (பாகம் – 79)


சுவாரசியமாக செல்லும் தொடர்கதை மின்மினிக்கு வாசகர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவுக்கு நன்றி !, ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-79

en minmini kathai paagam serial

En minmini thodar kadhai

சிறிது நேர அமைதிக்கு பின் நான் கிளம்புறேன். ரொம்ப நேரம் ஆச்சு என்று சொல்லிவிட்டு டீச்சர் விடைபெறவே அந்த இடம் மையானபூமி போல அமைதியால் நிறைந்தது…

முகிலும் நன்றாக தூங்கிபோக., ஈஸிசேரில் அமர்ந்தபடியே பிரஜினும் தன்னையே அறியாமல் தூங்கி போனான்.நள்ளிரவு கடந்து நேரம் நகர்ந்து கொண்டிருந்த அதே சமயம்… தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தமும்,பூனை அழும் சத்தமும் சேர்ந்து ஒரு வித்தியாசமான ஓலம் வீட்டின் வெளியே கேட்க.,தூங்கி கொண்டிருந்த பிரஜின் வெடுக்கென்று விழித்து கடிகாரத்தை பார்த்தான்…

நேரம் 1.05யினை கடக்க முறோட்டுக்ககொண்டிருந்தது.சுற்றிமுற்றி பார்த்தவனுக்கு மனதில் ஏதோ ஓர் சஞ்சலம்.

வீட்டின் கதவை தாழிடாமலேயே தூங்கிபோனதை அறிந்தவன் ஈஸிசேரில் இருந்து உடனடியாக எழுந்து கதவை அடைக்க முயன்றான்…

அவனால் அந்த கதவை தள்ளி அடைக்கவே முடியாத அளவுக்கு இறுக்கமாக இருந்தது… மழையால் ஒருவேளை மரக்கதவு ஊறியிருக்கும்., அதனால் தான் தாழ் போட முடியல என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே வெளியே நின்று ஊளையிட்டு கொண்டிருக்கும் நாயினை எதேச்சையாக உற்றுப்பார்த்தான்…

அவனுக்குள் இருந்த சஞ்சலம் இப்போது கொஞ்சம் பயம் கலந்த சஞ்சலமாகி மனதில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியது…

என்னவாக இருக்கும் என்று கதவை அடைக்கும் முயற்சியை தற்காலிகமாக விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தவனுக்கு மேலும் பயம் அதிகமானது…

வெளியே வாசலில் கிடந்த ஓர் ஒற்றைச்செருப்பில் ஒரு பூனை தனது தலையை வைத்து படுத்துக்கொண்டே வித்தியாசமான விதமாய் அழுதபடி ஒலியெழுப்ப., அதை பார்த்து நாய் ஊளையிட்டு கொண்டே இருந்த அதே சமயம் சு…சு…சு… என்ற சத்தம் கேட்கவே., அதுவரை வான்கிழிய சத்தமிட்ட பூனையும், நாயும் அந்த ஒற்றைச்செருப்பையே சுற்றி சுற்றி வந்து வாலை ஆட்டி மகிழ்ச்சியாக விளையாட தொடங்கியது…

இதை பார்த்து பிரமித்து உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது பிரஜினுக்கு…

சு…சு…என்று சொல்லியது யாராக இருக்கும் என்று சுற்றிமுற்றி பார்த்தான். கண்ணுக்கெட்டும் தூரம் வரை யாரும் இல்லை. மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டு ஒரு வித புல்லரிப்பில் பயந்து நிற்கும் அதே நேரத்தில் பின்னால் இருந்து ஏதோ ஒன்று சத்தமில்லாமல் ஓடி வந்து அவனது விரலை வேகமாய் பிடித்து வீட்டின் உள்ளே இழுக்க முயற்சிப்பது போலே தோன்ற வெடுக்கென்று கையை உதறிவிட்டு ஈஸிசேரில் இருந்து பதறி எழுந்தான் பிரஜின்…

முகம் எல்லாம் வியர்வை மழையாக பெருக்கெடுத்து போயிருந்தது. இப்பொழுது தான் நான் தூக்கத்தை விட்டு எழுந்தேனா???

…ச்சே முதலில் எழுந்தது போலே தோன்றியது,இவ்வளவு நேரம் நாம பார்த்த நிகழ்வுகள் எல்லாம் கனவா???.. கடவுளே என்று மனசுக்குள் நினைத்தபடி வீட்டின் வாசலை நோக்கி நடந்தான்…

கனவில் பார்த்தது போல கடிகாரம் சரியாக 1.05யினை காட்டி கொண்டிருக்க, பூனையும் நாயும் ஓலமிட்டு கொண்டிருக்க வாசல் கதவு திறந்தே கிடந்தது… வேகமாக விரைந்து சென்று கதவை அடைக்க முற்பட்டான். ஆனால் அங்கு அவன் கண்ட காட்சி கனவில் வந்ததை விடவே இன்னும் திகிலடைய செய்தது…

பாகம் 80ல் தொடரும்…

– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)

You may also like...