நாலடியார் (9) பிறன்மனை நயவாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – இல்லறவியல்

09. பிறன்மனை நயவாமை

செய்யுள் – 01

“அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்
நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம்
நம்பற்க நாண் உடையார்”
விளக்கம்
காமத்தினால் வரும் அச்சம் பெரிது. அந்த அச்சத்துடன் ஒப்பிடும்போது இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைக்கான தண்டனை வழங்க்கடும். எந்நாளும் நரக வேதனையை அடையக் கூடிய மிக பாவச் செயலாகும் அது. ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!

செய்யுள் – 02

“அறம் புகழ் கேண்மை பெருமை இந் நான்கும்
பிறன் தாரம் நச்சுவார் சேரா – பிறன் தாரம்
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று
அச்சத்தோடு இந் நாற் பொருள்”
விளக்கம்
புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவரிடத்தில் சேராது. மாறாக மகை, பழி, பாவம், அச்சம் ஆகிய நான்கும் வந்து சேரும்.

செய்யுள் – 03

“புக்க இடத்து அச்சம் போதரும் போது அச்சம்
துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமைக் காப்பு அச்சம்
எக் காலும் அச்சம் தருமால் எவன் கொலோ
உட்கான் பிறன் இல் புகல்”
விளக்கம்
பிறன் மனைவியை நாடி அவன் வீட்டிற்குள் புகும்போது அச்சம், திரும்பி வெளியே வரும் போது அச்சம், இன்பம் நுகரும் போது அச்சம், பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராத ஒருவன் பிறன் மனையை விரும்புவது என்ன பயன் கருதியோ?

செய்யுள் – 04

“காணின் குடிப் பழி ஆம் கையுறின் கால் குறையும்
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரயத்
துன்பம் பயந்தமால் துச்சாரி – நீ கண்ட
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு”
விளக்கம்
அயலார் கண்டால் தம் குலத்திற்கு பழிப்பாகும். கையில் அகப்பட்டால் கால் முறியும். ஆண்மையற்ற இந்த பிறன்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும். பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்.

செய்யுள் – 05

“செம்மை ஒன்று இன்றி சிறியார் இனத்தர் ஆய்
கொம்மை வரி முளையாள் தோள் மரீஇ – உம்மை
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே இம்மை
அலி ஆகி ஆடி உண்பார்”
விளக்கம்
சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளை உடையவளின் தோள்களில் சேர விரும்பி முற்பிறப்பில் தம் வலிமையால் பிறன் மனையிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மை உடையவராகி கூத்தாடி, உண்டு வாழ்வர்

செய்யுள் – 06

“பல்லார் அறியப் பறை அறைந்து நாள் கேட்டு
கல்யாணம் செய்து கடி புக்க – மெல் இயல்
காதல் மனையாளும் இல்லாளா என் ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு”
விளக்கம்
பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மை தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளை கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்?

செய்யுள் – 07

“அம்பல் அயல் எடுப்ப அஞ்சித் தமர் பரீஇ
வம்பலன் பெண் மரீஇ மைந்துற்று – நம்பும்
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலை நக்கியன்னது உடைத்து”
விளக்கம்
அயலார் பழித்துரைக்க, கற்றார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியை தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இயல்பு இல்லாத. மனத்தை உடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மை உடையது.

செய்யுள் – 08

“பரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா
உறவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே
விரவாருள் நாணுபடல் அஞ்சி யாதும்
உரையாது உள் ஆறிவிடும்”
விளக்கம்
காம நோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவரிடம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாதரிடம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியதிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறி விடும்.

செய்யுள் – 09

“அம்பும் அ னும் அவிர் கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறம் சுடும் – வெம்பிக்
வெற்றி மனத்தை சுடுதலால் காமம்
அவற்றினும் அஞ்சப்படும்” – naladiyar seiyul vilakkam-9
விளக்கம்
அம்பும், தீயும், ஒளி வீசும் கதிர்களை உடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்தி சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத் தக்கதாம்.

செய்யுள் – 10

“ஊருள் எழுந்த உறு கெழு செந் தீங்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் – நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்”
விளக்கம்
ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும். மலை மீமு ஏறி ஒளிந்து கொண்டாலும் அது சுட்டு எரிக்கும்!.

– கோமகன்

You may also like...