நாலடியார் (29) இன்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-29
பொருட்பால் – துன்பவியல்
29. இன்மை
செய்யுள் – 01
“அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை”
விளக்கம்: காவி தோய்த்த ஆடையை இடுப்பில் சுற்றி கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் பலராலும் மதிக்கப் படுவர். அவ்வாறன்றி உயிர் குடி பிறந்தாலும் ஒரு பொருளும் இல்லாதவர்உயிர்போன பிணத்தினும் இழிந்தவராக கருதப்படுவர்.
செய்யுள் – 02
“நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
யாரும் அறிவர் முகைநுட்பம் – தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து”
விளக்கம்: தண்ணீரை விட நெய் நுட்பமானது என்பர். அந்த நெய்யை விட புகை நுட்பமானது என யாவரும் அறிவர். ஆராய்ந்து பார்த்தால் இரத்தல் என்னும் துன்பத்தை உடையவன் அந்த புகை நுழைவதற்கு அரிய துவாரத்திலும் நுழைந்து செல்வான்.
செய்யுள் – 03
“கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம்ஙசெத்பொறறிஙவண்டினம் – கொல்லை
கலாஅற் கிளுகடியுங் கானக நாட
இலாஆஅர்க் கில்லை தமர்”
விளக்கம்: கல்லால் கிளிகளை ஓட்டுவதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பெரும் கற்களை உடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராத போது, சிவந்த புள்ளிகளை உடைய வண்டுகள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.
செய்யுள் – 04
“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே – வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்”
விளக்கம்: உயிர் நீங்கி பிணமானபோது அதை தின்ன காக்கைகள் கூடுவது போல, செல்வம் உடைய ஒருவனுக்கு அவனுக்கு தொண்டு செய்ய ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். ஆனால் அவனே வறுமையுற்று வண்டு போல பல இடங்களிலும் திரியும் போது ‘தீதில்லாமல் வாழ்கிறீரா?’ என வினவ இவ்வுலகில் யாரும் இல்லை.
செய்யுள் – 05
பிறந்த குலமாயும் பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவிங
கன்மேற்ஙகழூஉங்ஙகணமலை நன்னாட
இன்மை தழுவப்பட் டார்க்கு”
விளக்கம்: ஒலிக்கும் அருவிகள் கல் மேல் விழுந்து அதன் மாசு போகக் கழுவும் பெரிய மலைகளையுடைய நாட்டுக்கு மன்னனே! உலகில் வறுமையால் சூழப்பட்டவர்க்கு, அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்.பெரிய வல்லமை கெடும். சிறந்த கல்வியும் கெடும்.
செய்யுள் – 06
“உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான் உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று”
விளக்கம்: மிகுந்த பசியால் துன்பமெய்தி தன்னிடத்தில் விரும்பி வந்தவர்க்கு, உள்ளூரில் இருந்தும் ஒன்றும் கொடுக்க இயலாதவன், அங்கேயே இருந்து தனது வாழ்நாளை வீணாக கழித்து உயிர் விடாது வேறெந்த ஊருக்காவது போய் பிறர் வீட்டில் விருந்தாளியாக இருப்பதே நல்லது.
செய்யுள் – 07
“நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் – கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும்
அல்லல் அடையப் பட்டார்”
விளக்கம்: கூர்மையினால் முல்லை அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் பெற்றவர், தமது சிறந்த குணங்களாலேயே அல்லாமல் தம்மிடம் நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும் மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒரு சேர இழப்பர்.
செய்யுள் – 08
“இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் செட்று நிரைமனையிற் கைந்நீட்டிங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று”
விளக்கம்: வறுமை என்று ஏதாவது ஒரு பொருளை யாசித்து வருபவருக்கு உதவ முடியாமல் வறுமை நெறியிலே வாழ்வதை விட, நெடுந்தூரம் நடந்து சென்று வெளியூர்களில் வரிசையாக உள்ள வீடுகளில் இரந்து உண்ணும் வாழ்வே நலமாம்.
செய்யுள் – 09
“கடகய் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்ற வாழ்பவே,
துப்புரவு சென்றலந்தக் கால்”
விளக்கம்: அனுபவிக்கும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்ற போது முன்பு பொற்கடகம் அணிந்திருந்த கைகளாலே செடிகளை வளைத்து கீரைகளைப் பறித்து வேக வைத்து பனை யோலை குடைகளையே பாத்திரமாக கொண்டு உப்பில்லாத வெந்த அந்த கீரையை உண்டு மனவூக்கம் குன்றி துன்பத்துடன் வாழ்வர்.
செய்யுள் – 10
“ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம் – நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட
வாழாதார்க் கில்லை தமர்”
விளக்கம்: நீரையுடைய அருவிகள் ஒரு காலத்திலும் மாறாமல் விழுகின்ற சிறப்பினை உடைய மலை நாட்டு மன்னனே! நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம் பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்ல மாட்டா. அதுபோல பொருள் பெற்று வாழ்வதற்கு உறவினர் இல்லை – naladiyar seiyul vilakkam-29.
– கோமகன்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி …ஆகா எவ்வளவு அருமையாக சொன்ன சொல் ..நாலடியார் பாடல்களையும் ..சகோதரர் அளித்த விளக்கங்களையும் கேட்கும்போது புரிகிறது ..அருமை