நாலடியார் (36) கயமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36
பொருட்பால் – பகை இயல்
36. கயமை
செய்யுள் – 01
“ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்”
விளக்கம்: நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையவராயினும் தம் புலன்கள் அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால் புல்லறிவினை உடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல திரிந்து, குற்றம் நீங்கப் பெறார்.
செய்யுள் – 02
“செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை – வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது”
விளக்கம்: நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தன் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களை கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள் அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
செய்யுள் – 03
“கணமலை நன்னாட கண்ணின றொருவர்
குணனேயுஙெ கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்ற லியன்றதோ நா”
விளக்கம்: நெருங்கிய மலைகளை உடைய நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று அவரது குணங்களை கூறுதற்கு அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படியாக குற்றத்தையே எடுத்துக் கூறும் கயவரின் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் செய்யப்பட்டதோ!
செய்யுள் – 04
“கோடேந் தகவல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார் கூடிப்
புதுமெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்”
விளக்கம்: பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலை உடைய நற் குல மகளிர் விலை மகளிரை போல தம்மை ஒப்பனை செய்து கொள்ள அறியமாட்டார்கள். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல ஆனவருடன் கூடிக் கலந்து தமது பெண் தன்மை மேம்பட புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளை கவர்ந்து கொண்டு விலகி விடுவர்.
(கயவர் வேசியைப் போல வஞ்சித்து பொருள் கொள்வர் என்பது கருத்து)
செய்யுள் – 05
“தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர் அளிநீரார்க்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
உன்னாங்கு செய்வார்ப் பெறின்”
விளக்கம்: தளிர் மேலே நின்றாலும் தட்டினாலன்றி அத்தளிரை துளைக்காத உளி போல் இருப்பர். கயவர், கருணை இயல்புடையவருக்கு ஒர் உதவியும் செய்யார். தம்மைத் தாக்கி துன்புறுத்துபவர்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.
செய்யுள் – 06
“மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன் சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர் கயந்தன்னை
வைத்தை உள்ளி விடும்”
விளக்கம்: குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைத்து மகிழ்வான். உழவன் தனக்கு பயன்தரும் விலை நிலத்தை நினைத்து உள்ளம் உவப்பான்; சான்றோர் தனக்கு பிறர் செய்த உதவியை நினைத்து மகிழ்வர்; ஆனால் கயவனோ தன்னை ஒருவன் இகழ்ந்ததை நினைத்து பகை கொள்வான்.
செய்யுள் – 07
“ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர் கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்”
விளக்கம்: தமக்கு ஒரு நன்மை செய்யாதவர் தொடர்ந்து நூறு குற்றங்களை செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவருக்கு எழுநூறு நன்மைகளை செய்தாலும் தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடின், எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகி விடும்.
செய்யுள் – 08
“ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் – கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
செயிர்வேழ மாகுத லின்று”
விளக்கம்: வாள் போற்ற கண்ணை உடையவளே! பன்றியின் கொம்பிலே வயிரம் இழைத்த பூணினை பூட்டினாலும் அது யானையாகி விடாது. அதுபோல வறுமை உற்ற காலத்தும் நற்குடி பிறத்தவர்கள் செய்யும் உதவியினை, கயவர் தமக்கு செல்வம் உண்டான காலத்தும் செய்யார்.
செய்யுள் – 09
“இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் – தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்”
விளக்கம்: இன்று செல்வம் உடையவர் ஆவோம். இப்போது ஆவோம். இன்னும் சில நாட்களில் ஆவோம் என சிந்தித்து கொண்டே இருந்து, அப்படி சொல்வதிலே மகிழ்ந்து தாமரை இலைப் போல மாய்ந்தவர் பலராவார்.
செய்யுள் – 10
“நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும் – ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் லன்னா ருடைத்து”
விளக்கம்: நீரிலே தோன்றி பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைத்த பெரும் செல்வத்திலே இருந்தாலும் பாறையாகிய பெரிய கல் போன்றவர்களை இவ்வுலகம் பெற்றிருக்கிறது.
– மா கோமகன்