நாலடியார் (35) கீழ்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35
பொருட்பால் – பகை இயல்
35. கீழ்மை
செய்யுள் – 01
“கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்”
விளக்கம்: காலைப் பொழுதிலேயே நொய்யரிசியை வேண்டுமளவு போட்டாலும், குப்பையை கிளறுதலை விட்டு விடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற் பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலே முனைந்து செல்வான்.
செய்யுள் – 02
“காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம்ஙெனுரைப்பின் – கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து”
விளக்கம்: .உறுதியான ஒரு நூற் பொருளை கற்றுக் கொள்ள பெரியோரிடத்து காலம் தாழ்த்தாது போக வேண்டும் என்று ஒருவர் சொன்னால், கீழானவன், ‘தூங்க வேண்டும்’ என்று சொல்லி எழுந்து போவான் அல்லது வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்துச் செல்வான்.
செய்யுள் – 03
“பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர் – பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட
வற்றாம் ஒருநடை கீழ்”
விளக்கம்: விளங்கும் மலையருவிகளை உடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! மேலோர் மிக்க செல்வத்தை அடைந்தாலும் தம் ஒழுக்கத்தினிற்று சிறிதும் குன்றாமல் ஒரே சீரான நிலையில் இருப்பர். கீழோர் செல்வம் பெற்ற போது, தாம் முன்னர் மேற் கொண்டிருந்த ஒழுக்கத்திற்கு வேறாக நடந்து கொள்வர்.
செய்யுள் – 04
“தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனை
தெற்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு”
விளக்கம்: விளங்கும் மலையருவிகளை உடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! ஒருவன் செய்த உதவி தினை அளவை இருக்குமாயினும், சான்றோர் அதை பனையளவாக கருதி போற்றுவர். பனையளவு உதவி செய்தாலும்,நன்றி உணர்வில்லார், அதனை ஒரு உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.
செய்யுள் – 05
“பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்”
விளக்கம்: பொன் கலத்தில் இட்டு நல்ல உணவினை உண்பித்தாலும், நாய் பிறர் எச்சில் சோற்றை கண் கொட்டாமல் பார்த்திருக்கும். அதுபோல, கீழான ஒருவரை மதித்து எவ்வளவு தான் பெருமை செய்தாலும், அவனது செயல்கள், அப் பெருமை யினின்று முற்றிலும் வேறுபடும்.
செய்யுள் – 06
“சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் – எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனாவெண்ணி விடும்”
விளக்கம்: மேலோர் உலகமெங்கும் ஆணைச் சக்கரத்தை செலுத்தக் கூடிய அரச செல்வத்தை பெறினும் ஒருபோதும் வரம்பு கடந்த சொற்களை கூறார். ஆனால் எப்போதேனும் முந்திரி என்னும் சிறு தொகையுடன், காணி என்ற சிறு தொகை சேருமானால்ஒரு கீழ்மகன் தன்னை இந்திரனாக கருதி இறுமாந்திருப்பான்.
செய்யுள் – 07
“மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் ணெருப்புத்தன் காற்கேயாம்
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்”
விளக்கம்: குற்றமற்ற நல்ல பொன்னின் மீது மாட்சிமை பொருந்திய நவமணிகளை பதித்து செய்யப்பட்டதானாலும்செருப்பு காலில் அணிவதற்கே பயன்படும். அதுபோல கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும் கீழ்நிலையில் வைக்கதக்கவரேயன்றிமேல்நிலையில் வைக்க தகுதி ஆக மாட்டார்கள்.
செய்யுள் – 08
“கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், அடுத்தடுத்து
வேகம் உடையதாம், விறன்மலை நன்னாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்”
விளக்கம்: சிறந்த மலைகள் விளங்கும் நல்ல நாட்டை உடைய அரசனே! கீழ்மகன் கடுமையான சொற்களை சொல்ல வல்லவன்; யாரிடமும் இரக்கம் இல்லாதவன்; பிறர் துன்பம் கண்டு மகிழ்பவன்; அடிக்கடி சினம் கொள்பவன்; எங்கும் திரிபவன்; யாரையும் பழிப்பவன்;
செய்யுள் – 09
“பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர் விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப
எள்ளுவர் கீழா யவர்”
விளக்கம்: தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மலிந்து, ஒலிக்கும் கடலினது குளர்ச்சி பொருந்திய. கரையையுடைய நாட்டு வேந்தனே! ஒருவர் தன் பின்னே நின்றால்’இவர்கள் பல நாள் பழக்கம் உள்ளவர்கள்’ என மேலோர் அவர்களிடம் இனியராய் இருப்பர். ஆனால் கீழ்மக்களோ அப்படி நிற்பவர்களை விரும்பாது பழிப்பர்.
செய்யுள் – 10
“கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை – ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்”
விளக்கம்: மன்னனே கேட்பாயாக! நாள்தோறும் அறுக்க தக்க புல்லை அறுத்து தின்பதற்கு கொடுத்தாலும் சிறிய எருதுகள் பெரிய வண்டியை இழுக்க மாட்டா. அதுபோல செல்வம் உடையவர்கள் ஆனாலும் கீழ் மக்கள், அவர்கள் செய்யும் காரியத்தால், இவர்கள் கீழ்மக்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
– மா கோமகன்