நாலடியார் (23) நட்பிற் பிழை பொறுத்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-23

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – நட்பியல்

23. நட்பிற் பிழை பொறுத்தல்

செய்யுள் – 01

“நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதல் பூவிற்கும் உண்டு”
விளக்கம்: யாவரும் விரும்பும் நெல்லுக்கு உமியாகி குற்றம் உண்டு. தண்ணீருக்கு நுரையாகிய புற்றம் உண்டு; பூவிற்கு புறவிதழாகிய குற்றம் உண்டு. ஆதலால் ‘இவர் நல்லவர்’ என்று மிகவும் விரும்பி நண்பராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பின் கெட்ட குணமுடையவராக தோன்றினாலும், அவர்தம் குற்றங்களை பிறர் அறியாமல் மறைத்து அவரை நட்பினராகவே மதிக்க வேண்டும்.


செய்யுள் – 02

“செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்ப செயினும்லபொறுப்பரே
தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு”
விளக்கம்: தண்ணீர், அடைக்குந்தோறும் கரையினை உடைத்துக்கொண்டே இருப்பினும் அந்த நல்ல நீருடன் யாரும் சினம் கொள்ளார். அதனை விரும்பி வாழ்பவர் மீண்டும் அந்த நீரை அணை கட்டி தடுப்பர். அதுபோல நாம் விரும்பி நல்லவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்மனம் வெறுக்கத்தக்க பிழைகளைச் செய்தாலும் சான்றோர் அவற்றை பொறுத்துக் கொள்வார்.


செய்யுள் – 03

“இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ நிறங்கோங்
குருவவண் டார்க்கு முயர்வரை நாட
ஒருவர் பொறையிருவர் நட்பு”
விளக்கம்: பொன்னிறமான கோங்க மலரில் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசனே! ஒருவருடைய பொறுமையினால் இருவருடைய நட்பு வளரும். ஆதலால் நண்பர் மிகவும் தீயனவற்றைச் செய்தாலும் அதனை பொறுத்துக் கொள்ளுதல் தகுதியான செயல் அல்லவா?


செய்யுள் – 04

“மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுவதற்கு மூட்டிய தீ”
விளக்கம்: மடித்து விழும் அலைகள் கொணர்ந்து குவித்த ஒளி பொருந்திய முத்துக்களை, மிகுந்த வேகமுள்ள கப்பல்களை கரையிலே அலையச் செய்கின்ற கடற்கரையை உடைய வேந்தனே! கைவிடுதற்கரிய நண்பர்கள் நற்குணம் இல்லாதவர்கள் ஆனால் அவர்கள் தம் நெஞ்சை சுடுவதற்காக நம்மாளே மூட்டப்பட்ட தீயாவர்.


செய்யுள் – 05

“இன்னா செயினும் விடற்பால ரல்லாரை
பொன்னாக போற்றிக் கொளல்வேண்டும் – பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்”
விளக்கம்: பொன்னுடன் நல்ல வீட்டையும் சுட்டெரிக்கும் நெருப்பை உணவு படைக்க ஒவ்வோரு நாளும் வீட்டில் அதனை உண்டாக்கி போற்றுகிறோம். அதுபோல இடையிடையே துன்பங்களைச் செய்தாலும் கைவிடுதற்கரிய நண்பர்களை பொன் போல நினைத்து மேலாக கொள்ள வேண்டும்.


செய்யுள் – 06

“இன்னா செய்யினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ
கணகுத்திற் றென்றதங் கை”
விளக்கம்: அடைதற்கரிய வானளவு உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! கண்ணை குத்தி விட்டது என்பதற்காக யாராவது தன் கைகளில் உள்ள விரல்களை வெட்டி எறிவார்களா? அதுபோல துன்பங்களைச் செய்தாலும் அரிய நண்பர்களை விலக்கி வடுதல் தகுதியாகுமா? ஆகாது

செய்யுள் – 07

“இலங்குநீர்த் தண்சேர்ப்ப இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை”
விளக்கம்: விளங்கும் குளிர் கடற்கரையை உடைய நாட்டின் அரசனே! நண்பன் தீயனவற்றைச் செய்தாலும் சான்றோர் அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்பு செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரை விட தாழ்ந்தவராவார்.


செய்யுள் – 08

“ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் – காதல்
கழுமியார் செய்த கறல்கருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று””
விளக்கம்: ஒலிக்கும் மலை அருவிகளை உடைய நாட்டுக்கு அரசனே! அயலார் செய்த தீங்கு மிகவும் கொடியதானாலும் இது விதி வசத்தால் நேர்ந்தது என நினைத்தால் அதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது. அங்ஙனமிருக்க அன்பு மிகுந்தவர் உரிமையால் செய்த தீவினை நெஞ்சில் நின்றுவிடாது.


செய்யுள் – 09

“தமரென்று தாங்கொள்ள பட்டவர் தம்மைத்
நமரன்மை தாமறிந்தா ராயின் அவரைத்
தமரினும் நன்கு மதித்து தமரன்மை
தம்முள் அடக்கிக கொளல்”
விளக்கம்: தம் நண்பர் என்று தம்மால் ஏற்றுக் கொள்ளபட்டவர் பின்னர் தம் நண்பராவதற்கு உரிய தன்மை இல்லாதவர் என்று உணர்ந்தார்களே ஆனால், அப்போதும் நண்பராக கருதியே அவரது நற்பண்பில்லாத தன்மையை தன் உள்ளத்திலேயே இருத்திக் கொள்ள வேண்டும்.


செய்யுள் – 10

“குற்றமும் ஏனை குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் – நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக”
விளக்கம்: ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு அவனது குற்றத்தை ஆராய்ந்து திரிந்தால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நண்பனின் குற்றத்தை வெளிப்படையாக தூற்றுபவன் என்பதால் நரகத்தை சென்று அடைவானாக – naladiyar seiyul vilakkam-23.

– கோமகன்

You may also like...