கவிதை தொகுப்பு 57

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 57

kavithai thoguppu 26

சுதந்திர தின கவிதை

சுதந்திரக்காற்றை
சுகமாக
சுவாசிக்கக்கூட முடியாமல்
“முகத்திரைகளிட்டு” திரியும்
இந்நாட்களில்
வாழ்த்துகள் சொல்லமுடியா துயர்கள் தான்
இன்று நிகழ்கிறதோ…….

இல்லையில்லை என்றாலும் ஏதோ ஓர் மனக்குமுறல்…

நம் உள்மனதின் ஏங்குதலும்,
அனைவரின்
வேண்டுதல்களும்
இந்நொடியினில் இதுவாகத்தான் இருந்திருக்கும்…..

எதுவென நான் சொல்லாமலே சிலருக்கு புரிந்திருக்கும்……

என்றோ நிறைவேறும் எல்லாம்…

முகமூடிகளை அவிழ்த்தெரியும் நாளும் ஓர் நாள் வரும்
என்று மனதை
தேற்றிச்சொல்லும்
ஒவ்வொருவரின்

“சுதந்திர தின வாழ்த்து”களின்
சுகமான
சப்தம் தான் ஏனோ
நம்மை உணர்ச்சிப்பெருக்கில்
தள்ளிவிட
கவலைகளை தள்ளிவைத்து
ஆர்ப்பரித்து மீண்டு
அலைகடல் போலே எழுகிறோம்….

– அர்ஜுன் பாரதி


அது ஓர் கார் காலம்!

ஆதவனுக்கும் இன்று அலுப்புக் காய்ச்சலோ!
அதனால்தான் இன்னும் வரவில்லையோ!
எந்திரித்து வந்து மெல்ல எட்டிப் பார்க்க!

இடிகள் இடித்துக் கொள்ளும்
இரைச்சல் எதுவும் இல்லை!
ஒளிவாள் கொண்டு வானைப்
பிளக்கும் மின்னல்கள் இல்லை!

அழகிய மேகங்களின் வேகத் தேரோட்டம்
அதன்பின் பூமிநோக்கி வந்தடையும் மாலையாய்
தொடுக்க முடியாத தண்ணீர் பூக்களின் அர்ச்சனை!

இனம்புரியா ஈர்ப்புவிசை ஒன்று உள்ளிருந்து
வீட்டின்வாசல் நோக்கித் தள்ளிட, எதிர்வீட்டு
மாடியில் நனைந்தபடி மெல்லிய நாட்டியம்
காட்டும் அழகிய புறாக்களின் தரிசனம்!

மேகம் தான்கொண்டிருந்த வார்த்தைகள்
யாவையும் கொட்டித் தீர்த்திட, அதன்பின்
மௌன மொழியில் குளிர்ந்த காற்று வந்து
இதமாய் தலைக்கோத, கடிகாரத்தில் மணியோ
நண்பகலைக் காட்ட, ஆதவனின் அமைதிப் பிரவேசம்!

மெல்ல மெல்ல எழுந்து ஒளிப்பார்வை பூமியெங்கும்
பரவி படர்ந்து வர, மாலை பொழுதுக்குமுன்
அங்கு ஓர் அழகிய போர் ஒப்பந்தம்!

மேகக்க்கூட்டங்களின் அசுர அணிவகுப்பு
அதன்பின் நடந்தேறும் ஒளியும் ஒலியும்
இம்முறை மேகத்திடம் இருந்து கொஞ்சம்
வன்மையான வார்த்தைகளும் வந்து விழுகின்றன!

காற்று கொஞ்சம் கத்தி பேசினால்
காதை கொஞ்சம் கட்டிக் கொள்ளலாம்!
ஆனால் ஆர்பரிக்கும் அர்த்தம்புரியா வேகஇசைக்கு
ஆடுகிறது வீட்டின் மேற்கூரையும் நிலைகுலைந்தபடி!

வீசிய சூறாவளியும் காணாது அடங்கி விட்டது!
பெய்த மழையும் இங்கு தணிந்து விட்டது!
வீதியில் குடைகள் எல்லாம் மடங்கி விட்டது!
சுட்ட வெயிலும் பனியால் குளிர்ந்து விட்டது!
சூரியனும் மேற்கில் போய் மறைந்து விட்டது!
அந்தியும் இரவின் வருகைக்காக ஒதுங்கி விட்டது!
வானமும் தன்மேல் கருப்பு போர்வை விரித்து விட்டது!
அம்புலியும் அதன்மேல் அழகாய் ஒட்டி விட்டது!
ஆறுவால் மின்மினியும் விட்டு விட்டு ஒளிர்ந்து விட்டது!
போன மின்சாரம் மட்டும் எங்கோ போய் நின்று விட்டது!

நா. பாலா சரவணாதேவி, வத்தலக்குண்டு


அவள் கூந்தல்

யாழை மீட்டுகிறேன்
நரம்புகள் அறுந்து விழுகிறது
இருந்தாலும் யாழை மீட்டுகிறேன்
உன் கூந்தல் களைந்து
அதில் விழும்
இழையைக் கொண்டு…………..

– மோகன்ராஜ் த


விலைமகளின்
கூந்தலில்
ஏற தகுதியுள்ள
மல்லிகையே..!
விதவையின் கூந்தலில்
ஏற ஏன் ஓரவஞ்சனை??…..

– விசு


மகாகவியே…
மாசற்ற பாரதியே…
கொடும் பசி -எனை
கொன்றிடுமோ?

உனை மென்றேன்…
உன் எழுத்தினை
தின்றேன்…

கழுத்து வரை
நிறைத்ததென்னை…
வைராக்கியம்.!!!

உணர்ந்தேன்…
உணர்வு யாதெனில்
நீ…
வார்த்தையல்ல..

வாழ்க்கையின்
நாயகனே…

நரைகூடி
கிழப்பருவமெய்தும்
முன்னே…

சிறை மீளும்- ஓர்
சரித்திரம்…
என் பதாகைகளை
தாங்கி….

ஆழ்வார் ச.இசக்கி


இதுவும் காதலின் வெளிப்பாடுதானோ!

வெளிச்சம் வந்து தன்னை
காண்கின்ற வேளைதனில் மட்டுமே
காட்சிகளைக் காண்கின்ற இந்தக் கண்கள்!

ஒலிஅலைகள் வந்து தன்னை
சேருகின்ற வேளைதனில் மட்டுமே
சத்தங்களைக் கேட்கின்ற இந்தச் செவிகள்!

காற்று வந்து தன்னை
தொடுகின்ற வேளைதனில் மட்டுமே
சுவாசத்தை ஏற்கின்ற இந்த நாசி!

நாபிக்கமலம் இங்கு நாதம்
தாங்குகின்ற வேளைதனில் மட்டுமே
ராகங்களை வெளிப்படுத்துகின்ற இந்த வாய்!

உயிர் இங்கு உறங்காது உறையாது
உள்ளிருக்கும் வேளைதனில் மட்டுமே
குருதிக்கு மாரத்தான் நடத்தும் இந்த இதயம்!

தென்றல் வந்து தன்னை
வருடுகின்ற வேளைதனில் மட்டுமே
தானாக எட்டிப் பார்க்கின்ற இந்தக் கூந்தல்!

காலத்தின் பதிவுகளை உயிரது உடலில்
உள்ளிருக்கும் வேளைதனில் மட்டுமே
நினைவுகளாய் புதிவுசெய்கின்ற இந்த மூளை!

தண்ணீர் வந்து தன்னை
தாண்டிச் செல்கின்ற வேளைதனில் மட்டுமே
தணிந்து போகின்ற இந்தத் தாகம்!

மூளை இங்குத் தன்னை
நினைக்கின்ற வேளைதனில் மட்டுமே
நினைத்ததைச் செய்கின்ற இந்தத் தேகம்!

இவையெல்லாம் ஒப்பந்தக் கட்டுப்பாடா
இல்லை கொண்ட காதலின் வெளிப்பாடா! – kavithai thoguppu 57

– நா. பாலா சரவணாதேவி, வத்தலக்குண்டு

You may also like...

1 Response

  1. வீ.ராஜ்குமார் says:

    சகோதரி நா.பாலா சரவணாதேவி அவர்களின் கவிதைகள் அற்புதம்!
    ‘அது ஓர் கார்காலம்’ கவிதையில் பொழிந்த, ‘ஒளிவாள், மேகங்களின் வேகத் தேரோட்டம், தண்ணீர் பூக்கள்’ போன்ற படிமச் சொற்கள் இதமான சாரலாய்த் தூறி கவிதைக்கு அணி செய்கின்றன! வாழ்த்துகள்! 👏