கவிதை போட்டி – கலந்துகொண்டவை சில பாகம் – 1

முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti 1.

kavithai potti 1

கற்பனை

இவனுக்கு சிறகுகள் இல்லை
இவன் தொடாத சிகரங்கள் இல்லை

எதிர்காலத்தின் ஏணி இவன்
முதிர்காலத்திலும் மூத்தவன் இவன்

துக்கத்திலும் தூங்காதவன்
தூக்கத்திலும் உறங்காதவன்

இவன் கணிப்பொறியின் மூலவன்
கண்ணியரை கவரும் ஆதவன்

கவியும் காவியமும்
தினம் நிகழ்துபவன்
“கற்பனை” இல்லாதவன்
பூமியில் வாழாதவன்..!

மணி சரவணன், செங்கல்பட்டு


என்ன காலம் இது?

வளர்ச்சி தான் அடைந்து விட்டோம்…
வறுமை ஒழிந்த பாடில்லை…
என்ன காலம் இது?

பகுத்தறிவு தான் பெற்று விட்டோம்…
மூடநம்பிக்கை ஒழிந்த பாடில்லை…
என்ன காலம் இது?

மருத்துவம் தான் பெருகி விட்டது…
நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை…
என்ன காலம் இது?

அன்பு தான் வாழ்க்கை என்கிறார்கள்….
அனாதை இல்லங்கள் முடக்கப் படவில்லை….
என்ன காலம் இது?

மனிதன் தான் பெருகி விட்டான்..
மனித நேயம் தென்பட வில்லை..
என்ன காலம் இது?

– பிரியாநாராயணன், கடலூர்


தோழமையே தோரணம் :

தோள் கொடுத்து உதவும் குணம் !
தோழனுக்கு மட்டுமே உரியது !
கவலைகளை துறந்த வண்ணம் !
கன்னியத்தோடு பழகும் எண்ணம்!
வாழ்வுக்கு இலக்கணம் கொடுத்து !
உயர்வுக்கு வழிகாட்டியாக இருந்து !
நட்பின் மூலம் தொடரும் உறவு !
நாளைய சந்ததியிடமும்
தொடர்ந்திடுமே !
தொடர்ந்து வரும் காலம் என்றும் !
தோரணமாய் தோழனுக்கு
உதாரணமாய் !
வாழ்ந்திடுமே …!!!

– கவிஞர் வேல்


மகளின் ஏக்கம்

நிலாச்சோறு சாப்பிட ஆசைப்பட்டேன்.
உன் கையால உருட்டிவிட ஆசைப்பட்டேன்.
அந்த பெளர்ணமி நிலவும் வந்திருச்சி;
என் வீட்டு பெளர்ணமி உன்ன காங்கலையே!
நிலவு இருக்கு நீ இல்லையேம்மா!
நிலவை! வாங்கியார நீயும் ஆகாசத்துக்கு!
போயிட்டியாம்மா?
பெத்தப்புள்ள பசிச்சிருக்கேன்
என் பசியும் உனக்கு தெரியலையா?
என் பசிபோக்க பால் சோறும் உனக்கு அங்க கிடைக்கலையா!
பால் சோறு வேண்டாம்,
நீ கொடுக்கும் கஞ்சி காய்ச்சி வெச்சிருக்கேன்
என் கூட சேர்ந்து குடிக்க வாரீயாம்மா!
முத்தத்தில் நின்னு காத்திருக்கேன்;
முத்தமாவது! தந்துட்டு போறீயாம்மா?

– கவிஞர் சுவேதன்


தமிழர் வாழ்வு சிறக்கவே தை வாசல் திறக்கட்டும்

ஒவ்வொரு ஆண்டும் தை பிறக்கிறது
ஒவ்வொரு விதத்தில் வழியும் பிறக்கிறது

ஒன்றையும் உணர்ந்திராத தமிழர்கள்
மயக்கத்தில் இருக்கின்றார்

கற்பனைக் காட்சிகளைக்
கண்டே மனம் லயிக்கின்றார்
கடைந்தெடுத்த பொய்யிலே
மெய்மறந்து கிடக்கின்றார்

ஜனநாயகம் பேசியே
பணநாயகம் வளர்க்கும்
அரசியல்வாதிகளிடம்
அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்

புறவழியில்
பிற மொழிகளைத் திணிக்கும்

மண்ணின் கலைகளை
திரைமறைவில் புதைக்கும்

கல்வியில் அரசியலில்
உரிமைகளை பறிக்கும்
கயவர்கள் முன்

மண்புழு போல் நெளிகின்றார்

ஊழல் பெருச்சாளிகளை
அரியணையில் அமர்த்தி
உணர்விழந்து வாழ்கின்றோம்

இயற்கை வளங்களைக்
கொள்ளையடித்து
வேளாண்மை முறைகளை
வேரோடு அழிக்கின்றார்

வாய்க்கரிசித் தேவைக்கும்
வடநாட்டில் கையேந்தும்
நிலை வரும்முன் தமிழர்கள்
விழித்தெழ வேண்டும்

மாற்றத்தை பிரதிபலிக்கும்
மறத்தமிழர் கொண்டாடிய

தை பிறந்தால் வழி பிறக்கட்டும்
தமிழர் தாம் உணரட்டும்

வாக்குகள் விலைக்கு விற்பதை
இனி
வருங்காலத்தில் செய்வதில்லை

போக்குகளற்ற நடிகர்களை
இனி
போற்றிப் புகழ்ந்து திரிவதில்லை

ஆட்சியில் வேலைவாய்ப்பில்
இனி
அந்நியர் தலையீடு அனுமதிப்பதில்லை

கல்வியில் தாய்மொழி ஏற்போம்
கண்டடைந்த கலைகளைக் கண்போல் காப்போம்

வேளாண்மை முறைபடுத்தி
இயற்கை விவசாயம் பரவச் செய்வோம்

நம் முன்னோர்கள் வழிநின்று
முழுமூச்சாய் அதைக் கொண்டு

இயற்கை வாழ்வுதனை
இயன்றவரை பேணிடுவோம்

இனிய வாழ்வை தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம்

வீரமும் விவேகமும்
விளைவித்த தமிழர் நாம்
மானமும் மரியாதையும்
மாண்புடன் அடைந்து வாழ்ந்தவர் நாம்

ஆனைகட்டிப் போரடித்து
அனைவருக்கும்
சோறு படைத்தோம்

விழுந்து கிடப்பது வேதனையாகும்
விழித்தெழுவது ஒன்றே நம் கடமையாகும்

தமிழர் என்றொரு இனம்
இழக்காது ஒருபோதும் தன்மானம்

மயக்கம் தெளிந்து மறுபடியும்
மறுமலர்ச்சி காண வேண்டும்

இந்தத்
தை வாசல் திறக்கட்டும் – kavithai potti 1

தரணியில்
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்…!

– ஜாகீர் உசேன் கோவை

You may also like...

3 Responses

  1. சைல்ஸ் அகமது says:

    மிகவும் அருமையான கவிதைகள்
    வாழ்த்துகிறேன் கவிபுனைந்தவர்களை,

  2. தி.வள்ளி says:

    கவிதைகள் அனைத்தும் அருமை ..கவிஞர்களுக்கு பாராட்டுக்கள் ..

  3. N.shanmugapriya says:

    அனைத்து கவிதைகளும் சிறப்பாக உள்ளது…வாழ்த்துக்கள்…💐💐