வெளிச்சம் சிறுகதை

நிபந்தனையுடன் கூடிய கண்டிப்பு , நிபந்தையனையற்ற பாசத்தின் வெளிப்பாடு பற்றி விளக்கும் ப்ரியா பிரபு அவர்களின் சிறுகதை – velicham tamil story

velicham tamil story

பூஜையறையிலிருந்து சுப்ரபாதம் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.. ஊதுவத்தியின் வாசமும்.. பூக்களின் வாசமும் நாசியை நிறைத்தது. கையிலிருந்த நியூஸ்பேப்பரில் கவனம் செல்லவில்லை..மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை ராகவனுக்கு..

உள்ளே கிச்சனில் மருமகள் உதயா கோபமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

‘ ச்சே.. இந்த வீட்டில் எதுதான் சரியா இருக்கு.. எல்லாத்தையும் நானேதான் பார்க்கணுமா.. வேலை செய்யறவங்க கூட ஏதோ விருந்துக்கு வர மாதிரிதான் வராங்க.. அதுக்குள்ளே நானே எல்லா வேலையும் முடிச்சிருவேன் போல இருக்கு.. ஏம்மா.. இன்னும் அவங்க வரலையா..என்றான் அவரின் மகன் ரவி.

எங்க.. எல்லா வேலையும் முக்காவாசி நானே முடிச்சிடறேன் அதுக்கப்புறம்தான் வராங்க.. டென்ஷன் ஆகுதுங்க நான் ஆபீஸ் கிளம்ப வேண்டாமா.? சரி.. சரி நான் ஏதும் ஹெல்ப் பண்ணனுமா சொல்லு.. என்றான் ரவி.

முன்பெல்லாம் மருமகள் உதயாவின் குரல் எப்படி இருக்கும் என்றுகூட தெரியாது.. மிகவும் மென்மையானவள்.அதுவும் அவரின் மனைவி சாரதா இருக்கும்வரை அதிர்ந்து கூட பேசமாட்டாள். காலையில் ஆபீஸ் கிளம்புவது மட்டுமே அவளது வேலையாய் இருக்கும். ஆனால் சாரதாவின் மறைவு அவளைக் கொஞ்சம் மாற்றிவிட்டது எனலாம். பொறுப்புகளும்., கடமைகளும் கூடும்போது டென்ஷன் ஆவது இயல்புதானே.. அதிலும் உதயா எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பாள்.அவளால் வேலை செய்ய வரும் வசந்தாவின் சின்ன குறைகளையும் தாங்கிக் கொள்ள முடியாது..

அதுவும் வசந்தா லேட்டாக வந்து விட்டாள் என்றால் கேட்கவே வேண்டாம் மிகவும் கோபப்பட்டு விடுவாள்.. அதிலும் வசந்தாவிற்கு இப்பொழுது கண்பார்வை வேறு கொஞ்சம் மங்கிக் கொண்டு வருகிறது.. போனவாரம் கண் மருத்துவமனையில் காண்பித்ததில் வேறு கண்ணாடி மாற்றச் சொன்னார்கள் என்றாள்.. அந்த சீட்டும் அவரிடம்தான் இருக்கிறது..

அடடா ஷெல்பில் வைத்தது மறந்து விட்டதே எப்படி மறந்து போனேன் இன்று எப்படியும் வாங்கிக் கொடுத்து விட வேண்டும்.. தனக்குள் முடிவு செய்து கொண்டார். இப்படித்தான் இரண்டு நாட்கள் முன்பு காபி கலக்கும் போது டிகாஷனை கப்பில் விடுவதற்கு பதில் கீழே ஊற்றி விட்டாள் அவ்வளவுதான் உதயா மிகவும் கோபப்பட்டு விட்டாள் கண்கலங்கி நின்ற வசந்தாவைப் பார்க்கையில் வருத்தமாக இருந்தது.

இனிமையான பொழுதாக இருக்கும்

உதயா கொஞ்சம் அமைதியாக சொல்லியிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. கண்கலங்கிய வசந்தாவைப் பார்ப்பதற்குகூட நேரம் இல்லை உதயாவிற்கு. வசந்தா தூரத்து உறவில் அவருக்கு தங்கை முறை.. கணவனின் மரணத்திற்குப் பின் இந்த மாதிரி வீட்டு வேலைகள் செய்தே தன் ஒரே மகனை படிக்க வைக்கிறாள். இங்கே வேலை செய்ய ஆரம்பித்தும் கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்கள் இருக்கும்..

சாரதா அவளை வேலை செய்ய வருபவள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.. குடும்பத்தில் ஒருத்தியாய்தான் நினைப்பாள். இப்போது அந்த அளவுக்கு கரிசனம் காட்ட யாருமில்லை. என்னவோ இன்று அவள் இன்னும் வரக்காணோம்.. பேரன் அருண் எழுந்து வந்துவிட்டான் அவனை மகன் ரவி குளிக்க வைத்துவிடுவான்.. இவர் அவனை யூனிபார்ம் போட்டு ரெடி பண்ணி விடுவார். அதேபோல் மாலையிலும் அவனை ரெடி பண்ணி டியூஷன் அழைத்துச் செல்வதும் பின்பு அழைத்து வருவதும் அவரே செய்வார். அது ஒன்றே இனிமையான பொழுதாக இருக்கும் அவருக்கு.

அவன் பேச்சு சத்தம் கேட்டவுடன் பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்தார்.
தாத்தா.. குட்மார்னிங்..
குட்மார்னிங்.. கண்ணா..
அதற்குள் காலிங் பெல் ஒலிக்கவே கதவைத் திறந்தார்.
அங்கே வசந்தாதான்.. அண்ணா கொஞ்சம் லேட்டாயிடுச்சி என்றாள் படபடப்பாக..

அவர் மௌனமாக உள்ளே பார்த்தார். உதயா இன்று என்ன சத்தம் போடப்போகிறாளோ அவருக்கே கொஞ்சம் கவலையாய் இருந்தது.
வசந்தா கொஞ்சம் பயந்தவாறே உள்ளே சென்றாள். உதயா அவளை கடிந்து கொள்ளும் சத்தம் கேட்டது. மௌனமாய் அருணை தயார் செய்தார். வசந்தாவைப் பார்த்த அருண் அவர் காதில் ‘தாத்தா இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றான்.

உதயாம்மா எப்படி இது

சும்மா இருப்பா என்றார்.. சலிப்புடன்.
சற்று நேரத்தில் உதயாவும்.. ரவியும் உடை மாற்றி வெளியே வந்தனர்.
உதயா தன் வாட்ச்சைப் பார்த்தவாறே..
அருண் கண்ணா என்று அழைத்தாள்.
அவளின் குறிப்பறிந்து அருண் பெட்ரூமிற்குள் ஓடி ஒரு கிப்ட் பாக்சை எடுத்து வந்தான். அவர் குழப்பமாக பார்த்தார்.

அம்மாவிடம் கொடுத்துவிட்டு வசந்தா பாட்டி.. வசந்தா பாட்டி என்று சத்தமாக அழைத்தான்.
அவனின் குரல் கேட்டு ஈரக்கையை புடவையில் துடைத்தவாறே வெளியே வந்தாள் வசந்தா.
இந்தாங்க.. ஹாப்பி பர்த்டே பாட்டி என்று கிப்டை அவளிடம் கொடுத்தான்.
குழப்பமும்.. தயக்கமுமாக உதயாவைப் பார்த்தாள்.
ஹாப்பி பர்த்டேமா என்று புன்னகைத்தாள். பிரிச்சுப் பாருங்க என்றாள்.
கண்கள் கலங்க அதைப் பிரித்தாள் வசந்தா. உள்ளே அழகான பெட்டியில் கண்கண்ணாடியும் அவளின் மருத்துவச் சீட்டும் இருந்தது.
கண்கள் கலங்க திகைத்து நின்றாள் வசந்தா. உதயாம்மா எப்படி இது.. இது என்று தடுமாறினாள்.

அது ஒண்ணுமில்லம்மா ஷெல்பில் உங்க கண்ணாடி சீட்டு பார்த்தேன்.. உங்களுக்கும் கண்ணாடி போடாம சிரமமா இருக்குதுல்ல.. அதான் வாங்கி கொடுக்கணும்னு நினைச்சேன்..அது மட்டும் இல்லை அதில் உங்க பிறந்த தேதியும் போட்டிருந்ததா அதான் வாங்கி கிப்ட் மாதிரி கொடுத்தாச்சு என்று புன்னகைத்தாள்.

பேச்சு வராமல் கண்கள் கலங்கி கைகளை கூப்பி நன்றி சொல்லப்போனவளை சட்டென்று அவளின் கைகளை பற்றிக்கொண்டாள் உதயா..
இங்கே பாருங்கம்மா வேலையில் கண்டிப்பா இருப்பேன்தான்.. இது கருணைம்மா.. என்னால் முடிஞ்ச உதவி சந்தோசமா ஏத்துக்கங்க என்றாள்.
வசந்தாவின் கண்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இப்போது என் மனதில் உதயா விஸ்வரூபமாய் நிறைந்து நின்றாள்.

– ப்ரியா பிரபு, நெல்லை

You may also like...

12 Responses

 1. Soraiyur Rangarajan says:

  ஆஹா நல்ல கதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

 2. Jayanthi Sridhar says:

  நல்ல அருமையான கதை. சக மனிதர்களை நேசிக்கும் குணம் மிகவும் உயர்ந்தது.

 3. நிர்மலா says:

  அருமை அருமை.

  Simply superb. எளிமையான நடை.
  இன்றைய பெண்களின் ஆரவாரமற்ற வெளிப்பாடு.

 4. R SRINIVASAN says:

  அற்புதம். மனித நேயம் இயல்பாய் வெளிப்படுகிறது வாழ்த்துகள்

 5. Anuradha Muthuraman says:

  Very nice. Practical difficulty of udhaya and her kindness is well portrayed.

 6. Mageshbabu N Mageshbabu N says:

  Good

 7. Kaleeswari says:

  Very nice..Heart touching story..i like very much…

 8. Renu says:

  வெளிச்சம் சிறுகதை அருமை. உதயா கதாபாத்திரம் சிறப்பு. வேலையில் கண்டிப்பும் மனதில் பாசமும் மனதை நிறைவடையச் செய்தது.

 9. தி.வள்ளி says:

  அருமையான, எதார்த்தமான, நெகிழ்வான கதை . நடை அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி!

 10. Parvathy says:

  Super akka

 11. Priyaprabhu says:

  வாழ்த்திய அனைவருக்கும் மனம்நிறை நன்றிகள்..❤

 12. Nirmala Devi says:

  அருமையான கதை… தொடரட்டும் உங்கள் பணி… வாழ்த்துக்கள்