ஒரே ஜாதி (கொரானா கால கதை)
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் வழங்கிய மனதை வருடும் கொரோனா கால நடைமுறை சிறு கதை – tamil kathai korona kalam
ராணி ரோட்டையே சுற்றி, சுற்றி வந்தது. மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள். வாகன போக்குவரத்து இல்லாத சூழல். அதுக்கு ரொம்பவும் பிடித்து தான் போனது. சுதந்திரமாக விரட்டுவார் யாருமின்றி சுற்றி சுற்றி வந்தது.
ஜனனியின் ஞாபகம்
ஆனால் இரண்டு நாட்களிலேயே வயிறு பசியில் வாட ஆரம்பித்தது.குப்பைத் தொட்டியை நோக்கி போனது ராணி.குப்பைத்தொட்டி காய்ந்துபோய் குப்பைகள் இன்றி கிடந்தது.கொஞ்சம் தள்ளி ரவுண்டானா பக்கம் போனால் அங்கே நிறைய சிறு ஓட்டல்கள், டீக்கடைகள் எல்லாம் இருக்கும். கடைக்காரர்கள் எல்லோருமே அன்பாக சாதமோ, வடையோ, இட்லியோ ஏதாவது ஒன்று மீந்ததை போடுவார்கள்.
பசியில் கால்கள் தள்ளாட … ரவுண்டானாவுக்கு போனது.அங்கும் கடைகள் அடைக்கப்பட்டு, மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது. ராணிக்கு கண்கள் இருண்டது. ஜனனியின் ஞாபகம் வந்தது..
ஜனனி மருத்துவ கல்லூரி மாணவி.ரோட்டில் அனாதையாக கிடந்த நாய்குட்டியை தூக்கி வந்து, தன் வீட்டின் அருகில் திறந்த காலி மனையில் வைத்து போஷித்து வந்தாள்.அதற்கு ராணி என்று பெயர் வைத்ததும் அவள் தான். தினமும் ராணியை வாஞ்சையோடு பார்த்துவிட்டு அதன் அருகில் இருக்கும் கிண்ணத்தில் பாலை ஊற்றுவாள்.
ராணியைப் பற்றி மறந்தே போனான்
இன்னொரு தட்டில் உடைத்த பிஸ்கட்டையும் ரொட்டியையும் போடுவாள்.காலை ஒரு முறை மாலை ஒரு முறை எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வந்து பார்க்க தவறுவதில்லை. மற்ற நேரத்தில் அவள் எங்காவது வெளியூர் போனால்,அருகே துணி தேய்த்துக் கொண்டிருக்கும் முருகேசன் கவனித்துக்கொள்வான்.
ஜனனி முருகேசனிடம்,” அண்ணா! நான் இன்னைக்கு சென்னை போகிறேன். வர ஒரு வாரம் ஆகும்.ராணியை பார்த்துக்கோங்க! பால்காரர் கிட்ட சொல்லி இருக்கேன். தினமும் கொஞ்சம் பால் வாங்கி ஊத்திடுங்க” என்றாள்.
“ஆகட்டும்மா! நான் பார்த்துக்குறேன்” என்றான் முருகேசன், சிரிப்போடு. ராணியிடம் அவனும் தனிப் பிரியம்.
ராணிக்கும் சாப்பாடு
ஜனனி ஊருக்கு போன இரண்டு நாளிலேயே நிலைமை தலைகீழாக மாறிப் போனது. கொரோனாவால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஜனனியால் நினைத்தபடி சென்னையிலிருந்து வரமுடியாமல் போனது. முருகேசனுக்கு வேலைக்கு வர முடியவில்லை. வந்தாலும் யார் வீட்டிற்கு போய் துணி வாங்க முடியும்? பிழைப்பு போன நிலையில் கவலைகள் சூழ்ந்துகொள்ள, ராணியைப் பற்றி மறந்தே போனான்.
ஓரிரு நாட்கள் அக்கம்பக்கத்தார் பரிதாபப்பட்டு ஏதாவது தந்தனர். அவரவர் கவலை அவரவர்க்கு. ராணியைப் பற்றி கவலைப்பட யாருக்கும் நேரம் இல்லாமல் போனது. ராணிக்கும் சாப்பாடு கிடைப்பது அரிதாகி போனது.
சாப்பாடும், தண்ணியும்
அலைந்து பசியில் களைத்துப் போன ராணி, சோர்ந்து போய் அங்கேயே நடைமேடையில் படுத்தது. அங்கே ஏற்கனவே அழுக்கு உடையில் ஒரு வயதான மனிதர் படுத்திருந்தார். “வா..வா..நீயும் என் ஜாதிதான்! வந்து படுத்துக்கோ!” என்று சிரித்தார்.
பைக்கில் அங்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவன்” டேய்! கொஞ்சம் நிறுத்து!”என்று கூற, பைக் நின்றது,” பெரியவரே!” என்று கூப்பிட அந்த அழுக்கு உடை மனிதர் ஏறிட்டானர்.” இந்தாங்க! இந்த கவரில் சாப்பாடும், தண்ணியும் இருக்கு.சாப்பிடுங்க!” என்று சாப்பாடு பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் கையில் கொடுத்தனர்.
பொட்டலத்தை பிரித்தவர், ராணியை பார்த்து,” ஏய் இங்கே வா” என்றார். அது இருக்கும் நிலையைப் பார்த்து, தண்ணீர் பாட்டிலைத் திறந்து அதன் வாயில் தண்ணீரை ஊற்றி விட்டு, அருகில் கிடந்த ஒரு பெரிய இலையில் பாதி சாப்பாட்டை எடுத்து வைத்தார்.
ராணி தாகம் தீர தண்ணீர் குடித்தபின், பசியோடு உணவை உண்டது. நன்றியுடன் அவரைப் பார்த்தது”.பசியில நீயும் நானும் ஒரே ஜாதி தான்…அனாதை ஜாதி.. இந்த மாதிரி சில புண்ணியவான்கள் இருக்குறாக. அவுக புண்ணியத்துல நாம உசுரு பொழைச்சுப் போகும்” என்று சொல்லி கடகடவென சிரித்தார். ராணியும் அதை ஆமோதிப்பது போல வாலை நன்றியுடன் ஆட்டியது.
– தி.வள்ளி
( அசாதாரண லாக்டவுன் நிலையிலும் தெருவோர மனிதர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த சில நல்ல ஜீவன்களுக்கு இக்கதை சமர்ப்பணம்.இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ) – tamil kathai korona kalam
அருமையான கதை.. மனம் நெகிழ்ந்தது..👌
நல்ல உணர்வுபூர்வமான கதை.அருமை
வள்ளி அம்மா அவர்களுக்கு என்
பாராட்டுகள். இன்னும் உங்கள் எழுத்துப்
பணி வளரட்டும்.