நாலடியார் (22) நட்பாராய்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-22

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – நட்பியல்

22. நட்பாராய்தல்

செய்யுள் – 01

“கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்
மதுர மிலாளர் தொடர்பு”
விளக்கம்: நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்தி விருந்து கரும்பை தின்பது போலாம். எக்காலத்தும் நன்மை இல்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கி தின்பது போலும் தன்மையுடையதாகும்.

செய்யுள் – 02

“இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பர்
நறபுடை கொண்டமை யல்லது – பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிவிரியும் பூங்குன்ற நாட
மனமறிய பட்டதொன் றன்று”
விளக்கம்: பொன்னை கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுவதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவரின் உயர் குடிப்பிறப்பை நோக்கி, இவர் இடையில் மாறமாட்டார் என்னும் நம்பிக்கையால் நட்பு கொள்வதே அல்லாமல் பிறருடைய மனநிலையை அறிந்து நட்பு கொள்வது என்பதில்லை.

செய்யுள் – 03

“யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறித்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யாத வால்குழைக்கும் நாய்”
விளக்கம்: யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போல இழிவு தன்மை உடையவராயினும் அவரது நட்பை விரும்பி கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்!. ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவனருகே செல்லும்.

செய்யுள் – 04

“பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் – பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ தன்நெஞ்சத்
தாரோ டியாத்த தொடர்பு”
விளக்கம்: பலநாள் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனதுடன் பொருத்தமில்லாதாரோடு அறிவுடையார் சேர மாட்டார்கள். அங்ஙனமின்றி தம் நெஞ்சம் பிணுத்தாரோடு கொண்ட நட்பினை தம்மை விட்டு பலநாட்கள் விலகியிருந்தார்ககள் என்பதற்காக அவர்களை விடுவார்களோ?

செய்யுள் – 05

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி – தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்த்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்”
விளக்கம்: கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டி பின்பு சுருங்கும் தன்மை உடையவரை விரும்புவாரும் இல்லை; நட்பு செய்வாரும் இல்லை.

செய்யுள் – 06

“கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு”
விளக்கம்: நட்புத் தன்மையில் கடையானவர் நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க உதவும் பாக்கு மரம் போல நாள்தோறும் உதவி செய்தால் தான் பயன்படுவர். இடையானவர் விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம் போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர். தொன்மைத் தொடர்பு பாராட்டும் தன்மையுடைய தலையானவர், விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றி பிறகு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர்.

செய்யுள் – 07

“கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் – விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்”
விளக்கம்: அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் நண்பரிடமிருந்து பெற்றால் அஃது அமிழ்தமாகும். ஆனால் சீரிய தாளிப்பினை உடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும் அன்பில்லாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின் அஃது எட்டிக் காயை தின்பது போலாம்.

செய்யுள் – 08

“நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்தானுஞ் சென்று கொளல்வேண்டும் செய்வினைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு”
விளக்கம்: நாயுன் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல நெருக்கம் உள்ளவராக இருந்தாலும் ஈயின் காலளவாயுனும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது ஆதலால் வயலை விளையும்படி செய்கின்ற வாய்காலை போன்றவரின் நட்பினை தூரத்தில் இருப்பதாயினும் போய் கொள்ளல் வேண்டும்.

செய்யுள் – 09

“தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் – அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று”
விளக்கம்: அறிவுத் தெளிவில்லாதவர் நட்பை விட பகை நல்லது. மருந்தினால் தீராத கொடிய நோயை விட சாதல் நல்லது. ஒருவரது மனம் மிகவும் வருத்தப்படும்படி இகழ்தலை விட கொல்வது நல்லது. ஒருவரிடம் இல்லாத சிறப்புகளை கூறிப் புகழ்தலைவிட அவரை பழித்தல் நல்லது.

செய்யுள் – 10

“மரீ இப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்க்கார் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு”
விளக்கம்: பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகி பலருடைய குணங்களை ஒப்பிட்டு அறிந்து மேலோரை நண்பராக கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும் பழகி விட்டு பின் பிரிதல் துன்பம் தருவதாகும்.

– கோமகன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *