நாலடியார் (21) சுற்றம்தழால்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – நட்பியல்

21. சுற்றம்தழால்

செய்யுள் – 01

“வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
கசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்
கேளிரைக் காணக் கெடும்”
விளக்கம்:
கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அதுபற்றி வரும் பல துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் நோவும், ஆகிய துன்பங்களை எல்லாம் மடியில் இருக்கும் கண்டு தாய் மறப்பது போல,
தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரை காணின் நீங்கும்.

செய்யுள் – 02

“அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கி பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்ப தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்கு கடன்”
விளக்கம்:
வெப்பம் மிகுந்த கோடை காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் நிழல் தரும் மரம் போல தன்னைச் சார்ந்த சுற்றத்தாரை எல்லாம் ஒரே தன்மையாக காத்து பழுத்த மரம்ஙபோல பலரும் பயன் நுகர, தான் வருந்தி உழைத்து வாழ்வது நல்ல ஆண்மகனுக்கு உரிய கடமையாம்.

செய்யுள் – 03

“அடுக்கன் மலைநாட தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர் – அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு”
விளக்கம்:
அடுக்கடுக்கான மலைகள் பொருந்திய நாட்டையுடைய அரசனே! ஒரு மரத்தில் பெரிய பெரிய காய்கள் பலவாக காய்த்தாலும் தன் காய்களை தாங்க மாட்டாத கிளை இல்லை. அதுபோல பெரியோர் தம்மை சார்ந்தவர்களை தாங்கமாட்டோம் என்று சொல்ல மாட்டார்.

செய்யுள் – 04

“உலகறிய தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை – நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு”
விளக்கம்:
உலகத்தார் அறியும்படி மிகுதியாக உறவு கொண்டாலும், சிற்றினத்தாரிடம் கொண்ட உறவு நீடித்து நில்லாது. பிறரைத் தாங்கும் பண்பில் தளர்ச்சியில்லாதவரிடம் கொண்ட உறவோ, இயல்பாகவே தம் பண்பில் திரியாது நிற்கும் பெரியோர், வீட்டினை அடைய தவம் செய்யும் காலத்தில் அவ்வீட்டு நெறியில் ஊன்றி நிற்பது போல நிலைத்து நிற்கும்.

செய்யுள் – 05

” இன்னார் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் – துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார்
தலைமக்க ளாகற்பா லார்”
விளக்கம்:
இவர் இப்படிபட்டவர்; எம் உறவுனர்; அயலார் என்று வேறுபாடு குறிக்கும் சொல்லைச் சொல்லாத இயல்பினராய்,வறுமைத் துன்பத்தால் வாடும் மக்களை சார்ந்து அவர்தம் துயரத்தைக் களைபவரே யாவர்க்கும் தலைவர் ஆகும் தன்மை உடையவர் ஆவர்.

செய்யுள் – 06

“பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலி புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்
டெகலத் தானு மினிது”
விளக்கம்:
பொற்கலத்தில் இட்ட புலிநகம் போன்ற வெண்மையான சோற்றை சர்கரையுடன் பாலும் கலந்து பகைவர் தர அதைப் பெற்று உண்பதைவிட, உப்பில்லாத புல்லரிசி கூழை, உயிர் போன்ற சுற்றத்தாரிடத்திலே பெற்று எந்த காலத்திலும் இட்டு உண்ணல் இனிதாம்.

செய்யுள் – 07

“நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும் – கேளாய்
அபராணப் போழ்தின் அடுகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது”
விளக்கம்:
நெஞ்சமே கேள்! பகைவர் இல்லத்தில் வேளை தவறாமல் பொரிக்கறியுடன் கூடிய உணவினை உதவியாக பெற்றாலும் அது வேம்புக்கு நிகராகும். உணவுக்குரிய நேரம் கடந்த போதும், சுற்றத்தாரிடமிருந்து கீரை உணவே கிடைத்தாலும் அஃது இனிமையாகும்.

செய்யுள் – 08

“முட்டிக்கை போல முனியாது வைகலுந்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்
சுட்டுக்கோல் போல எரியும் புகுவாரே
நட்டா ரெனப்படு வார்”
விளக்கம்:
சம்மட்டி போல, வெறுக்காமல் இருக்கும்படி நாள்தோறும் இதமாக நெருங்கி உண்பவர்களும் வாய்த்தால் குறடு போல கைவிட்டு போவார். ஆனால் அன்புள்ள உறவினரோ பொருள்களுடன் நெருப்பை அடையும் சூட்டுக் கோலை போல நெருப்பிலும் மூழ்குவர்.

செய்யுள் – 09

“நறுமலர் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்”
விளக்கம்:
நறுமண மலர்களால் கட்டிய குளிர்ந்த மாலையுடையவளே! உறவினர்க்கு உறவினராவார் சாகும் வரை அவர் இன்புறுங்கால் தாமும் இன்புற்று, அவர் துன்புறுங்கால் அவரோடு சேர்ந்து தாமும் துன்புறாவிடில் மறுபிறப்பிலே போய் அவர்களுக்கு உதவுவதும் உண்டோ?

செய்யுள் – 10

“விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம் விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து”
விளக்கம்:
தன்னை விரும்பாதார் வீட்டிலே தனித்திருந்து உண்ணும், பூனைக்கண் போன்ற நிறமுள்ள, வெண்மையான பொரிக் கறி உணவும் வேம்பாகும். ஆனால் தன்னிடம் விருப்பம் கொண்டவர் வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீருடற் கூடிய குளிர்ச்சியான புல்லரிசிக் கூழும் உடம்புக்குப் பொருந்தும் அமிழ்தம் ஆகும்.

– கோமகன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *