வருமானம் தரும் இத்தாலியத் தேனீ
தேன்…
இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் போல. இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!
பருத்தி விவசாயியின் வெகுமதி!
அந்தப் பகுதியில் போய் திருஞானசம்பந்தத்தின் தோட்டத் துக்கு வழிகேட்டால்… ‘தேன்காரர் தோட்டம்தானே! என்றபடி அனுப்பி வைக்கிறார்கள். தேன் சேகரிக்கும் பணியில் மனைவி ரேவதியுடன் சேர்ந்து, பரபரப்பாக இருந்த திருஞானசம்பந்தம், நம்மைக் கண்டதும் தேனாகப் பேசத்தொடங்கினார்.