ஐங்குறுநூறு பகுதி 8

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 8

மருதத்திணை

06 புனலாட்டுப் பத்து

  1. “சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
    நின்வெங் காதலி தழீஇ நெருநை
    யாடினை யென்ப புனலே யலரே
    மறைத்த லொல்லுமோ மகிழ்ந
    புதைத்த லொல்லுமோ ஞாயிற்ற தொளியே”

துறை: பரத்தையரோடு புனல் ஆடினான் என கேட்டு வெறுத்த தலைவி, அது இல்லை என்ற தலைவனுக்கு சொல்லியது
விளக்கம்: சூதார்ந்த குறிய தொடி அணிந்த கையையும் கண்ணோடு அஞ்சும் அசைந்த நடையையும் உடைய நினது பரத்தையுடனே கூடி முன்னை நாளில் புனல் ஆடினாய் என்று கூறுவர். அந்த அலர் (வதந்தி) உன்னால் மறைத்தல் கூடுமோ மகிழ்நனே! சூரியன் ஒளியை மறைத்தல் முடியாதது போல.
(புனல் – ஆற்றில் பெருகி வரும் புதுவெள்ளம். புனலாடுதல் – புதுவெள்ளத்தில் நீராடுதல்)


  1. “வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத்
    திதலை யல்குற் றுயல்வருங் கூந்தற்
    குவளை யுண்க ணேஎர் மெல்லியன்
    மலரார் மலிர்நிறை வந்தெனப்
    புனலாடு புணர்துணை யாயின ளெமக்கே”

துறை: தலைவி புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைவன் களவு காலத்தில் புனலாட்டு நிகழ்ந்ததை தோழி கேட்க அவளுக்குச் தலைவி சொல்லியது
விளக்கம்: வயலிடத்தில் மலர்கின்ற ஆம்பல் பூப்போன்ற மூட்டு வாயையுடைய ஆபரணத்தையும், அசைகின்ற தழை அணிந்த அல்குலையும், அசைகின்ற கூந்தலையும் குவளைப் பூப்போல மை தீட்டிய கண்களயும், அழகையும் உடைய இம்மெல்லியல், அக்காலத்தில் பெருக்கினை உனைய பெரு வெள்ளம் வர, அதனிடத்தில் ஆடுகின்றவர்களோடு கூடிய நாயகிகளை போன்று எமக்கும் இருந்தாள்.


  1. “வண்ண வொண்டழைஙநுடங்க வாலிழை
    யொண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக்
    கண்ணறுங் குவளை நாறித்
    தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே”

துறை; சென்ற செய்யுளுக்குரியதே
விளக்கம்: அழகை உடைய ஒள்ளிய தழை அசைய ஒளியுடைய ஆபரணம் அணிந்த ஒள்ளிய நெற்றியை உடைய பெண்ணானவள் அக்காலத்தில் ஒருமுறை விளையாட்டாக பாய, தேன் பொருத்திய நல்ல குவளை மணத்தை உடையதாகவும் குளிர்ச்சி உடையதாகவும் இருந்தது பெருந்துறைக்கண் உள்ள நீரானது.


  1. “விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
    பசும்பொ னவிரிழை பைய நிழற்றக்
    கரைசேர் மருத மேறிப்
    பண்ணை பாய்வோ டண்ணறுங் கதுப்பே”

துறை: இதுவும் முந்தைய இரு செய்யுளுக்கு உரியன போலவே
விளக்கம்: விசும்பிலிருந்து (தேவலோகம்) வீழ்கின்ற மயிலினது சிறப்பு போல இருந்தது, பசிய பொன்னாலான ஆபரணமானது மெல்ல நிழலை செய்ய, கரையிலுள்ள மருத மரத்திலேறி விளையாட்டாக பாய்கின்ற அவளது குளிர்ச்சியை தரும் வாசனை உடைய கூந்தலானது.


  1. “பலரிவ ணெவ்வாய் மகிழ்ந வதனா
    லலர்தொடங் கின்றா லூரே மலர
    தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
    நின்னோ டாடின டண்புன லதுவே”

துறை: பரத்தையரோடு புனலாடி வந்த தலைவன் அதனை மறைத்த போது தோழி கூறியது
விளக்கம்: மகிழ்ந! நின்னோடு, பழைய நிலை உடைய மலர் பொருந்திய மருதத் துறைகண்ணே உள்ள குளிர்ந்த புனலிடத்தில் நீராடினவள் பலர்; ஊருராரும் அலர் கூற தொடங்கி நின்றார். அதனால் நீ நமக்கு பொருத்துதல் உடைய அல்லை.


  1. “பைஞ்சாய்க் கூந்தற் பசுமலர்ச் சுணங்கிற்
    றண்புன வாடித்தன் னலமேம் பட்டன
    ளொண்டொடி மடவர னின்னொ
    டந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே”

துறை: பரத்தையரோடு புனலாடி வந்த தலைவன் அதனை மறைத்த போது தோழி கூறியது
விளக்கம்: பஞ்சு போல கூந்தலும் பசுமையான மலர் போல அழகிய தேமலை உடைய ஒள்ளிய தொடி அணிந்த பெண்ணானவள், நின்னோடு குளிர்ந்த புனலாடி அமர மாதர்க்குத் தெய்வமும் போலாய்லஅழகு பெருமையடையப் பெற்றாள்.


  1. “அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
    பேரூ ரலரெழ நீரலைக் கலங்கி
    நின்னொடு தண்புன லாடுது
    மெம்மோடு சென்மோ செல்லனின் மனையே”

துறை: முன்பு ஒரு நாள் தலைவியோடு புனலாடினான் இவன் எனக்கேட்டு இவனோடு இனி ஆடேன் என உறுதிகொண்ட பரத்தை புதுப்புனலாட்டின் போது தலைவனுக்கு சொல்லியது.
விளக்கம்: மகழ்நனே! நினக்கு ஒன்று கூறுவேன். பெரிய ஊரிடத்தே அலர் உண்டாக நீரிடத்து அலை போலக் கலக்கமுற்று நின்னொடு தண்ணிய (குளிர்ந்த) புனலாட மாட்டேன், நின் மனை இடத்து செல்லாமல் எம்மோடு செல்வயாக.


  1. “கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
    மதில்கொல் யானையிற் கதழ்புநெறி வந்த
    சிறையழி புதுப்புன லாடுக
    மெம்மொடு கொண்மோவெந் தோள்புரை புணையே”

துறை: முன்பு ஒருநாள் தலைவியோடு புனலாடினான் இவன் எனக் கேட்டு இவனோடு இனி ஆடேன் என உறுதி கொண்ட பரத்தை புதுப் புனலாட்டின் போது தலைவனுக்கு சொல்லியது.
விளக்கம்: ஒளியை உடைய தகட்டு வடிவுடைய நீண்ட வேலை உடைய கடுமான் கிள்ளியின் மதிலை கெடுக்கும் யானையைப் போல வழிக் கொண்டு விரைந்து வந்த கரையை அழிக்கும் புது புனலிடத்து ஆடுதற்கு எமது தோள் போன்ற தெப்பத்தை எம்மோடு பொருந்துவாயாக.


  1. “புதுப்புன லாடி யமர்ந்த கண்ணள்
    யார்மக ளிவளெனப் பற்றிய மகிழ்ந
    யார்மக ளாயினு மறியாய்
    நீயார் மகனையெம் பற்றி யோயே”

துறை: தன்னோடு கூடாது தனித்து புனலாடுகிறான் எனக் கேட்டுத் தலைநின்ற ஒழுகப்படா நின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடிளாக அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டு தலைவன் தான் அறியான் போல நகையாடிக் கூறி கையைப் பற்றிய போது பரத்தையின் தோழி கூறியது.
விளக்கம்: புதுப்புனலாடி போர் செய்தலை உடைய கண்களை கொண்ட இவள் யார் மகளென்று வினாவிக் கையைப் பிடித்த மகிழ்நனே! நீ யாரது மகனானாலும் அறிய மாட்டாய், எம்மைப் பற்றிய நீ யார் மகனோ? சொல்வாயாக.


  1. “புதுப்புன லாடி யமர்ந்த கண்ணள்
    யார்மக ளிவளெனப் பற்றிய மகிழ்ந
    யார்மக ளாயினு மறியாய்
    நீயார் மகனையெம் பற்றி யோயே”

துறை: தன்னோடு கூடாது தனித்து புனலாடுகிறான் எனக் கேட்டுத் தலைநின்ற ஒழுகப்படா நின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடிளாக அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டு தலைவன் தான் அறியான் போல நகையாடிக் கூறி கையைப் பற்றிய போது பரத்தையின் தோழி கூறியது.
விளக்கம்: புதுப்புனலாடி போர் செய்தலை உடைய கண்களை கொண்ட இவள் யார் மகளென்று வினாவிக் கையைப் பிடித்த மகிழ்நனே! நீ யாரது மகனானாலும் அறிய மாட்டாய், எம்மைப் பற்றிய நீ யார் மகனோ? சொல்வாயாக.

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *