மின்னிதழ் செப்டம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh septembar 2022

சமீபத்தில் வெளியான நீரோடை மகேசின் கவிதை நூல் “மௌனம் திறந்த நாற்காலி” மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகஸ்ட் மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள் – காயத்ரி,
நா மாரியப்பன்


ஆரோக்கிய சமையல் – மாப்போட்டாஞ்சாறு

தேவையான பொருட்கள்
நல்லெண்ணை – 2 குழி கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 20
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
ராகி மாவு – 2 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை
புளியை நன்றாக ஊற வைக்கவும். நல்லெண்ணைய கடாயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு நன்றாக பொறிந்த பின்பு முழுதாக உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வரமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு புளியை கரைத்து ஊற்றவும்.
பச்சைவாசனை போனபின்பு ராகி மாவை 100 மி.லி.தண்ணீரில் கரைத்து புளிகரைசலில் ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் மல்லிஇலை சேர்ந்து அடுப்பை நிறுத்தவும். இப்போது களிக்கு தொட்டுக் கொள்ள அருமையான மாப்போட்டாஞ்சாறு தயார்.
குறிப்பு:- ராகி மாவு அதிகம் சேர்த்தால் சாறு கெட்டியாகிவிடும். ராகி மாவு கரைத்து ஊற்றுவதில் தான் பக்குவத்தில் இருக்கிறது.

– சூலூர் ஆனந்தி


நூல் அறிமுகம்

கவிஞர் தானப்பன் அவர்களின் நூலுக்கு கவிஞர் கவி தேவிகா எழுதிய திறனாய்வு கட்டுரை..


கவிதை தொகுப்பு – உமாவும் கவிதையும்

யாருமற்ற
பிரகாரத்தில்
சுற்றி வருகிறாள்
இறைவி
கையிருப்பில் இருக்கும்
வரங்களை
எண்ணிக்கொண்டு

நினைவுகளை
விழுங்க முடியாமல்
புரை யேற
அருந்த வேண்டுகிறேன்
கொஞ்சம் கண்ணீர்.


என் கன்னங்களை
ஊதியது பலூன்
வண்ணங்களாய்
முகப்பருக்கள்.

உள்ளும் புறமும்
எப்படி ஓயாமல்
உழல் கிறது இந்த காற்று
பாழாய் ப்போன இந்த
காதலைப்போல்.


என் கணத்த
மெளனத்தை
என்னவென்று
பொருள்கொள்வாய் நீ
வலியின்
ஆழமென்றா
ரணத்தின்
நீளமென்றா
விரக்தியின்
உச்சமென்றா
நிராசைகள் அவை
வழக்கம்போல் உணர்வாய்
என் திமிரின்
பெரு உருவம் என்று. – உமா சௌந்தர்யா


ஒரு பக்க கதை – மாற்றியவர் யாரோ…

“ராகவன்! மாப்பிள்ளை மகேஷ் ஏதோ கோபமாக கத்திகிட்டிருக்கிறார்… என்னன்னு போய் பாருங்க.” என்று நண்பர் கூற, ராகவன் பதறியடித்துக் கொண்டு ஓடினார்.

“அப்பா! நான் அன்னைக்கு பார்த்த பொண்ணு அனன்யா இல்லப்பா இவ. வேற யாரோ ஒரு பொண்ணை கொண்டு வந்து ரிஷப்ஷனில் நிறுத்தப் போறாங்க .அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” என்று கத்திக் கொண்டிருந்தான் மகேஷ்.

ராகவன் ஓடிவந்த சத்தம் கேட்டு , மணமகள் அறையில் இருந்த மணப்பெண் எட்டிப்பார்த்தாள்.

“மாப்பிள்ளை நீங்க இப்ப இங்க வந்த பெண்ணை பார்த்தீர்களே! அவள்தான் என் ஒரே பொண்ணு அனன்யா. நீங்க அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்ததும் அவளை தான் “என்று கெஞ்சினார் ராகவன். மகேஷ் அதை ஒத்துக்கொள்ள மறுத்தான்.

மணப்பெண் சட்டென கதவை அடைத்துக் கொண்டாள். எல்லோரும் பயந்து போய் கதவை தட்ட,ராகவன் பதறிப்போய் “அம்மா கதவை திற.. கதவை திற”என்று கதவை ஓங்கி அடித்தார்.

சற்று நேரம் கழித்து, கதவை திறந்த பெண்ணைப் பார்த்து மகேஷ் நிம்மதியானான்… அவன் அன்றைக்கு பார்த்த அதே அழகிய அனன்யா.எல்லோருக்கும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் .

அனன்யா அவனைப் பார்த்து புன்னகைத்து,” என்ன மாப்பிள்ளை சார்! உங்க சந்தேகம் தீர்ந்ததா? இனி ரெடியாகுங்கள்” என்றாள் கேலியாக. மனதிற்குள் பல்லைக் கடித்தாள்…தனக்கு மேக்கப் பண்ணிய பியூட்டி பார்லர் பெண்ணை நினைத்து.

– தி.வள்ளி, திருநெல்வேலி


கட்டுரை – எறும்புகள்

வழக்கம் போல காலை சுப்ரபாதத்துடன் ஆரம்பித்தது. காபியை முடித்து, வாட்ஸ் அப்பில் ‘குட் மார்னிங்’ போட வேண்டியவர்களுக்கெல்லாம் போட்டுவிட்டு மடமடவென வேலையை ஆரம்பித்தேன் …காலை நேரம் பாட்டு கேட்டபடியே சமைப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் …வெயில் ஏறும்முன் அடுப்பு வேலைகளை அனேகமாக முடித்து விடுவது என் வழக்கம்..அன்றும் அதே போல செய்து கொண்டிருக்க …

கண்ணில் பட்டது சிற்றெறும்பு கூட்டம்.அனேக டப்பாக்கள் எறும்புகளால் சூழப்பட்டிருக்க..வேலை இரட்டிப்பானது. எறும்புகளைப் ஓரம்கட்டி.. திரும்ப டப்பாக்களை வெயிலில் வைத்து… கூடுதலான வேலை…எரிச்சல்.எறும்புகள் பாவம் என்ன செய்யும் எங்கே குளிர்ச்சியாய் இருக்கிறதோ அங்கே ஜாகையை மாற்றிக் கொள்கிறது ..

இதற்கிடையே “ஆச்சி… ஆச்சி” என்று என் பேத்தி ஒருபக்கம் படுக்கை அறையிலிருந்து சத்தமிட…அவசரமாக ஓடினால்..அவள் படுக்கை விரிப்பை காண்பிக்க… அதிலும் கூட்டமாய் எறும்புகள். தின்பண்டத்தை படுக்கையில் வைத்துக்கொண்டு சாப்பிட்டதன் விளைவு …சரியான எரிச்சலுடன் படுக்கை விரிப்பை அப்படியே எடுத்து சுற்றிக்கொண்டுபோய் பால்கனியில் தூக்கிப்போட்டு விட்டு… நன்றாக தட்டி… உதறி வேறு விரிப்பை விரிக்க அரைமணி நேரம் காணாமல் போனது…

இதில் வேடிக்கை… சமையல் அறையில் இருந்த எறும்புகள் கண்ணுக்கு தென்பட… படுக்கை விரிப்பில் இருந்த எறும்புகள் சுத்தமாய் என் கண்ணுக்கு தெரியவில்லை.. ஐந்து வயது குட்டிப்பெண்ணின் கண்களுக்கு எறும்பு தெளிவாய் தெரிய …எறும்பு கடியிலிருந்து தப்பித்தேன்.”இதுக்குத்தான் படுக்கையறைக்கு சாப்பிடும் சாமான்களை கொண்டு போகாதீர்கள்” என்று சொல்வது என்று திட்டிக்கொண்டே வேலையை தொடர்ந்தேன்.

மாலையில் டிபன் செய்து விட்டு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு குட்டி பேத்தியின் கையில் கொடுத்துவிட்டு…மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து அவளிடமிருந்து சத்தம் வராததால் எட்டிப்பார்க்க, அவள் படுக்கை அறை வாசலுக்கு வெளியே, தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நான் பதறிப்போய் “என்னடா செல்லம்.. கீழே உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்க” என்று கேட்க…அவள் “காலையிலேயே ஆச்சி.. எறும்பு நிறைய படுக்கைல இருந்துச்சுல்ல.. நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை எல்லாம் செஞ்சு பெட்ஷீட் மாத்துனீங்க … இப்ப அங்க போய் உட்கார்ந்து சாப்பிட கூடாதுன்னு.. கீழே உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டிருக்கேன். இங்க கீழ விழுந்துச்சுன்னா நம்ம கிளீன் பண்ணிடலாம் கண்ணுக்குத் தெரியும்ல்ல…” என்றாள்.

அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டேன். 5 வயது சிறுமிக்கு எவ்வளவு அழகாக நம்முடைய சிரமம் புரிகிறது. சொல்வதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது. பெரியவர்கள் கூட ஒழுங்காக நாம் சொல்வதை.. நம் சிரமத்தை… புரிந்துகொள்ள மாட்டார்கள்… ஒரு சிறு பெண்ணிடம் அந்த பண்பு… இந்தப் அன்பு என்னை நெகிழ வைத்தது .

பொதுவாக இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் நான் காணும் பண்பு இது…எதையும் அட்வைஸ் போல சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதட்டி சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால் காரண காரியத்தை விளக்கி பொறுமையாக ஒரு காரியத்தின் விளைவுகளையும், எதிர்விளைவுகளையும் விளக்கிக் கூறினால்…புரிந்து கொண்டு அதை கடைப்பிடிக்கிறார்கள்.சரியான காரணமாக அவர்கள் மனதில் பட்டு.. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அந்த விஷயத்தை தானாகவே செய்ய முன்வந்து விடுகிறார்கள்.’கனி தானாகக் கனியவேண்டும்.. தடியால் அடித்துக் கனிய வைக்க முடியாது ‘.

மிக அதிக மூளை திறன்(I.Q) உள்ள இக்கால குழந்தைகளிடம் பெற்றோர்கள் அணுகுமுறை அது போல இருத்தல் நல்ல பலனைத் தரும். இது ‘எறும்பு கற்றுக்கொடுத்த படமாகத்தான் இருக்கட்டுமே’ என்று தோன்றியது.

– தி.வள்ளி, திருநெல்வேலி


செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேஷம்
இந்த மாதம் செவ்வாய் பகவான் மூலம் நல்ல பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்து மூலம் ஆதாயம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக அமையும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் சிறு தடைகள் வரலாம். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உள்ளன. விவசாயத்தில் குடும்பத் தேவைகள பூர்த்தியடையும்.
பரிகாரம்: தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

ரிஷபம்
இந்த மாதம் அண்டை வீட்டார்கள் ஆதரவு பெருகும். பணவரவு சுமாராக இருக்கும். பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். மன உற்சாகம் பெறுவீர்கள். பணியாளர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சுமார் லாபமே கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காணப்படுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்
இந்த மாதம் பணவரவு தேவைக்கேற்ப அமையும். எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக தென்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் கடைபிடிக்கவும். பணியாளர்கள் பணி வகையில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் ஏதும் இருக்காது. கலைஞர்கள் பொறுமையாக செயல்படவும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் மாநாடு பயிர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்து வரவும்.

கடகம்
இந்த மாதம் அலைச்சல் அதிகரிக்கும். பல ரூபங்களில் நன்மைகள் கிடைக்கலாம். பண வரவு நன்மை பயக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். உடல் நலம் சீரடையும். பணியாளர்கள் அதிக பணிச்சுமை அடைவார்கள். வியாபாரம் அதிக சிரமத்தை கொடுக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கடின உழைப்பை எதிர்கொள்ள வேண்டும். விவசாயம் காய்கறி மகசூல் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்
இந்த மாதம் எதிலும் நிதானமாக செயல்படவும். கொடுத்த வாக்கை நன்றாக காப்பாற்றுவீர்கள். பணவரவு சுமாராக அமையும். குழந்தைகளிடம் அன்பாக பழகவும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் தனி தொழில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். மாணவர்கள் தேவை பூர்த்தி அடையும். விவசாயம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கன்னி
இந்த மாதம் மனதில் பக்தி மனப்பான்மை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணவரவு உயரும், உங்கள் செல்வாக்கு பெருகும். பணியாளர்கள் பணியில் நிம்மதி அடைவார்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும். கலைஞர்கள் வருவாய் இழப்பு எதிர்கொள்வார்கள். விவசாயத்தில் அதிக நன்மை கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

துலாம்
இந்த மாதம் தன்னிச்சையாக செயல்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். பண வரவு தேவையான அளவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளன. கலைஞர் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். இந்த மாதம் வாகன யோகம் உள்ளது. பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரம் நல்லா லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்
இந்த மாதம் யாரிடமும் இனிமையாக பழகுவீர்கள். பணவரவு நன்மை பயக்கும். சுப நிகழ்வு ஒன்றுக்கு எல்லா வாய்ப்பு உள்ளது. பேசும் போது சற்று நிதானமாக பேசவும். உறவினர் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் வாகனத்தில் செல்லும்போது நிதானம் கடைபிடிக்கவும். வியாபாரிகள் யாரிடமும் கோபம் கொள்ள வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் திட்டமிட்டு செயல்படவும். விவசாயத்தில் நல்லதே நடக்கும்.
பரிகாரம்: காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

தனுசு
இந்த மாதம் நினைத்தது நடக்கும். உடல்நலம் நன்கு ஆரோக்கியம் அடையும். மன பயம் உருவாக வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முக்கிய வேலைகள் தாமதம் ஆகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பணியாளர்கள் முக்கிய பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் அதிக கவனத்துடன் செயல்படவும். விவசாயம் நன்மை பயக்கும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வருதல் சாலச்சிறந்தது.

மகரம்
இந்த மாதம் எதிர்ப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. செலவுகள் சற்று அதிகரிக்கலாம். புதிய நண்பர்கள் இணைவார்கள். உங்கள் மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். நல்ல தகவல் ஒன்றே வந்து சேரும். உங்கள் பயணங்கள் நன்மை பயக்காது. பணியாளர்கள் அதிக கவனமாக செயல்படவும். வியாபாரிகள் அதிக உழைப்பு தேவைப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நன்கு உயர்வடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்
இந்த மாதம் நேர்மை கடைபிடிக்கப்படும். பணவரவு எதிர்பார்த்த அளவு அமையும். புதிய யோகம் உண்டு. எதிலும் கவனமாக செயல்படவும். மன நிம்மதி அடைவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்கள் நிதானமாக செயல்படவும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்லா வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.

மீனம்
இந்த மாதம் பண தேவைகள் நிறைவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு உள்ளது. உறவினர் வருகை நன்மை பயக்கும். அண்டை வீட்டார்கள் சரணடைவார்கள். உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். வாகன யோகம் உண்டு. பணியாளர்கள் எதையும் யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரலாம். கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் இணைவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்லா வருவாய் கிடைக்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி வழிபாடு செய்து வரவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *