ஆவாரை செடியின் மருத்துவ பயன்கள்
இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி மற்றும் அது வளரும் இடம் பயன்படுத்தப்படுகிறது.
கண்கள் பிரச்னை நீக்கும்
ஆவாரை இலை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. அதன் விதையைக் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.
இதய நோய் வராமல் காக்க
ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும். இதையே வாய் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகி பற்கள் பலம் பெரும்.
ஆவாரம் பூவின் மகத்துவம்
ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் வாடை விலகிப் போகும். மேலும் பூவுடன் , உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும்.
மேலும் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.
கொசு விரட்டி
ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.
நிழலும் குளிர்ச்சியும் தரும் ஆவாரம் இலை
ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், அசதி போன்றவை தவிர்க்கப்பெறும்.
ஆவாரைப் பஞ்சாங்கம்
ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் இலை, வேர், பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும்