நீங்கள் இறைச்சிப் பிரியரா
எச்சரிக்கை…. ! !
கறிக்கோழி சாப்பிடுவோர்க்கு எச்சரிக்கை ! !
கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, “ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை” என்றார்.
பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது.
இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.
நன்றி: செய்திடாட்காம்.