என் மின்மினி தொடர்கதை (பாகம் – 75)


முந்தைய பதிவை வாசிக்க
ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-75

en minmini kathai paagam serial

En minmini thodar kadhai

சற்று நேரத்தில் பாரதியின் உடலுக்கு இறுதி சடங்குகள் அனைத்தும் முறையாக கிராம மக்கள் உதவியுடன் செய்யப்பட்டது.எவ்வளவு நேரம் ஆகியும் அவள் குழந்தையின் அழுகை மட்டும் குறைந்தபாடில்லை.

டீச்சரும்,பிரஜினும் மாறி மாறி அந்த குழந்தையை சமாதானப்படுத்தி தோற்று தான் போனார்கள்…

நேரம் செல்ல செல்ல கிராமமக்கள் ஒவ்வொருவர் பின்னாக ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்கு கிளம்ப ஆரம்பித்து சாயங்கால வேளையில் அந்த வீட்டில் டீச்சர்,பிரஜின்,குழந்தை முகில் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர்…அழுது அழுது அந்த குழந்தையும் ஓய்ந்து தூங்கி போனது…

எஞ்சி இருந்த இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க வீடே மையான அமைதியாக இருந்தது…டீச்சர் நம்ம ரெண்டு பேரும் கிளம்பி விட்டால் முகிலை யார்
பார்த்துக்கொள்வது என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் பிரஜின்…

அதை தான் நானும் யோசிச்சுகிட்டு இருந்தேன் என்று டீச்சரும் பதில் சொல்ல…

மீண்டும் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க நேரமும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது… இருளும் சூழ ஆரம்பிக்க…எதையோ யோசித்து தீர்க்கமாக ஒரு முடிவு செய்தபடி மீண்டும் பேச தொடங்கினான் பிரஜின்…

டீச்சர்…எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.நானே இந்த குழந்தையை கூட்டிட்டு போகட்டுமா. ஆனா ஒரு இரண்டு நாள் மட்டும் அவகாசம் தேவைப்படுது.குழந்தைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு நானே வந்து கூட்டிட்டு போறேன்.அதுவரை மட்டும் நீங்க அவனை பார்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டான்…

பதிலுக்கு ஒன்றும் பேசாமல் அமைதியாக யோசித்தாள் டீச்சர்…

என்ன டீச்சர் ஒண்ணுமே பேசாம அமைதியாக இருக்கீங்க.நான் அவனை கூட்டிட்டு போவது பிடிக்கவில்லையா? அப்போ அவனை யாரு தான் பார்த்து கொள்வார்கள் என்று மீண்டும் டீச்சரை பார்த்து கேட்டான் பிரஜின்…

முகிலை நீங்க உங்க கூட கூட்டிட்டு போறது பிடிக்கவில்லை என்று நான் யோசிக்கவில்லை.உங்களை எனக்கு ரெண்டு நாட்களுக்கு முன்னாடில இருந்து தான் தெரியும்.உங்க பின்புலம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாத போது எப்படி என்று தான் யோசிக்கிறேன் என்றாள் டீச்சர்….

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பிரஜின்., இல்லை டீச்சர் எனக்கு பின்புலம்ன்னு சொல்லிக்குற அளவுக்கு யாரும் இல்லை.அம்மாவும் இல்லை,அப்பாவும் இல்லை.ஒரு வீடு மட்டும் இருக்கு.அதை தவிர ஒன்றும் இல்லை டீச்சர்.இனிமேல்தான் என்னைப்பற்றியே நான் யோசிக்க வேண்டும் என்றான்…

இடையில் ஏஞ்சலின் நினைவுகள் மனதில் அலைபாய்ந்தாலும் அதை டீச்சரிடம் சொல்லாமல் மறைத்து தனக்குள்ளே அழுது கொண்டான் பிரஜின்

ஏதோ சொல்ல வரீங்க., ஆனால் சொல்வதற்கு தயங்கி தயங்கி இருக்கீங்களே என்று அவனிடம் டீச்சர் கேட்கும் பொழுதே, தம்பி என்று யாரோ
வீட்டு வாசலில் முகிலை அழைக்கும் சத்தம் கேட்டது…

தனது உரையாடலை சற்று நிறுத்திவிட்டு டீச்சரும்,பிரஜினும் வெளியே வந்தனர்…

ஒரு கம்பீரமான உருவத்துடன்,அதே சமயம் பார்ப்பதற்கு எளிமையாய் ஒருவர் நின்று குரல் கொடுத்து கொண்டிருந்தார்…

அவரை பார்த்து என்னங்க அண்ணா… ஏன் வெளியவே நின்னுகிட்டு இருக்கீங்க உள்ளே வாங்க அண்ணா என்று டீச்சர் சொல்ல ஆரம்பிக்க.,

பரவாயில்லைங்க டீச்சர்,நீங்க கூட கேள்விப்பட்டு இருக்கலாம்.என் பேரு சிவனாயகம்.நான் இந்த ஊருல ரொம்ப வருஷமா வட்டித்தொழில் செய்துகிட்டு இருக்கேன்.ஆனா யாருகிட்டேயும் அடாவடி பண்ணி இதுவரைக்கும் நான் தொழில் நடத்தியது இல்லை.என்கிட்டே பணம் வாங்குறவங்க நிலைமையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு அதிக வட்டி வாங்கி அவர்களை தொல்லை செய்ததும் இல்லை…மனசாட்சிக்கு பயந்து தான் தொழில் செய்துட்டு வரேன் என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்தியாவறே.,இதை நீங்கதான் இனி பத்திரமா வெச்சுகிட்டு நேரம் வரும் பொழுது அந்த தாயில்லா பிள்ளைக்கு உதவ வேண்டும் என்று ஒரு பத்திரத்தை டீச்சர் கைகளில் கொடுத்தார்…

அந்த பத்திரத்தை ஒன்றும் புரியாமல் கையில் வாங்கி வைத்தபடி,உங்களை பற்றி ஊருல சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன் அண்ணே…ஆனா உங்களை நான் பார்த்தது இல்லை.இது என்ன பத்திரம் அண்ணா என்று வட்டிகாரர் சிவனாயகத்தை பார்த்து டீச்சர் கேட்க ஆரம்பிக்க.,

இல்லம்மா…ஒரு ரெண்டுமூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பாரதி என் வீட்டுக்கு பதறியடித்து கொண்டு ஓடிவந்து., அண்ணா எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் வேணும்,இதை வெச்சுக்கிட்டு கொஞ்சம் பணம் ரெடி பண்ணி தாங்க, உங்களிடம் வாங்கிய பணத்தை நான் திருப்பி தந்தவுடன் இந்த பத்திரத்தை வாங்கி கொள்கிறேன்.கொஞ்சம் அவசரம் அண்ணா என்று கெஞ்சியபடி என்கிட்டே இந்த பத்திரத்தை தந்துட்டு நாலு லட்சம் பணம் வாங்கிட்டு போனாங்க…

ஆனா அதுக்குள்ளே இப்படி ஆகும் ன்னு நான் நினச்சு கூட பாக்கல…ரொம்ப வருத்தமா போச்சு…இருக்குற வரைக்கும் அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு கிட்டதட்ட மூன்றரை லட்சம் பணத்துக்கு மேலே எனக்கு தந்துட்டு தான் உயிரை விட்டுறுக்கு…

பத்திரத்தை தந்துட்டு பணம் வாங்கிட்டு போன அன்னிக்கு மட்டும் தான் பாரதி என்னை பார்த்து அண்ணான்னு கூப்பிட்டு போனாளே தவிர ஒவ்வொரு முறை அவ பணம் திருப்பி தர வரும் பொழுது எல்லாம் எங்க உறவு ஒரு அப்பன் பொண்ணு மாதிரி மாறியே போச்சு என்று மனம் குமுறி தழுதழுத்த குரலில் மேலும் சொல்ல முடியாத அளவுக்கு தொண்டை தழுதழுத்து போனது வட்டிகாரர் சிவனாயகத்துக்கு…

பாகம் 76-ல் தொடரும்…

– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)

This image has an empty alt attribute; its file name is arjun-bharathi-a-mu-perumal-minmini.jpg

You may also like...