மின்னிதழ் நவம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh november 2022

சமீபத்தில் வெளியான நீரோடை மகேசின் கவிதை நூல் “மௌனம் திறந்த நாற்காலி” மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அக்டோபர் மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள்..
ரேவதி சிவமணி
வே. ஹேமலதா
சனவ் குணசேகரன்

வெற்றியாளர்கள் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.


கவிதை தொகுப்பு

இந்த மாத மின்னிதழில் கவிஞர் திவ்யா அவர்களை அறிமுகம் செய்வதோடு அவர்களின் கவிதைகளை வெளியிடுகிறோம்.
“மேகக்கடன்காரி”

ஏய் மேகமே
உன் முகில் வானம் முத்தழகுக்கே
நான் கடன்காரி…
இரவு, பகல் காட்டும் வித்தைக்காரா…
உன் வித்தைக்கே நான் கடன்காரி…
மணி மணியாய் கொட்டி என் பூமிக்கு தாகம் தீர்ப்பவனே…
உன் மேகமழைக்கு நான் கடன்காரி…
நீலவானிற்கு நீமட்டுமே தேராவாய்…
நீலவண்ண படுக்கைகாரனே…
கார்முகில்காரனே…
ஏய் மேகமே அன்போடு ஒர் கவிதை எழுதுகிறேன்
உன் மேகக்கடன்காரி நான்……


ஆரோக்கிய சமையல் – கொள்ளு பாயசம்

தேவையான பொருட்கள்

கொள்ளு – 1 கிண்ணம்
வெல்லம் – 1 1/2 கிண்ணம்
தேங்காய் பால் – 2 கிண்ணம்
திராட்சை, முந்திரி – தேவைக்கு
ஏலக்காய்தூள் – 5
நெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

கொள்ளு: மணம் வரும் வரை நன்றாக வறுத்து கொள்ளவும்.
பின் குக்கரில் நன்றாக வேக வைத்து நீரினை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை நன்றாக பொடி செய்து கரைத்து கொள்ளுடன் சேர்க்கவும். பின்பு ஒரு கொதிவிட்டு தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்பொழுது மண,மணக்கும் கொள்ளு பாயாசம் தயார்.
குறிப்பு: உங்கள் ருசிக்கேட்ப வெல்லத்தை சேர்த்தும் குறைத்தும் பயன்படுத்தி கொள்ளவும்.

– சூலூர் ஆனந்தி


மௌனம் திறந்த நாற்காலி நூல் விமர்சனம்

வாசிப்பெனப்படுவது வரம். எல்லோருக்கும் அது வசப்படும். வாசமும் பெறும். அவ்வாறு வாசம் பெற்ற வசப்பட்ட ஒரு புத்தகத்தை
இன்று நான் அறிமுகம் செய்கிறேன்.

நீரோடை மகேஸின் “மௌனம் திறந்த நாற்காலி” கவிதைத்தொகுப்பு அறிமுகம்… – maatha ithazh november 2022

சந்தியா பதிப்பகம்: பக்கங்கள் 80 | விலை 100/-

கவியிசைக்கும் மானுடக்குருவி என்ற என்னுரையில் தன் அழகான கவிதைகளுக்காக தான் விரித்த எண்ணச் சிறகுகளை நமக்காக விவரிக்கிறார் மகேஸ்.

என் முண்டாசு கவிஞருக்கு எனத் தொடங்கும் முதல் கவிதையிலிருந்து நிபந்தனையற்ற அன்பு என்ற நிறைவுக் கவிதை வரை
அனைத்தும் யதார்த்தமான சிந்தனைகள். எளிய வரிகள். எல்லோரும் ரசிக்கும் வரிகள்.

அவ்வாறு நான் ரசித்த கவிதைகளில் சிலவற்றில் சில வரிகளை இங்கே பகிர்ந்து மகிழ்கிறேன்…

மௌன கீதம் என்ற கவிதை மரணத்தின் நகர்வுகளை மிக அழகாகச் சொல்லியது. அதில் நான் ரசித்த வரிகள்…இதோ..

“வழியெல்லாம் ரோசாப்பூ
அலங்கரிப்பில் சிதறிய
மௌன கீதம்”

வறுமையைப் பற்றி கவிஞர் சொன்ன வரிகள் நம் எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தை உண்டு செய்யும் என்பது உண்மை. இதோ அவ்வரிகள்

“வெறுமை சுடர் விடுகிறது
வறுமையின் தீயில்”

எனத் தொடங்கும் கவிதை

“மனிதம் தோற்ற இடம் தான்
சாலையோர பிச்சைக் கூடம்”

என்று நிறைவாகிறது.

இட ஒதுக்கீடு என்ற கவிதை திருநங்கைகளின் மீது அவர் காட்டும் பரிவை படம்பிடித்து காட்டும் வரிகள் என்றே சொல்ல முடிகிறது. அக்கவிதையில் நான் ரசித்த வரிகள்

“ஆளுக்கு பாதி என்
இட ஒதுக்கீடு கேட்கையில்
அவர்களுக்கேது மீதி”

என்ற உண்மையை உடைக்கிறார் கவிஞர்.

ஒரு தலைக் காதல் கவிதை நம்மிடம் நாமே கேட்டுக் கொள்ளும் வரிகளாக நான் பார்க்கிறேன்..

“யாரும் இல்லா இரவுகளில்
முகம் தெரியாத
கண்ணாடி முன்
கரைவதால் என்ன பயன்”

மேலும் அதே கவிதையில்

“பார்வையாளரே இல்லா
வலிகள் பேசும்
கண்ணீர்த் துளிகள்
சிதறி என்ன பயன்”

இவை ஒருதலைக் காதலை
சுய பரிசோதனை செய்த வரிகளாகவே எனக்குத் தெரிகின்றன.

“தினமும் நிலவையும்
வானத்தையும் பரிமாறி
ஏழைகளின்
பசியாற்றுகிறது
நீர் நிலைகள்”

என்ற வரிகள் கற்பனையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

சாலையோர பூக்களை கவிஞர் கொஞ்சம் பல் சென்று விட்டதை எண்ணி எழுதிய வரிகள் அற்புதம்.

“கடந்து செல்லும் நிமிடங்களில்
உன்னை கொஞ்சாமல்
சென்றுவிட்டேன்
நீ என்னை ரசித்து
மலர்வதை கவனிக்காமல்”

நிச்சயம் இனி சாலையோர பூக்களை நாங்களும் காண்போம்.

குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள்…

“மழைக்காலத்தில் விடப்படும்
காகிதக் கப்பல் சொல்லும்
அப்பிஞ்சு விரல்களில் தான்
வருங்காலம்”

கரை ஒதுங்காத கண்ணீர்
என்ற கவிதையில் எனக்கும் கண் சிமிட்டல்கள் தான் கவிஞரே…

“கரை ஒதுங்காத
கண்ணீர் துளிகளை
மறைக்க முயற்சிக்கும்
கண் சிமிட்டல்கள்”

இது எல்லோருக்கும் உண்டு – maatha ithazh november 2022.

மேலும் இத்தொகுப்பில் நான் ரசித்த கவிதைகள் பல உண்டு. நிசப் பைத்தியங்கள், நிலாமகள், பூங்கொத்து நிலவுகள், அடைமழை, சிட்டுக்குருவி மனசு, யார் அனாதை போன்ற கவிதைகள் முத்திரைக் கவிதைகளாக இந்த தொகுப்பில் பார்க்க முடிகிறது.

இயற்கையோடு இணைந்த எண்ணங்களை தன் மனதோடு ஒத்துப்போகும் சிந்தனைகளோடு கவிதைகளாக தந்து அதில் வெற்றியும் பெறுகிறார் நீரோடை மகேஸ்.

நூல் தேவைக்கு: நீரோடை மகேஸ் 9940707441
சந்தியா பதிப்பகம் 044-24896979
சந்தியா பதிப்பக வலைத்தளத்திலும் கிடைக்கும்

நல்ல கவிதைத் தொகுப்பை வாசித்த மகிழ்வில்
ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்


சிறுகதை – தூக்கணாங்குருவி கூடு

“ஏண்டா அம்பி! எங்க பராக்கு பார்த்திண்டிருந்த..காப்பிப் பொடி வாங்கிண்டு வர இவ்வளவு நேரமா ?”

“மாமி! அவன் காபி கொட்டையை வறுத்து திரிச்சு தர வேண்டி யிருக்குதுல்ல.. அதான் இம்புட்டு நேரம்….”

“போன தடவை பிஞ்சு கொட்டையா கொடுத்துட்டான். பொடி கசந்துச்சு… இந்த தடவை சொன்னியா இல்ல அசடுமாரி நின்னுண்டிருந்தியா.உன்ன வச்சுண்டு ஒரு காரியம் செய்ய முடியாது. சமத்து கொஞ்சம்கூட போறாது. ஆளுதான் தண்டத்துக்கு வளர்ந்து நிக்கிற ஒரு கதைக்கு ஆக மாட்ட … கடைக்காரன் காபி கொட்டைய வறுப்பதுபோல மங்களா அம்பியை வறுத்தெடுத்தாள்.

“அன்னைக்கு அப்படித்தான் ஐயராத்துல 50 அப்பளம் வாங்கிட்டு வான்னு அனுப்பினா, பாதி அப்பளத்தை உடைச்சிண்டு வந்தான். கேட்டா சைக்கிள் கவுந்துடுச்சுங்கறான், என் தலையெழுத்து இவனோட மாரடிக்க வேண்டியதாயிருக்கு”.

இத்தனையும் கேட்டுக்கொண்டும் ,பார்த்துக்கொண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பார்த்தசாரதிக்கு அம்பியைப் பார்க்க பாவமாக இருந்தது. மனசு தாங்கவில்லை.

“ஏண்டி மங்களா! உனக்கே இது சரியாயிருக்கா? பாவம் மாங்கு மாங்குன்னு காலையிலிருந்து ராத்திரி வரை உழைக்கிறான் அவனை எப்படி திட்டறயே”

பார்த்தசாரதிக்கு மனம் விட்டுப் போயிற்று. அவன் தலையெழுத்து மாடாய் உழைச்சுகிட்டு.. இவளிடமும், இவள் மகளிடமும் சேர்ந்து வதைபடுகிறான் என்ற வருத்தம் மனதை அழுத்தியது.

பார்த்தசாரதி தன் தங்கை கமலத்தை உள்ளூர் மாப்பிள்ளை என்று பார்த்து தான் கல்யாணம் பண்ணி கொடுத்தார். தன் தகுதிக்கு மிச்சமா சீர்செனத்தியெல்லாம் சிறப்பாக செய்தார். தன் ஒரே தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தார். உடம்பு பலஹீனமாக இருந்ததாலோ என்னவோ அம்பி பிறந்த மூன்றாம் நாள் ஜன்னி கண்டு இறந்து போனாள் கமலம்.

அவள் புருஷனும் இரண்டாவது கல்யாணம் பண்ணியதும் அம்பியை கவனிப்பதை நிறுத்தி விட்டார். அனாதையாக நின்ற குழந்தையை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர் பார்த்தசாரதியும், மங்களமும்.

முதல் நான்கைந்து வருடங்கள் அம்பியை தன் சொந்த மகனாக தான் மங்களா பாசமாக வளர்த்தாள். காஞ்சனா பிறந்ததும், அவளுக்கு ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை வந்துவிட்டது.பத்து வயதிலிருந்தே அந்த வீட்டின் சம்பளம் வாங்காத வேலைக்காரனாக மாதிரித் தான் போனான்.

அதற்குள் காஞ்சனா,” அம்பி ஏஏஏஏய்ய்ய் எங்க போய் தொலைஞ்ச! என்னோட காட்டன் புடவைய கஞ்சி போட்டு இஸ்திரி போட்டு வைக்க சொன்னேன். அதுகூட செய்யலையா?” என்று கத்தினாள் .

“ஏம்மா! உங்க அம்மா தான் அவனை புழிஞ்சு எடுக்கிறா… கேவலமா நடத்தறா… நீயே உன் புருஷனை.. தாலி கட்டினவன இந்த மாதிரி பேசலாமா?”

“யாரு? இவனா… என் புருஷன்… இதைவிட ஒரு பொம்மைய கட்டிண்டு இருந்திருக்கலாம்…” வெறுப்பை உமிழ்ந்தாள்.

அங்கே வந்த மங்களா ,”ஏண்டி கத்தறே? நான்தான் பின்னாடி மாட்டையெல்லாம் அவுத்து வெளிய கட்டிட்டு… தொழுவத்தை சுத்தமா கழுடிவிடச் சொல்லியிருக்கேன். அதை முடிச்சுண்டு வருவான்” என்றாள்.

“அம்பி நான் தாலி கட்டின புருஷன்னு அப்பா சொல்லித்தான் நினைப்பே வருது! இவனை ஏன் என் தலைல கட்டி வச்சேம்மா?”

” பேசாம இருடி! நீ அடிச்ச கூத்துக்கு எனக்கு வேற வழி தெரியல… செட்டியார் மகனோட ஓடிப்போன உன்ன எவன் கட்டுவான்? எங்க போய் ஒரு மாப்பிள்ளை நான் தேடிப்பிடிக்க? அதுதான் இந்த பயலே உன் தலையில கட்டி வச்சேன், ஊர் வாயை அடைக்கிறதுக்குத்தான்.”

“கொஞ்ச நாள் போனா இந்த பயலே கழட்டி விட்டுட்டு உனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்”

“நீ ஒரு அம்மாவா? பெத்த மகள் கிட்ட எவ்வளவு கேவலமா பேசுற… கேவலமா நடந்துக்குற….இந்த பய பாவம்டி! அவன் வாழ்க்கையைக் கெடுத்த ….அம்மாவும் மகளும் நல்லாவே இருக்க மாட்டீங்க”

“போதும்! போதும்! உங்க சாபமெல்லாம் என்ன ஒன்னும் பண்ணாது . என் மகளையும் ஒன்னும் பண்ணாது. – maatha ithazh november 2022”

கொல்லைப்புறத்தில் மாட்டு தொழுவத்தை அம்பி கழுவிகிட்டிருக்க…அஞ்சலை பால் கொண்டு வந்தாள்.அம்பியை பாவமாக பார்த்தவள், “ஐயா தள்ளுங்க” என்றவள் பால் சொம்பை அவன் கையில் கொடுத்துவிட்டு சேலையை இடுப்பில் இழுத்துச் சொருகிக்கொண்டு மடமடவெனவு கழுவி விட ஆரம்பித்தாள்.

“நீ ஏன் அஞ்சல என் வேலைய செய்ற? நானே செஞ்சுட்டு வர்றேன்”.

“பெரியம்மாவும்..அவுக மகளும்.. இந்த மாதிரி ஒங்கள வேல வாங்குகிறாங்க… நீங்க பாவம்ய்யா… ஐயா மட்டும் தான் உங்களை பிரியமா நடத்துறாக… அவுகளுக்கு தங்கச்சி மகன்ங்கற பாசமிருக்கு… ஆனா இவுகளுக்குத்தான் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையே” என்றாள் ஆதங்கத்தோடு.

“அதெல்லாம் பழகி போச்சு அஞ்சலை…எதுவுமே எனக்கு பெருசா தெரியல .என் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கிறது நீயும், மாமாவும் மட்டும்தான். காஞ்சனா கண்ணுக்கு நான் எப்பவுமே ஒரு மனுஷனா தெரியமாட்டேன். அவ என்ன ஒரு வேலைக்காரனாத்தான் பார்க்கறா… என்ன ஏன் கல்யாணம் பண்ணிண்டான்னு சத்தியமா நேக்கு இப்ப வரைக்கும் புரியல”

“இது கூட உங்களுக்கு புரியல! அவுக சொல்றத கேக்குறதுக்கு ஒரு அடிமை வேணும்.. அப்படித்தான் உங்கள வச்சிருக்காக! நீங்களும் அது புரியாம இந்த வீட்ல கிடந்து கஷ்டப்படுறீங்க… உங்களுக்கு என்ன தலையெழுத்தாய்யா..”

“விடு அஞ்சல! என்னைக்கு எங்க அம்மா அஞ்சு வயசுல என்ன விட்டுட்டு போனாளோ… அன்னைக்கே எல்லாமே போச்சு… அத்தை என்னை எடுத்து வளர்த்ததற்கு நன்றிகடனாத்தான் இந்த வீட்டுக்கு உழைச்சிண்டிருக்கேன்”.

“ஏய்…அம்பி! இந்த பழைய சோறு எவ்வளவு நேரமா இங்கயே இருக்கு… குடிக்காம என்னத்தை வெட்டி முறிக்கிற” என்றபடியே வந்த மங்களம், அஞ்சலி தொழுவத்தை தழுவி கொண்டிருப்பதைப் பார்த்ததும் கோபாவேசமானாள்.

“ஏண்டி அஞ்சல! இது என்ன புது பழக்கம் .அவன் செய்ற வேலையை நீ எதுக்குடி செய்ற? வந்தமா பால கொடுத்தமான்னு போயிண்டே இருக்கணும். நோக்கு என்னடி கரிசனம் இவன் மேல.ஊர் உலகத்துல ஒரு ஆம்பளைய விட மாட்டீங்க …எதுக்கு தான் இப்படி ஆம்பளைங்களுக்கு அலையறீங்களோ…”

” பாவம் அம்பி அய்யா கஷ்டப்படுறார்ன்னு நான் வாங்கி கழுவினேன்…அதுக்குப் போய் இப்பிடி பேசறீங்களே பெரியம்மா..”

“துரை கஷ்டபடுறது பாக்க இந்த அம்மாவுக்கு மனசு கஷ்டமா போச்சு . ஏண்டி எதுத்தா பேசுற… நாக்க அறுத்திடுவேன்”

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தசாரதியின் மனம் வேதனைப்பட்டது.இந்த அஞ்சலிதான் எவ்வளவு பாசமாக இவன் மேல இருக்கா… அந்த அக்கறை என் மககிட்ட இல்லையே…. அம்மா படுத்துறது போதாதுன்னு மகளும் சேர்ந்து கொடும படுத்துறாளே…தன் கையாலாகாதனத்தை எண்ணி வெறுப்பாக இருந்தது. இவ்வளவையும் பாத்து கொண்டு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே… என்ற எரிச்சல் வந்தது பார்த்தசாரதிக்கு.

ஓரிரு வாரம் கழிய, ஒரு நாள் காலை உரக்க சப்தம் கேட்டது. “ஐயோ ஏங்க! இந்த கண்றாவியை வந்து பாருங்க! அடப்பாவி!! சண்டாளா ..நீ கண்டிப்பா விளங்காம தான் போவே. அன்னைக்கே உங்க ஆத்தா போனபொறவு உன்ன தலைமுழுகி இருக்கணும். உன்ன கூட்டியாந்து வளர்த்ததுக்கு நீ நல்ல பலன் காமிச்சுட்ட. நம்மாத்து மானத்தை கப்பலேத்திட்ட . என் மகளுக்கு துரோகம் பண்ணிட்ட. என் கண்ணு முன்னாடி நிக்காத… ஓடிப்போ… இந்த வீட்டு படிய மிதிச்ச, உன்னை நானே கொன்னு போட்டுருவேன்”

காஞ்சனாவும், பார்த்தசாரதியும் வெளியே ஓடிவந்து பார்க்க, வாசலில் மாலையும், கழுத்துமாக அஞ்சலியும், அம்பியும் நின்றிருந்தார்கள். காஞ்சனாவுக்கு தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை

“ஏண்டி அஞ்சல! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த பயல கல்யாணம் பண்ணிண்டு என் வீட்டு வாசலிலே வந்து நிப்ப. இவனெல்லாம் ஒரு மனுஷன்… இவன கல்யாணம் கட்டிண்டு எதையோ சாதிச்சிட்ட மாதிரி வந்து என் கண் முன்னாடி நிக்கிற.. இதுக்கு நீ நல்லாஅனுபவிப்ப…விளங்காம தான் போகப் போற… நடுரோட்டில நிப்ப..என் வயித்தெரிச்சல வாங்கிண்டு இந்தப் பைய நாசமாத்தான் போவான்…”

“அம்மா! வார்த்தைய அளந்து பேசுங்க… இப்ப அவரு என் புருஷன் .அய்யனாரு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் மாலைய மாத்தி கல்யாணம் பண்ணிகிட்டோம். அவரு உங்ககிட்ட கிடந்து சீரழிஞ்சது போதும். இனி நான் அவர நல்லா பாத்துக்குவேன்”.

“அடி செருப்பால! ஏண்டி சிறுக்கி! கள்ளத்தனமாக கல்யாணம் பண்ணிண்டு விளக்கமா குடுக்குற… ஏங்க பாத்துண்டு இருக்கிறீங்க.. இந்த பயலே இப்பவே அடிச்சு துரத்துங்க… நன்றி கெட்ட பைய.. இவ்வளவு தைரியம் அந்தப் பயலுக்கு கிடையாது… எல்லாம் அந்த சிறுக்கி கொடுத்த தைரியம்..”

பார்த்தசாரதி,”டேய்ய்ய் அம்பி…உன்ன வளர்த்ததுக்கு நல்ல நன்றிய காமிசுட்டே..இந்த குடும்பத்து மானம் மரியாதை போச்சு… இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள சம்பந்தம் முடிஞ்சு போச்சு! நீ இப்பவே எங்கேயாவது இவளை கூட்டிண்டு போயிடு.. இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை… நீ என் மகளுக்கு புருஷனும் கிடையாது.. சட்டப்படி நோட்டீஸ் வரும்… இனி இந்த ஊர் பக்கம்.. இந்த வீட்டுப்பக்கம் உங்கள பார்த்தா நானே உன்னை கொன்னு போட்டுருவேன் …” பார்த்தசாரதி போட்ட சத்தம் வீட்டையும் தாண்டி தெருவில் எதிரொலித்தது. மங்களாவே ஆடிப்போனாள் ஒரு நிமிடம்.

“இப்பதான் சரியா பேசி இருக்கீங்க! போடா வெளியே” என்றாள் மங்களம்.

“மாமா என்னை மன்னிச்சிடுங்க. “அம்பியின் கண்களில் கண்ணீர் வழிந்தது .கைகூப்பி வணங்கி விட்டு திரும்பி நடந்தார்கள்.

வாரங்கள் இரண்டு ஓடிவிட்டது.. ..காலை கதிரவன் மெல்ல வானத்தில் எழ..சில்லென குளிர் காற்று அந்தச் சின்னஞ்சிறு வீட்டில், இரவின் மையல் தந்த மயக்கத்தில் இருந்த இருவரையும் தழுவியது.

“அஞ்சல எழுந்திரு! ரெண்டு பேரும் வேலைக்கு கிளம்ப நேரம் சரியா இருக்கும்.” என்ற அம்பி, அவளை இறுக தழுவிக் கொண்டான்.

“நேரமாச்சுன்னு வாய் தான் சொல்லுது.”என்று செல்லமாக சிணுங்கினாள். மனமில்லாமல் இருவரும் எழுந்து வீட்டு வேலை பார்த்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கடைக்கு வேலைக்கு கிளம்பினர்.

கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது .அஞ்சலி போய் கதவை திறக்க ஆச்சரியம். பார்த்தசாரதி நின்றிருந்தார்.அம்பி ஓடி வந்தான்.”மாமா வாசல்ல நிக்குறீங்க! உள்ள வாங்க” என்றான்.

“அம்பி எப்படிடாயிருக்க? அஞ்சலி நல்லா இருக்கியாம்மா?” என்றவர் காலில் இருவரும் விழுந்தனர்

” மாமா எங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கீங்க! நாங்க உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நீங்கதான் எங்க கண்கண்ட தெய்வம்.அன்னைக்கு நீங்க சொன்னபடி செய்தது எனக்கு மனசு உறுத்தலாக இருந்துச்சு.ஆயிரம்தான் இருந்தாலும் அத்தை என்னை வளர்த்தவங்க அவங்களை தலைகுனிய வைச்சிட்டு அஞ்சலியை கல்யாணம் கட்டிக்கிட்டு வர்ரோமேன்னு மனசு பதறுச்சு… ஆனா நீங்க சொல்றத மறுக்க முடியாமதான் நான் இதுக்கு சம்மதிச்சேன்”

“அம்பி உணர்ச்சிவசப்படாத உன்னுடைய நல்ல மனசுக்கு நீ இப்படித்தான் நினைப்பே… ஆனா உங்க அத்தையையும் காஞ்சனாவையும் பத்தி எனக்கு தெரியும்…. அவங்க ரெண்டு பேரும் மனுச ஜென்மமே இல்ல ….அவங்க உன்ன மனுஷனா மதிக்கவும் தயாரா இல்ல… வீட்டு வேலை செய்ற ஒரு ஆளா தான் உன்னை பார்த்தாங்க”.

“உங்க அம்மா எப்படி செல்வாக்காக கல்யாணம் பண்ணி கொடுத்து… எப்படி வாழ்ந்தா.. அவளோட புள்ள நீ எப்படி கிடந்து சீரழியிறது எனக்கு மனசு உறுத்தலாக இருந்துச்சு. அஞ்சல உன்மேல அன்பா இருந்தா. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும், நீங்க ரெண்டு பேரும் நிம்மதியாக குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருப்பீங்கன்னு எனக்கு தோணுச்சு” – maatha ithazh november 2022.

“இதுல உங்க அத்தைய நினைச்சு வருத்தப்பட ஒண்ணுமே இல்ல.அவ எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் போனா காஞ்சனாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவச்சிடுவா. நீயேன் உன் வாழ்க்கையை கெடுத்துக் கணும்னு தோணுச்சு. அதனாலதான் நீ அஞ்சலியோட சேர்ந்து வாழுன்னு நானே இரகசியமாக கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணினேன்”என்றவர்…

கையிலிருந்த ஒரு சிறு பெட்டியை அவன் கையில் கொடுத்தார். இது உங்க அம்மாக்கு போட்ட நகையும், அவளோட பணமும். உங்க அத்தைக்கு தெரியாமல் இதை மறைச்சு வைச்சிருந்தேன். நீ இதை உபயோகப்படுத்தி ஏதாவது சொந்தமா தொழில் செஞ்சு குடும்பத்தை நல்லபடியா நடத்து..அதுதான் உங்க அம்மாக்கு நீ தரக்கூடிய மிகப்பெரிய சந்தோஷம்.இந்த மாமாவுக்கும் அதான் சந்தோஷம்” என்று அந்த பெட்டியை அம்பி கையில் கொடுத்தவர் அஞ்சலியை பார்த்து..

“சீக்கிரமே என்னத் தாத்தாவாக்குறதுக்கு கையில 10 மாசத்துல ஒரு புள்ளைய பெத்து கொடுக்கணும்… உன் பிள்ளையோடு என்னைக்குமே அம்பியையும் நல்ல பாத்துக்கணும்… அதுதான் நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது” என்று கூற..

வெட்கத்துடன் தலையசைத்தாள் அஞ்சலை.

– தி.வள்ளி, திருநெல்வேலி


செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேசம்
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனதில் தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும், விருந்து விழா செல்ல வாய்ப்புகள் உள்ளன, புதிய முயற்சிகள் தாமதமாக நடக்கும், பணியாளர்கள் பணியில் நல்ல கவனத்துடன் செயல்படவும், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும், கலைஞர்கள் பிறர் உதவியை நாடுவார்கள், மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி காண்பார்கள், விவசாயம் நல்ல வெளிப்படையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.

ரிசபம்
இந்த மாதம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். எதை செய்தாலும் வெற்றியை காண்பீர்கள். பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். தெய்வ வழிபாடு அதிக நாட்டம் செலுத்துவீர்கள். பழைய வழக்குகள் ஒரு முடிவுக்கு வரலாம். பணியாளர்களுக்கு குறைவான வேலையே இருக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். சுற்றுவட்டத்தில் நண்பர்கள் நன்மையை செய்வார்கள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணவரவு சற்று உயரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் நடைபெறும். எதிரிகள் உங்கள் வசம் சரணடைவார்கள். புதிய சிந்தனைகள் மனதில் பிறக்கும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. கலைஞர் வாழ்க்கைத் தரம் உயரும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றி நடக்கவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு வழிபாடு செய்து வரவும்

கடகம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். அடிக்கடி வரும் கோபத்தை குறைக்கவும். குடும்ப பிரச்சினைகள் வரலாம் சற்று கவனமாக செயல்படவும். பழைய சொத்து பிரச்சனை முடிவுக்கு வரலாம். சுப நிகழ்வுகளுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன, செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பிரயாணத்தின் போது கவனம் தேவை. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க நேரிடும்.
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்
இந்த மாதம் புதன் பகவான் நன்மையே செய்வார். எடுத்த காரியங்கள் முடிக்கப்படும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். போதிய பண வரவு கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெரியோர்கள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல ஆர்வத்தோடு காணப்படுவார்கள். விவசாயம் காய்கறிகள் வளர்ப்பின் மூலம் வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கன்னி
இந்த மாதம் புதன் பகவான் நன்மையை செய்வார். புதிய நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பணவரவு சற்று உயரும். எந்த செயலையும் சற்று யோசித்து செயல்படவும். புதிய மனை வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் எதைச் செய்தாலும் நன்கு கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். மாணவர்கள் மனக்கவலை அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் சுமாரான லாபம் கிடைக்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.

துலாம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். தேவையான பணவரவு இருக்கும். புதிய அறிமுகங்கள் கிடைக்கலாம். பழைய பாக்கிகள் வசூல் ஆக தாமதம் ஆகலாம். மற்றவர் உதவி கிடைக்கப்பெறும். தெய்வ வழிபாடு நன்மை தரும். பணியாளர்கள் எதிலும் வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நன்கு செழிப்படையும் – maatha ithazh november 2022.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். பண தேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. வீண் அலைச்சல் உருவாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் அதிக நன்மை பெறுவார்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் அனுசரித்து போகவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

தனுசு
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எதை செய்தாலும் நன்கு யோசித்து செயல்படவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். பண வரவு சுமாராகவே அமையும். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். கோபத்தை சற்று குறைக்கவும். பணியாளர்கள் பணியில் நல்லா கவனம் செலுத்தவும். வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்து வரவும்.

மகரம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். யார் பேச்சையும் அதிகம் நம்ப வேண்டாம். நண்பர்கள் உதவி செய்ய வாய்ப்புகள் உள்ளன. அரசாங்க ஆதரவு கிடைக்க பெறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கலைஞர்கள் சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் லாபமே கிடைக்கும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு தேவைக்கேற்ப அமையும். செலவுகள் அதிகரிக்கலாம், உடல் நலத்தில் நல்ல கவனம் செலுத்தவும். நண்பர்கள் வசம் பகை உருவாகலாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போகவும். பணியாளர்கள் அதிக வேலை செய்ய நேரிடும். வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல உற்சாகமடைவார்கள். விவசாயம் காய்கறி பயிரிடுவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.

மீனம்
இந்த மாதம் சனி பகவான் நன்மையே செய்வார். செலவுகள் அதிகரிக்கலாம், அண்டை வீட்டார் மத்தியில் சிறு சங்கடங்கள் வரலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். சுற்றுவட்டத்தில் மதிப்பு மரியாதை உயரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் நலம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் வெளிவட்டத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். மாணவர்கள் நல்ல நம்பிக்கை அடைவார்கள். விவசாயம் குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம் – maatha ithazh november 2022.
பரிகாரம் தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

– முத்துசாமி அஞ்சல் துறை ஓய்வு

You may also like...