இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை

பேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo

idai veliyil udaiyum poo

அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும், இது கவிஞருக்கு இரண்டாவது புத்தகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று “கவிஞர் வைரமுத்து” அவர்கள் வருணிப்பதிலிருந்தே கவிதை வரிகளின் ஆளுமை மற்றும் ஆழமான உண்மையை உணர முடிகிறது. ஈரோடு “இடையன் இடைச்சி நூலகம் வெளியீடு” செய்த 112 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்திற்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் “கவிஞர் க. அம்சப்ரியா” அவர்கள் வழங்கிய வாழ்த்துரை வாயிலாக கவிஞரின் வரிகளில் நிரம்பிய ஆத்மார்த்தமான எண்ணங்கள் வெளிப்படுகின்றன.

மீன் சாலையின் ப்ரம்ம வாசம்

பழத்தை தின்றுவிட்டு பயனில்லை என தூக்கிப்போட்ட புளியம்பழ விதைகளை பல்லாங்குழிக்கென எடுத்து சேர்த்து வைத்த பருவம் எய்தாப் பேதையின் ஆர்வம் எனச் சொல்லலாம் என்று தனது என்னுரையில் தன் கவிதைகளுக்கு ஒரு சிறப்பான முன்னுரை தந்தது இதயங்களோடு பயணிக்க வைக்கிறது.

கவிஞர் தனது முதல் கவிதையான மீன் சாலையின் ப்ரம்ம வாசம் வாயிலாக இழப்பின் வலியை உணர்த்துகிறார்.

“பேரிளம் பெண்ணை பெதும்பையாக்கி
குழவியாக்கிக் சுற்றியாட்டி
தெருக்கோடியில் விட்டுச் செல்கிறாய்
திரும்பி பார் இங்கே கிடப்பது
உன்னை சுவைத்து வறண்ட நா
உன் பார்வையில் மலரும் பூ
மேலும் உன்னில் வீழ்ந்து
உப்பான ஒரு துளி.”

அன்பின் வலி – அலைபேசி பைத்தியம்

அன்பின் வலியை இதைவிட எதார்த்தமாக சொல்லிவிட இயலாது என நம்புகிறேன்.

“தோளிலொரு பையோடு
கைபேசியில் கண் வைத்து
குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி
விழப்போகும் எவளையுமினி
அலைபேசி பைத்தியமெனத் தீர்ப்பிட்டு
சபித்து விடாதீர்கள்.

தனிமையை கட்டிக்கொண்ட காதல்காரியின்
கடைசித் தேடலின் வலிகளை
வார்த்தைகள் உரைக்கவியலாது
வேண்டுமெனும் போதெல்லாம்
உடனே கைபிடித்துக் கொள்ளும்
அத்தனிமை போன்றதொரு
ஆகச் சிறந்த துணை வேறொன்றில்லையென்று
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்.”

இக்கால பெண்களை குறைகூறித்திரியும் பலருக்கு உணர்த்த வேண்டிய விடயம். அந்த நிகழ்வில் தடுமாறி விழும் பெண்ணின் எண்ணத்தையும், பார்வையாளரின் எண்ணத்தையும் அதை தான் பார்த்த விதத்தையும் நேர்த்தியாக வரிகளில் கவிஞர் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

மரப்பூவின் துளி மொழி

மேலும் கவிஞர் எழுதிய “ஒரு மாமரத்தின் கதை”, “பறவை மொழி” போன்றவை பிரபஞ்ச எட்டில் வாழ்க்கையை பொறிக்க பாடுபடும் வரிகளாக கருதலாம். மேலும் “மரப்பூவின் துளி மொழி” தனில் மொழியப்பட்ட குறுங்கவிதைகள் பெண்மை பேசும் புதுமை என்றே கூறலாம்.

“முதுகில் சுமைதான்
செத்துப் போகவில்லை
நத்தைகள்”

“கைகளை
அடிக்கடி கழுவியதில்
சுத்தமானது காசு”

“கொரங்கு சொன்னாலும்
கொரோனா சொன்னாலும்
கேட்பான் மனுசன்
பழம் தின்னு”

என்ற வரிகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் கோரோனா காலத்து நிசங்களை வட்டார வழக்கில் அற்புதமாக எழுதியிருப்பார்.

காதல் மலைச்சாரல்

“ஒரு புல்
ஆட்டை மேய்க்கிறது
உன் தாடி”

“உனக்கு ஆயிரம்
வேலைகள் இருக்கும்
எனக்கு அத்தனையும்
நீயிருந்தால் தானே இயங்கும்”

என்ற வரிகளில் காதல் மலைச்சாரலில் தொலைக்க வைத்திருப்பார். இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். நூல் தேவைக்கு நீரோடையை அணுகவும்.

– நீரோடை மகேஸ்..

You may also like...

6 Responses

 1. என்.கோமதி says:

  கவி வரிகள் அருமை…நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு

 2. தி.வள்ளி says:

  மிக அருமையாக நூலின் சிறப்பை …கவிதைகளின் நயத்தை …எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை ..விளக்கியது விமர்சனம். மிகவும் அருமையான விமர்சனத்தை தந்த நீரோடை மகேஷ்க்கு வாழ்த்து ..

 3. Priyaprabhu says:

  நல்ல கவிதைகள்… விமர்சனம் நன்று..💐💐

 4. SIVARAMAKRISHNAN says:

  சிறப்பு..சகோ

 5. N.shanmugapriya says:

  கவிதை அனைத்தும் மிக அருமை…….3 வரிகளில் அற்புதமான படைப்புகள்…

 6. அன்புத்தோழி ஜெயஸ்ரீ says:

  மிக்க நன்றி நீரோடை மகேஷ் அவர்களே, இன்றுதான் வாசிக்க நேரம் வாய்த்தது.. அன்பின் நன்றிகள். பயணிப்போம்.

  – அன்புத்தோழி ஜெயஸ்ரீ 💐💐💐💐