கவிதை தொகுப்பு 56

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56

kavithai thoguppu 41

நதியாய் நான்.. நிலவாய் நீ..

ஒவ்வொரு முறையும்
என்னுள்
ஆழப் புதைந்தும்..
அசையும் அலைகளில்
ஆடி மகிழ்ந்தும்..
தழுவியும் நழுவியுமாய்
காதல் செய்கிறாய்..

என்னுள் உன்னைப் பார்க்கிறாய்
உன்னுள் என்னைப் பார்க்கிறேன்

கோபமோ தாபமோ
எனை நிறைக்கும்
வேளைகளில்
ஊடல் கொண்டு
விலகிப் போனாலும்
இறுக்கமாய் தழுவி
இணைந்தே இருக்கிறாய்..

சிலவேளைகளில்
காற்றின் சிலும்பலில்
தெறித்துப் பரவிய
உன் ஒளிச் சிதறல்களோடு
வெகு தூரம் பயணிக்கிறேன்..

பிறையாய் குறைந்தும்
நிறையாய் வளர்ந்தும்
உனதன்பு மெல்ல மெல்ல
உயிர்வதை செய்கிறது..

முழுதாய் நீ பிரகாசிக்கும்
நாட்களில் மட்டுமே
என்னுள் ஆனந்தப் பிரவாகம்..

வெகு தொலைவில் இருந்தாலும்
காதலும் காமமுமாய்
சட்டெனப் பரவும்
உன் அணைப்பின் இறுக்கம்
அலாதியானது..

நீயற்ற இரவுகள்
நீள் பொழுதின்
நகர்வுகள்..
மௌனமாய் கரையும்
ஆசை உணர்வுகள்
அன்பின் வலி கூட்டும்..
ஆலிங்கன நிகழ்வுகளும்
ஆலாபனைப் பொழுதுகளும்
நினைவில் தணல் மூட்டும்..

உன் முகம் பாராமல்
உருகும் என்னுயிரும்
உனைத் தேடியே
வானம் வந்தடைந்து
மேகமாய் முதிர்ந்து
கெஞ்சலுமாய் கொஞ்சலுமாய்
தன்னுள் உன்னை
களவாடிக் கொண்டே
இன்னும் இன்னுமாய்
காதல் செய்கிறது.. – kavithai thoguppu 56

– ப்ரியா பிரபு, நெல்லை


பட்டம் பல படித்தாலும் போதாது,
நேராநேரத்துக்கு புசித்தாலும் போதாது,
கடமையென்று ஒன்றுண்டு…
அதை செய்ய தவறுகிறேனோ
என்ற மனமும் உண்டு

படிக்காத பாமரர்கள்
புரிந்து கொள்ள
பல படிப்பு நான் படித்தும்
மூளையில்லா முட்டாளாகவே வலம் வருகிறேன்

நாடு எனக்கென்ன செய்தது என்ற கூற்றை
ஒழித்து
இந்நாட்டிற்கு நான் என்ன செய்தேன்
என்று தான் உணர்ந்து
தனிமையில் நாம் கிடைக்க

எங்கெங்கிலும்
பாதுகாப்பாய் என்னை சுற்றி
பலவட்டங்கள் போட்டாலும்,
தனிகட்டங்கள் போட்டாலும்
அனைத்துக்கும் அடங்காமல்
செம்மறி ஆடுகளோடு
தாவிய செம்மறி ஆடாக
நான் சுழல,
முகக்கவசம் கூட அணியா
முட்டாளாய் நான் வலம்வர…

காத்திருந்த கொள்ளைக்கொரோனாவோ
கொத்திக்கொண்டு பறந்து விட
அனாதையாக உயிர்பிரிந்து
அனைவரையும் நான் வதைத்து
நீங்கா துயர் கொள்கிறேன்….

இனியாவது தனித்திருங்கள்
வீட்டிலே விழித்திருங்கள்
பொழுது இனிமையாய்
பிறக்கும் வரை
பொறுமையாய் காத்திருங்கள்

– அ.மு. பெருமாள் (அர்ஜுன் பாரதி)


மழையாய் நீ..

ஒவ்வொரு முறையும்
உன் வருகையை
வரவேற்று..
மனம் களித்து
மயில்கள் ஆடலாம்..
வண்ணங்களை நிறைத்து
வானமும் கொஞ்சம்
வளையலாம்..
நதிகளில் மீன்கள்
அணிவகுப்பாய்
அசைந்தாடி
இரைகொண்டு செல்லலாம்..
நெஞ்சம் மயங்கும்
ராகத்தை இசைத்து
தும்பியும் பறக்கலாம்…
அடைகாக்கும் பறவைகள் முதல்
அசைந்தாடும் அலைகள் வரை
நீ வரப்போகும்
சேதியை அறிந்து
அனைத்தும் ஆனந்தமடையலாம்
இருப்பினும் அன்பே..
உயிர்ப்பூவை மலரச் செய்யும்
உன் ஒற்றைத் தழுவலுக்காய்
தவமிருக்கிறதடா
இந்த பூமி..

– ப்ரியா பிரபு, நெல்லை


நண்பர்கள் தின வாழ்த்து..

சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும்…
நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்….!

வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்…!

ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்….

நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.

நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.

நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.

நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.

நீ செய்த தவறை
சரி என நியாயப்படுத்தும்
நட்பை விட நீ செய்தது
தவறு தான் என்று
சுட்டிக்காட்டும் நட்பே
சிறந்த நட்பு….

நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்….
நல்ல நட்பை மதிப்போம்….!!!

– லோகநாயகி சுரேஷ், காஞ்சிகோவில்


கடந்த மாத போட்டிக்கு வலைத்தளத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்வதற்கு பதிலாக மின்னஞ்சலில் அனுப்பிய கவி சொந்தங்களை ஊக்கப்படுத்தும் விதமாக கீழ்காணும் கவிதைகளை வெளியிடுகிறோம்

தங்கள் வாழ்வை மாற்றிய அந்த நிமிடம்…

முதல் நாள் கல்லூரியில்
நுழையும் போது பயம்

முடித்து விட முடியுமா
இந்த நான்கு ஆண்டுகளை

கொஞ்ச தயக்கமும் பதட்டமும்
அழையா விருந்தாளியாக வர

புது நட்புகள் கை கோர்க்க
கவலையின்றி பயணித்த முதலாமாண்டு

தேர்வில் தோல்வியை சந்திக்க
உடைந்தேன் மனதளவில்

சிலரின் பேச்சுகளை கடந்து வர
முயன்று தோற்றேன்

நன்றாக பயணித்த பாதையில்
தடுமாறி நின்றேன்

தோல்வியால் கற்ற அனுபவம்
என்ற பாடத்தால் வென்றேன்

ஒருமுறை பெற்ற தோல்வியால்
முதலிடம் வந்தேன்

தோல்வி என்ற உளி
என்னை செதுக்கியது

வாழ்வில் மறக்க முடியாத
தருணமும் அதுவே… – kavithai thoguppu 56

– கவினி


அப்பா நம் சொத்து

ஆதியின் ஒளி வடிவாம் அது
அண்டத்தில் கலந்து நின்று
கோடானு கோடியாய்
குறுவடிவம் தான் கொண்டு
ஈரண்டதுவாய் மெய் கொண்டு
மூன்றதுவாய் குணம் கண்டு
நான்கதுவாம் நெறி நின்று
ஐந்தறிவாய் பொறி உணர்ந்து
ஆறதுவாய் உயிர் பெற்று
ஏழதுவாம் ஒலி, ஒளியுடனே
எட்டதுவாய் உருவம் கண்டு
ஒன்பதுவாம் துவாரத்தின்
பத்ததுவாய் பொருந்தி வந்து
இச்சகத்தில் பிறந்திட்ட
பெரும் பயன் அனைத்துமே
உன்னையே சாருமன்றோ
உலகாளும் நாயகனே
உன் பதமே போற்றி! போற்றி!

– லதா குமார், மிச்சிகன், வட அமெரிக்கா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *