கவிதை தொகுப்பு 58
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் லோகநாயகிசுரேஷ் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீரோடை கவிதை போட்டியில் இரு பரிசுகள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது – kavithai thoguppu 58
அப்பா
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு…
தன் மூச்சு உள்ள வரை
என்னை நேசிப்பவர்…
எனக்காக
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்…!
அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது…!!!
அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது…
அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்…!!
தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்…
உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது…..
இத்தனை நாள் என்னை தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
“அப்பா”என்று…..
அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்..
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக் கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்…..
அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது….
கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள்.. கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
“அப்பா”.
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான். அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா….
சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.
நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்…!
அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு
இந்த அப்பா கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த
உதவியாக இருக்கும் என நம்புகிறேன்…
அம்மா
வறுமைக்கு வாக்கப்பட்டவள்…
வாயிருந்தும் ஊமையாய்…
என் அப்பாவின் ஆணைக்கு அடங்கியவள்….!!
ஓட்டை சேலையை கட்டி கொண்டும்
எனக்கு ஒட்டியாணம் கட்டி பார்க்க ஆசைபடுபவள்….
தலையில் மண் சுமந்தாலும் மனதில் என்னை சுமப்பவள்…..
அவள்தான் என் தாய்…..
என்னவன்
நம்பிக்கையற்று போன என்
வாழ்வில் வந்தான் ஓர்நாள்
ஏனோ அவனிடம் பேசும்போது மட்டும்
ஓர் குழந்தை கைநிறைய மிட்டாய்களை
வைத்து கொண்டு சிரிப்பது போன்ற ஆனந்தம்…..
என்னவனுக்கும் எனக்கும்
உள்ள காதல் மழலை சிரிப்பு போல்
கள்ளங்கபடம் இல்லாதது….
துயரங்களும் காதலின் உரையாடலில்
காணாமல் போனது…
என்னிலே பாதி,என் புன்னகையின் மீதி
எத்தனை தூரம் தள்ளி இருந்தாலும்
அருகில் இருப்பது போலவே உணர வைப்பவன்……
சில நேரம் கண்ணீர் தந்தபோதும் அதற்காக அவனே வாடுவான்……
ஆண்மையிலும் தாய்மை கொண்டது
அவனது மனம்….. தவமேதும் நான்
செய்யாமல் எனக்கு கிடைத்த வரம்…
தன்னலம் அற்று என்னலம் பாதுகாக்கும்
என் அன்புக்குரியவன் என்னவன்…..
மகள் அதிகாரம்
அறை அதிரும் அழுகையோடு
அழகாய் தொடங்குகிறது
இந்த அகிலத்தில் அவள் வரவு
தத்தி நடக்கும் நடை அழகு
சிரித்து பேசும் மொழி அழகு
சின்ன சின்ன கண் உருட்டி👁️
சித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு
அப்பாவின் அழகி
அம்மாவின் மாமியார்
அண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்
கொலுசு ஒலி ஊரை கூட்ட
பூமியில் அவள் பாதம் பதிய
பறவையாய் அவள் பறக்க
பார்ப்பவர்கள் தான் வியந்து நிற்க
நாம் சொக்கிட தான் சிரிப்பு ஒன்று உதிர்த்திடுவாள்
பட்டு பாவாடையில் அவள் பவனி வரும் போதெல்லாம்
ஊர் கண் பட்டுவிடுமோ என்று பதறுகிறது
பெற்றவள் நெஞ்சம்
மழலையில் அவள் அனைவரையும்
மிரட்டிடும் அழகில்
மயங்கி நிற்கிறது என் நெஞ்சம்
முல்லை சிரிக்கும் பிள்ளை முகம்…
கள்ளம் இல்லாத வெள்ளை மனம்..
பனியாய் மறையும் உள்ளத்தின் சினம்.
கனிந்த அமுதாய் இனித்திடும் குரல்…
பத்து நிமிடம் அவளிடம் பேசினால்
பறந்து போகும் பலரது அகந்தை…
புன்னகை செய்யும் இதழ்கள் இரண்டில்…
கொட்டி கிடக்குது ஆயிரம் கவிதைகள்…..
இரண்டு வயது அடைந்து விட்டாள்..
இருநூறு மனங்களை கவர்ந்து விட்டாள்….
செல்லமாய் வளர்கிறாள்…
அவளுடன் இருப்பதால் நானும் ஆகிவிட்டேன்
குழந்தையாய்…..
தன்னம்பிக்கை
துணிந்து எழுந்து பார்!
எரிமலையும் சிறு பொடியே.!
மலையைக் கொடையும் உளியாய் மாறிப்பார்!
மலையும் உமக்கு தூசியே/
ஓட ஓட விரட்டுவோரை!
ஒரு நிமிடம் நின்று முறைத்துப்பார் !
அன்றே நீ வல்லவனே.”
இடிமேல் இடி வாங்கும் வானமாய் !
தோல்வியைக் கண்டு
தயங்காமல் முயன்று பார் !
இடையூறு கொடுப்போரின் !
தொடை நடுங்குமே
விழாமல் நடக்க முற்படாதே!
விழுந்து எழுந்து பார்- உன்
பாதத்தின் பலம் உமக்குப் புரியுமே.!
கெஞ்சி இருக்காதே !
உரியதை தட்டிக் கேட்டுப்பார் !
எட்டி நிற்பான் எதிரியும்…..!!! – kavithai thoguppu 58
– லோகநாயகிசுரேஷ்
நீரோடை சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் லோகநாயகி…
கவிதைகள் அனைத்தும் அருமை ஒரு நூலில் கோர்க்கப்பட்ட அழகிய முத்துக்களாய் ஒளிர்கிறது ..தாயின் அன்பு அலை எனில் தந்தையின் அன்பு ஆழ்கடல் அருமையான அலசல்.. வாழ்த்துக்கள் இளங்கவியே..
நன்றிங்க வள்ளி அக்கா…..