கவிதை தொகுப்பு 61

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61

kavithai thoguppu neerodai

மழலையில் வறுமை

பெற்றோரின் துயர நோய்
தாயின் கற்பத்திலே வளர்ந்து
வறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும்

மழலை பிறந்ததும்
புது வறுமை பிறந்திடும்
அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்
வயதை மீறி பிறந்திடும் கவலை
மழலையின் கவலையா
பிறப்பின் கவலையா

மழலையின் வயிற்றிலே மறைந்திருக்கும் பஞ்சம்
மிச்சம் மீதி உணவையும் அமிர்தமாய் காட்டிடும்
கொடுக்க ஏதுமில்லா குழந்தையிடம்
தன்மானத்தை வாங்கி‌ சோறு போடும் இந்த வறுமை

மழலைக்கும் உண்டு சிறு மானம்
சிறு மானத்தை மறைப்பதிலே பெரும் பஞ்சமா
எங்கே கிழிந்த ஆடை
கிழிந்த ஆடையை புத்தம் புதியதாய்
சலவை செய்திடுமே இந்த வறுமை

வண்ண தொலைகாட்சியில் கார்டூன் பார்க்க ஆசையா உனக்கு
வறுமை உன்னை பார்க்க விடுமா
சின்னஞ் சிறு கைப்பேசியை திரையரங்கமாக மாற்றி
கொடுப்பதுதான் இந்த வறுமை

வீதிகளிலே ஓடி விளையாடுது வறுமை
இதை கண்டு களிக்கிறது சமூகம்
பிஞ்சு விரல்களை பிச்சை பாத்திரமாய் ஆக்குவதோ இந்த வறுமை

மாட மாளிகையின் நிழலில் நிற்க மட்டுமே உதவும் இந்த வறுமை
குடிசை வீட்டையும் கோபுரமாய் மாற்ற உதவிடுமா
குடிசையும் இங்கே கோபுரமாவது
மழலையின் குழையும் சிரிப்பினால்

வறுமையின் ருசி வெறுமையே
மழலையே வெறுமையை ருசிக்காதே
வெறுமையை உன் பெருமையான புன்னகையால் விற்றுவிடு

ஆடம்பரம் தெரியாத வயது உனக்கு
ஆடம்பரத்தை பார்த்து ஏன் ஏங்குகிறாய்
உழைப்பு என்னும் சொத்தை சேர்த்துக்கொள்
வரும்நாளில் ஒருநாள்
வறுமையே பெருமை கொள்ளும் உன்னை கண்டு – kavithai thoguppu 61


வரதட்சணை கவிதை

கல்யாணம் முன் காதல் இலவசமா
கல்யாணம் பின் காதல் என்ன கட்டணமா
கட்டணம் செலுத்தி பெற்ற வெறும்
ரசீதுதான் இன்றைய திருமணம்

குற்றம் ஏதும் செய்யாமல் பெண்ணே
வரதட்சணை என்னும் சிறையில் சிக்கி தவிக்கிறாயே
இது என்ன உன் பூர்வ ஜென்ம கடனா
ஆண் ஆணவமாக தன்னை நினைக்கும் தருணம் அது
ஆண் அங்கே பலமாகிறான்
பெண் அங்கே பலவீனமாகிறாள்


மலை கவிதை

மலையே !
செதுக்காத பெரும் பாறையே
மரங்களும் செடிகளுமே
உன்னை செதுக்கிய சிற்பிக்கள்…
இத்துனை உயரம் இருக்கிறாயே
இயற்கை பெற்ற மூத்த பிள்ளையா நீ
உன் உயரத்தால் நீரும் நீர்வீழ்ச்சி ஆக கண்டேன்
கருமேக கூட்டங்கள் முதலில் உன்னையே குளிப்பாட்டும்
அதன் பாசத்தாலே பனிமலையாய் நீ உருகுகிறாய்
சுடும் சூரியனும் முதலில் உனக்கே தலை துவட்டும்
இதன் பாசத்தாலே எரிமலையாய் நீ குமுறுகிறாய்


ராகவா லாரன்ஸ் கவிதை

சாதரணமாய் இருந்தாய்
அசாதாரணமாய் மாறினாய்
எனினும் சாதரணமாய் இருக்கிறாய்

கருமேகத்திடம் மழையை கேட்டேன்
அது திசை மாறி போனது
உன்னிடம் நான் கேட்காமலே
அன்பு மழை பொழிகிறாய்

தோல்வி உன்னை அவ்வப்போது தொட்டு செல்கிறது
அதன் தோல்விக்காக
வெற்றி உன்னை என்றும் சுமந்தே செல்கிறது
அதன் வெற்றிக்காக

பணத்திற்கும் முடிவை கண்டேன்
உன் குணத்திற்கு தொடக்கத்தை மட்டுமே கண்டேன்

இறைவன் உன்னை கவனித்து கொண்டிருக்கிறான்
ஏனென்றால்
உன் செயல் அவனையும் மிஞ்சுகிறது

உன்னை மனிதன் என்று சொல்ல மாட்டேன்
உன்னை அப்படி சொன்னால்
நான் எப்போது மனிதன் ஆவது?

உன்னை இறைவன் என்று சொல்ல மாட்டேன்
உன்னை அப்படி சொன்னால்
அறம் செய்வது நீ ஆகிறாய்
பெயர் வாங்குவது அவன் ஆகிறான்

நடிகர்
நடன இயக்குனர்
இயக்குனர்
இசையமைப்பாளர்
பாடலாசிரியர்
தயாரிப்பாளர்
வள்ளல்
யார்? என்றால்
சின்ன குழந்தையும் சொல்லும் “மக்கள் சூப்பர் ஸ்டார்” என்று

கலைகள் உன்னை காதலிக்கிறது
அதனால்தான் எல்லா கலைகளும் உன்னுடன் உரவாடுகிறது

நீ செய்யாத அறம் உண்டா?
அவ்வளவு புண்ணியம் செய்தவனா நீ எல்லா புண்ணிய நதிகளும்
உன் காலில் பட்டு புனிதமடைகிறது

தாயிற்கு உதாரணம் எந்த தாயும் இல்லை
மகனுக்கு உதாரணமாய் நீ இருக்கிறாய்

“காலே இல்லனு கவலை வேண்டாம்”
என்று நடனத்திற்கே நடனம் சொல்லி கொடுத்தாய்
கலாமின் காலடி சுவட்டில் விண்னை தொட்டாய்

ஒரு மனிதனுக்கு இத்தனை சிறப்புகளா?
உன்னை வர்ணித்து கவிதையும் கலைப்படைந்தது
அதனால் நானும் நிறுத்திக்கொள்கிறேன் – kavithai thoguppu 61


கொரோனா கவிதை

கண்ணுக்கு தெரியாமல் பிறந்து
கண்ணெதிரே வாழ்ந்து காட்டுகிறாய் கொரோனா
ஆனால்
உன் வீரத்தை கண்டு புகழ்வார் இங்கு யாருமில்லை
உன் ஈரமில்லா இதயத்தை கண்டு இகழ்வாரே அதிகம்
உன் எண்ணிக்கையை பெருக்கி கொள்ள
மனித எண்ணிக்கையை ஏன் குறைத்து கொண்டிருக்கிறாய்
சமூக இடைவெளியை பயன்படுத்தி
அந்த இடைவெளியில் ஆசனம் போட்டு அமர்ந்து கிடக்கிறாயே
உன் ஆட்சி பெரும்பான்மை உள்ளவரை தான் நிலைத்திருக்கும்
நாங்கள் எப்போதோ உன்னை கை கழுவி விட்டோம்
உன் பசிக்காக மனித உயிர்களை உண்கிறாயே
நீ எப்போது கை கழுவ போகிறாய்?
உன்னிடம் முகம் காட்டாமல்
முகமூடிகள் போட்டு திரிந்தாலும்
எங்கள் முகத்திரையை எப்படியோ கிழித்து விடுகிறாய்
ஆளில்லா ஊருக்குள்ளே கூடாரம் போட்டதாய்
இருமாப்பு கொள்ளாதே
இயற்க்கை உன் கூடாரத்தை விரைவில் கலைந்தெரியட்டும்

– ஸ்ரீகாந்த் லாரன்ஸ்

You may also like...