குறுந்தொகை பகுதி 5
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 5
செய்யுள் விளக்கம்
- இன்பமுமு துன்பமும்
பாடியவர்: அணிலாடு முன்றிலார்
துறை: தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள். அத்தோழிக்கு தலைவி கூறியதாக அமைந்த பாலைத்திணைப் பாடல்.
“காதலர் உழையர்ஆகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில்ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்என்று
அலப்பென் தோழிஅவர் அகன்ற ஞான்றே”
விளக்கம்: தோழி! தலைவர் பக்கத்தவராக இருக்கும்போ து மிகவும் மகிழ்ச்சியடைத்து, விழா நடந்து கொண்டிருக்கும் ஊரில் உள்ள மக்கள் மகிழ்வது போல நிச்சயமாக மகிழ்ச்சியை விரும்பி வாழ்வேன். அவர் என்னை விட்டு பிரிந்து போன காலத்தில் பாலைவனத்திலே அமைந்த அழகிய குடிசைகள் அமைந்த சிறிய ஊர்களை விட்டு மக்கள் விட்டுபோன அணில் விளையாடிக் கொண்டிருக்கும் வாசலை உடைய தனிமையான வீட்டை போல என் அழகிழந்து வருந்துவேன்.
கருத்து: தலைவர் இருந்தால் மகிழ்வேன் பிரிந்தால் வருந்துவேன்.
அருஞ்சொற்கள்: உழை – பக்கம்; சாறு – திருவிழா; புகல் – விருப்பம்; புலம்பு – தனிமை; அலப்பென் – வருந்துவேன்
- நட்பு ஒழியாது
பாடியவர்: கபிலர்
துறை: இரவில் தலைவியை சந்திக்க விரும்பிய தலைவனிடம் இரவில் சந்திக்க முடியாவிடினும் தலைவின் அன்பு குறையாது என தோழி சொல்லியதாக அமைந்த குறிஞ்சித்திணைப்பாடல்.
“காமம் ஒழிவது ஆயினும், யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடர் அகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே”
விளக்கம்: நள்ளிரவிலே தொகுதியான பெரிய மழை பெய்வதால் அருவியாக வீழ்கின்ற நீர் மறுநாளும் மலை பிளவுகளிலே வீழ்ந்து முழங்கிக் கொண்டிருக்கின்ற மலை நாட்டையுடையவனே! இரவிலே கூடும் காமக்கூட்டம் இல்லையானலும் உன்னிடத்திலே எமக்குள்ள அன்பின் பிணைப்பு அறுந்து விடுமோ? அறுந்து விடாது, அழியாது.
கருத்து: தலைவியும் நீயும் இரவில் சந்திக்கா விட்டாலும் அவளுக்கும் உனக்கும் உள்ள அன்பு குறையாது.
- ஆண்மை தந்த அல்லல்
பாடியவர்: ஔவையார்
துறை: தலைவன் பிரிவால் என் நெஞ்சம் நல்ல பாம்பால் கடிக்கப்பட்டவரைப் போல துன்புறுகின்றது என தலைவி கூறிய பாலைத்திணைப் பாடல்.
“செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே;
ஒல்வால் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே;
ஆயிடை, இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி ஆங்குஎன்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு உறுமே”
விளக்கம்: தலைவர் நம்மை பிரிந்து போக மாட்டார் என அலட்சியமாக இருந்தேன். நம் பிரிவுக்கு சம்மதிக்க மாட்டாள் என்று துணிந்து அவர் நம்மிடம் சொல்லாமல் விட்டுச் சென்றார். அக்காலத்தில் இருவரிடமும் உண்டான பெரிய துணிவினால் நேர்ந்த சண்டை நல்ல பாம்பு கடித்ததைப் போல என் உள்ளம் நிலைகுலைந்து தடுமாறுகிறது.
கருத்து: நானும் அவரை தடுக்கவில்லை; அவரும் என்னிடம் சொல்லாமல் போய்விட்டார் அதனால் நான் நெஞ்சம் குழம்புகிறேன்.
அருஞ்சொற்கள்: நல்லரா – நல்அரா – நல்ல பாம்பு; கதுவுதல் – பற்றுதல், வலிந்திழுத்தல்
- இன்னும் காணேன்
பாடியவர்:வெள்ளி வீதியார்
துறை: தலைவியை தேடிச் சென்ற செவித்தாய் பாலைவனத்தில் சோர்வடைந்து சொல்லிய பாலைத்திணைப் பாடல்
“காலே பரிதப் பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகல் இருவிசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ்வுலகத்து பிறரே”
விளக்கம்: என் கால்கள் விரைந்து நடக்க முடியாமல் சோர்வடைந்தன. என் கண்கள் வருவோர் போவோரையெல்லாம் பார்த்து பார்த்து ஒளியிழந்தன. இவ்வுலகத்தில் நான் கண்ட பிற தம்பதிகள் வானத்தில் காணப்படும் நட்சத்திரங்களைக் காட்டிலும் பலராவர்.
- கற்பின் பெருமை
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
துறை: பரத்தையர் பாற் சென்றிருந்த தலைவன் விடுத்த தூதர்களிடம் தலைவியின் உடன்பாட்டை தோழி குறிப்பால் கூறிய மருதத்திணை பாடல்:
“காலை எழுந்து கடும்தேர் பண்ணி,
வால்இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதுஎன
மறுவரும் சிறுவன் தாயே:
தெறுவது அம்ம! இத்திணை பிறத்தல்லே”
விளக்கம்: காலையிலே விழித்தெழுந்து விரைந்து செல்லும் தேரை செல்வதற்கு ஏற்ப அமைத்துழ ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த பரத்தையரை தழுவிக் கொள்ளும் பொருட்டு போன செழிப்புள்ள ஊரையுடைய தலைவன், பரத்தையர் நண்பன் என்பதை எண்ணி, ஆண்மகனை பெற்றெடுத்த தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள். ஆயினும் மனம் குழம்புவாள். இந்த சிறந்த குடியிலே பிறத்தல் துன்புறுவதாகும்.
கருத்து: கற்புள்ள குடியில் பிறந்தவள் தலைவி; ஆதலால் கணவன் தவறு செய்தாலும் அவனை ஏற்றுக் கொள்வாள்
- அங்கும் உண்டு
பாடியவர்: மாமலாடன்
துறை: தலைவன் பிரிவினால் தலைவி வருந்துவாளென தோழி கவலைப்பட தான் வருந்தவில்லையென தலைவி விடையளித்த மருதத் திணைப்பாடல்:
“ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண்தாது குடைவன ஆடி,
இல்இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி! அவர்சென்ற நாட்டே”
விளக்கம்: அல்லி மலரின் வாடிய இதழ்களைப் போன்ற குவிந்த சிறகுகளை உடைய. வீட்டிலே வாழ்கின்ற குருவி முற்றத்திலே காய்ந்து கொண்டிருக்கின்ற தானியங்களை தின்று, பொதுவிடத்திலே உள்ள எருவின் நுண்மையான பொடிகளை குடைந்து விளையாடி மீண்டும் வீட்டிலுள்ள தமது இடத்திலே குஞ்சுகளோடு தங்கியிருக்கும், பிரிந்தவர்க்கு துன்பம் தரும் இத்தகைய காட்சியுள்ள மாலை காலமும் தனித்து உறையும் வருத்தமும் அவர் சென்றிருக்கும் நாட்டில் இல்லையோ?
கருத்து: தலைவரும் என்னைப் போல பிரிவினால் துன்புறுவார் ஆதலால் விரைவில் திரும்பி வருவார்.
- முன்னிலைப் பழமொழி
பாடியவர்: நெடு வெண்ணிலவினார்
துறை: இரவுக்குறியிலே ஒழுகும் தலைவனுக்கு தோழி மணம் புரிந்து கொள்ளும்படி சாடையாக கூறிய தோழிக் கூற்று
“கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும்: காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் நிலவே!”
விளக்கம்: நீண்ட நேரம் காணப்படும் வெண்ணிலாவே, வலிமையான அடிபாகத்தை உடைய வேங்கை மரத்தின் மலர்கள் சிந்திக் கிடக்கின்ற உருண்டையான கற்கள் பெரிய புலிக்குட்டி போல தோன்றுகிற காட்டின் வழியாக இரவிலே வருகின்றவராகிய தலைவருடைய களவொழுக்கத்திற்கு நீ நன்மை செய்யவில்லை.
கருத்து: இன்னும் களவொழுக்கத்தில் நீடிப்பது நன்றன்று தலைவியை மணந்து கற்பொழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
(முன்னிலைப் புறமொழி எனில் சாடை பேசுதல் என அறிந்து கொள்க.)
- தலைவன் இரங்கானோ!
பாடியவர்: பூங்கணுத் திரையார்
துறை: தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி, தலைவன், ‘மணந்து கொள்வேன்’ என்னும் உறுதி மொழியை உரைக்க மாட்டானா? எனக் கூறி வருந்திய தோழி கூற்றான பாலைத்திணைப் பாடல்:
“தாதில் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்
இன்ன பண்பின் இனைபெரிது உழக்கும்;
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே”
விளக்கம்: நறுமணமுள்ள பொடிகளால் செய்யப்பட்ட மிகுந்த குளிர்ச்சியுடைய விளையாட்டுப் பதுமை காலைப் பொழுதிலே வருத்துகின்ற துன்பத்தை நீக்கி காப்பாற்று என்று விளையாடுகின்ற கூட்டமான பெண்கள் சொல்வதைக் கேட்டும் இவள் இத்தன்மையிலே இருந்து பெரிதும் வருந்துவாள். ஆதலால் இந்த நல்ல நெற்றியை உடையவளது பசலை நிறம் நீங்கும்படியாக இவளுக்கு விருப்பமான தன்மையுள்ள ஒரு சொல்லைக் கூற காதலருக்கு முடியாதோ?
கருத்து: தலைவன் ‘மணக்கிறேன்’ என்ற உறுதியும் கெடுவும் உரைத்தால்தான் இவள் துன்பம் தொலையும்.
- என்றும் பிரியோம்!
பாடியவர்: அம்மூவனார்
துறை: பரத்தையரை நாடிச் சென்ற தலைவன் மீது சினங் கொண்டிருந்த தலைவி அவனைக் கண்டதும் சினம் மாறித் தழுவிக் கொண்டு அன்பை வெளிப்படுத்திய தலைவிக் கூற்றாக நெய்தல் திணைப் பாடல்.
“அணில்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீஆகியர் என்கணவனை!
யான் ஆகியர் நின்நெஞ்சு நேர்பவளே”
விளக்கம்: அணிலின் பல்போன்ற முள்ளையுடைய; மகரந்தம் நிறைந்த முல்லைக் கொடியையும்; நீல மணியின் நிறத்தைப் போன்ற நீரை உடைய கடற்கரையும் உடைய தலைவனே! இப்பிறவி நீங்கி மறுபிறப்பு உண்டாகினும் என் கணவன் நீயே ஆகுக; உன் மனதிற்கிசைந்த மனைவி யானே ஆகுக.
கருத்து: நம்முடைய அன்பு எப்பிறவியிலும் தப்பாது தொடர வேண்டும்.
- இதுதான் ஒழுங்கோ
பாடியவர்: குன்றியனார்
துறை: தலைவனிடமிருந்து வந்த தூதர்களிடம் தலைவி கூறிய மருதத்திணைப் பாடல் இது:
“ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலோடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர்ஊரே; இறைஇறந்து
இலங்குவளை நெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர்மணந்த தோளே!”
விளக்கம்: வெண் சிறு கடுகு போன்ற சிறிய மலர்களாகிய ஞாலற்பூக்கள், சிவந்த மலர்களாகிய மருத மரத்தின் பழம் பூக்களோடு கலந்து அவர் ஊரிலுள்ள நீர்த் துறையை அழகு செய்தது. முன்பு அவரால் தழுவப்பட்ட எனது தோள், சுடர்விடும் வளையல்கள் மூட்டுவாய் கடந்து சுழலும்படி மெலிந்து தனிமையை தாங்கியிருந்தது.
கருத்து: அவர் என்னை பிரிந்தமையால் நான் உடலும் உள்ளமும் மெலிந்தேன்.
– மா கோமகன்