நாலடியார் செய்யுள் விளக்கம்

இன்று முதல் இலக்கிய சனி, ஞாயிறு பகுதியில் நாலடியார் செய்யுள் விளக்கம் (மூலமும் எளிய உரையும்) – naladiyar seiyul vilakkam

naladiyar seiyul vilakkam

என்னுரை: சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் “பதினெண் மேற்கணக்கு” நூல்கள் எனப்படும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டை நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு வெண்பா உள்ளது. அது
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடத்தொடும் பத்து”

என்பது பத்துப்பாட்டு நூல்கள் அவை:-

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. பெரும்பாணாற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. மதுரைக்காஞ்சி
    7.நெடுநல்வாடை
  7. குறிஞ்சிப்பாட்டு
  8. பட்டினப்பாலை
  9. மலைபடுகடாம் ஆகியவை

எட்டுத்தொகை இவையென நினைவில் கொள்ள உள்ள வெண்பா இதோ,
“நற்றிணை நல்லகுறுந் தொகைஐங் குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரி பாடல்
கற்றறிந்தால் ஏற்றும் கலியொடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத் தொகை”

எட்டுத்தொகை நூல்களாவன:

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப்பத்து
  5. பரிபாடல்
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு என்பனவே

இவற்றைப் போலவே பதினெண்கீழ்கணக்கு நூல்கள் நினைவில் கொள்ள எழுந்த பாடல் இதோ:
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”

பதினெண்கீழ்கணக்கு நூல்கள் இவையாகும்:-

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. கார் நாற்பது
  6. களவழி நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. ஐந்திணை எழுபது
  9. திணைமொழி ஐம்பது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைந்நிலை – இவைதாம்

நாம் இப்பகுதியில் காணவிருப்பது பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் மூலமும் எளிய உரையுமாகும். நாலடியார் சமணமுனிவர்கள் நானூறு பேரால் பாடப்பெற்ற தொகுப்பு நூலாகும், இந்நூல் எழுந்த காலம் சங்கம் மருவ காலமாகிய கி.பி 250 என தமிழறிந்த சான்றோர் கணித்துள்ளனர்.

கீழ்கணக்கு நூல்களில் நாலடியாரும் திருக்குறளும் ஒத்த கருத்துடையவை என்பதோடு ஏறத்தாழ ஒரே அமைப்பை உடையவை நாலடியாரும் திருக்குறள் போல முப்பால் அமைப்பு உடையவை. நாலடியாரில் கடவுள் வாழ்த்து 1, அறத்துப் பால் 13, பொருட்பால் 24, காமத்துப்பால் 3 என மொத்தம் 40 அதிகாரங்களை உடையது அதிகாரத்திற்கு பத்துப்பாடல் வீதம் 400 பாடல்களுடன் கடவுள் வாழ்த்து சேர்த்து 401 பாடல்கள் உள்ளன.

nalatiyar urai vilakkam

நாலடியாரையும் திருக்குறளையும் ஒப்ப வைத்து வழங்கும் விதமாக
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பதாலும்
“சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது”
என்பதாலும்
“பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்” என்பதாலும் இவற்றின் சிறப்புகளாகும் – naladiyar seiyul vilakkam.

நாலடியார், நாலடிநானூறு எனவும், வேளான் வேதம் எனவும் அழைக்கப்பெறும். இதனை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இங்கு நாம் காணவிருப்பது தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட “செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்” என்ற நூலில் வெளியிடப் பட்டுள்ள பதப்பிரிப்பு பதிப்பினை பின் பற்றி தரப்படுகிறது.

இன்று முதலில் ‘கடவுள் வாழ்த்து‘க்கு உரை காணலாம்:

“வான்இரு வில்லின் வரவு அறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை – யாம் நிலம்
சென்னி உறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று”

விளக்கம்
வானில் தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கரியது. அதுபோல பிறப்பும் இறப்பும் அறிதலும் அரிதாம் இது உண்மையாதலால் அருக கடவுளை, பக்தியுடன் தலை தரையிற் பொருந்துமாறு பணிந்து வணங்கி மனதில் நினைத்தவை நிறைவேற வேண்டுவோம் – என்பதாம்.

– நன்றி கோமகன்

You may also like...