நாலடியார் செய்யுள் விளக்கம் (1 – செல்வம் நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-1

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

01. செல்வம் நிலையாமை

செய்யுள் – 01

“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறு சிகை நீக்கி உண்டாரும் – வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழெனில் செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று”
விளக்கம்
அறுவகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒருகவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கி உண்ட செல்வர்களும் வறியவராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானதென கருதலாகாது.

செய்யுள் – 02

“துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்”
விளக்கம்
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ் செல்வம் உண்டான காலம் தொடங்க மாடுகளைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளை பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம் போல மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறி வரும்.

செய்யுள் – 03

“யானை எருத்தம் பொலிய குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள”
விளக்கம்
யானையின் பிடரியில் அமர்ந்து எல்லோரும் காணுமாறு குடை நிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராக சென்ற அரசர்களும், தீவினையினால், முன்னிருந்த நிலையிலிருந்து வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்து போக, வறுமையில் வீழ்வர். (எனவே செல்வம் உள்ள போதே அறம் செய்க என்பதாம்)

செய்யுள் – 04

“நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ் நாள் செறுத்து உடன்
வந்தது வந்தது கூற்று”
விளக்கம்
நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக் கூடிய அறங்களை செய்ய நினைத்தால் விரைந்து செய்க ஏனெனில் வாழ்நாட்கள் விரைந்து போய்க் கொண்டே இருக்கின்றன; எமன் கோபித்து வந்து கொண்டே இருக்கிறான்.

செய்யுள் – 05

“என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்
பின் ஆவது என்று பிடித்து இரார் – முன்னே
கொடுத்தார் உயப் போவர் கோடு இல் தீக் கூற்றம்
தொடுத்து ஆறு செல்லும் சுரம்”
விளக்கம்
ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமை காலத்தில் பயன்படுமென வைத்திராமல் அது அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள், தனது தொழில் தவறாத எமன், பாசக் கயிற்றால் கட்டி இழுத்து செல்லும் பாலை வழியிருந்து தப்பி விடுவர் – naladiyar seiyul vilakkam-1.

செய்யுள் – 06

“இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்”
விளக்கம்
ஆயுட்காலத்தின் எல்லையைக் கடத்து எமனிடமிருந்து தப்பி பிழைத்தவர் எவரும் இல்லை! பெரும் பொருளை சேர்த்து வைத்திருப்பவர்களே! அதை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்! விரைவில் உங்கள் பிணப்பறை ‘தழிம் நழிம்’ என்னும் ஓசையுடன் எழும்.

செய்யுள் – 07

“தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதாரில்”
விளக்கம்
எமன் ஒளி மிக்க சூரியனை ‘நாழி’ எனும் அளவு கருவியாக கொண்டு, உனது வாழ்நாளை நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும். ஆதலால் அறம் செய்து உயிர்களிடத்து அருளுடையவர் ஆகுங்கள்! அன்றி மக்களாக பிறந்தும் பிறக்காதவரே!.

செய்யுள் – 08

“செல்வர் யாம் என்று நாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ் செல்வம் – எல்லில்
கருங் கொண்மூ வாய் திறத்த மின்னுப்போல் தோன்றி
மருங்கு அறக் கெட்டுவிடும்”
விளக்கம்
யாம் செல்வம் உடையோம்!’ எனக் கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவாளரின் செல்வம், மேகம் வாய் கொண்டு திறக்கும் மின்னலைப் போல ஒரு நொடியில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்

செய்யுள் – 09

“உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்
துன்ன அருங் கேளிர் துயர் களையான் கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் ஆஅ
இழந்தான் என்று எண்ணப்படும்”
விளக்கம்
ஒருவன், தான் உண்ணாதவனாய், புகழுக்குரிய செயல் செய்யாதவனாய், உறவுகளின் துன்பம் களையாதவனாய், இரப்பார்க்கு ஈயாதவனாய், வீணாய் செல்வத்தை காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் பொருளை இழந்தவனாகவே கருதப்படுவான். இறந்தவனாகவே கருதப்படுவான்.

செய்யுள் – 10

“உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றம்
கெடா அத அறமும் செய்யார் – கெடாஅது
வைத்து ஈன்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட
உய்த்து ஈட்டும் தேனீக் கரி”
விளக்கம்
வானளாவிய மலைகளுடைய நாட்டுத் தலைவனே! உண்ணாமலும், உடல் நலம் பேணாமலும், நல்லறம் செய்யாமலும், இரப்பாருக்கு ஈயமலும், சேர்த்த செல்வத்தை இழப்பவர் செயல், பல மலர்களிலிருந்து கொண்டு சேர்த்த தேனை இழைக்கும் தேனீ போன்றவனாவான்.

You may also like...