நாலடியார் (11) பழவினை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – இல்லறவியல்

11. பழவினை

செய்யுள் – 01

“பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்று
வல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே நற் செய்த
கிழவனை நாடி கொளற்கு”

விளக்கம்
பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும், இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலின் வல்லதாகும். அதுபோல முற்பிறவியிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனை தேடி அடையும் வல்லமை உடையது.

செய்யுள் – 02

“உருவும் இளமையும் ஒண் பொருளும் உட்கும்
ஒரு வழி நில்லாமை கண்டும் – ஒரு வழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழ்ம் தக்கது உடைத்து”

விளக்கம்
அழகும், வாலிபமும்,மேன்மையான பொருளும் பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்து, யாதேனும் ஒரு வகையில் ஒரு நற் செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை உடலெடுத்து சிலகாலம் நின்று பின் அழிந்து போகும் தன்மையுடையது.

செய்யுள் – 03

“வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியை
கார் எனச் செய்தாரும் இல்”

விளக்கம்
செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுடைய இன்ப நுகர்வுகள் வரையறை செய்யப் பட்டுள்ளன. விளங்காயை உருண்டை வடிவமாக செய்தவரும் இல்லை. களாப்பழத்தை கருமையுடையதாக செய்தவரும் இல்லை!

செய்யுள் – 04

உறற்பால் நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்”

விளக்கம்
வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக்கூடிய நன்மைகளையும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தாலும் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாக பெய்தால் அதனை தடுத்து நிறுத்துவாரும் இல்லை!

செய்யுள் – 05

“தினைத் துணையர் ஆகி தேசு உள் அடக்கி
பனைத் துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்
நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற”

விளக்கம்
பனையளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாக சிறுத்து சிறுமையுற்று வருந்தி வாழ்வர். இதற்கு காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையேயன்றி வேறில்லை உயர்ந்தோர் தாழ்ந்தோராவதற்கு தீவினையே காரணமாகும்.

செய்யுள் – 06

“பல்லான்ற கேள்வி பயனுறுவார் வீயாவும்
கல்லாதார் வாழ்வும் அறிதிலேர் – கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று”

விளக்கம்
பல மேன்மை பட்ட நூற் கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீகள்! இதற்கு காரணம் அறிவு என்னும் ‘சாறு’ கல்லாதவர் உள்ளத்தில் இல்லாமையால், அவர்களை வெறும் ‘சக்கை’ என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

செய்யுள் – 07

“இடும்பைக்கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் அடம்பப்பூ
அன்னஞ் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்”

விளக்கம்
அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலை கடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பெரிய வீட்டின் வாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த தீவினையின் பயனே ஆகும்.

செய்யுள் – 08

“அறியாதவர் அல்ல அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப
செய்த வினையான் வரும்”

விளக்கம்
காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையை உடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராக திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும் – naladiyar seiyul vilakkam-11.

செய்யுள் – 09

“ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய; வினைப்பயன் நல்லவை;
தீண்டா விடுதல் அரிது”

விளக்கம்
மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லோரும் எவ்வளவு சிறிய தீமையையும் விரும்ப மாட்டார்கள்; நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால்வரத்தக்கவை வராமற் போவதில்லை.

செய்யுள் – 10

“சிறுகா பெருகா முறைபிழந்து வாரா
உறுகாலத் தூற்றாக ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பதிவு”

விளக்கம்
கரு அமைந்த காலத்தே உண்டான ஊழ்வினைகள் குறையமாட்டா; வளரமாட்டா; முறைமாறி வரமாட்டா; துன்பம் வந்த காலத்தே ஊன்று கோலாக மாட்டா; எவையும் வரவேண்னிய காலத்தே வந்துசேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்?

– கோமகன்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    செய்யுள் ஒவ்வொறும் திகட்டாத தேன் விளக்கவுரை அதை நன்கு புரிந்துகொள்ள உதவியது.. அருமையான பதிவு …