கவிதை தொகுப்பு 54

திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54

kavithai thoguppu neerodai

மண்ணோடு விளையாடி..

மழையில் நனைந்தாடி..
வெயிலால் வியர்வையோடி..
அக்கம்பக்கம் உரையாடி..
அந்திப்பொழுதில் வீட்டை நாடி..
குடும்பத்தோடு குதித்தாடி..
குறைகளை கடந்தோடி..
இன்முகம் திகழ்ந்தாடி..
இருப்பவைக்குள் இயல்பாடி..
எதார்த்தங்கள் ததும்போடி..
புரிதலால் புகழ்பாடி..
அனுபவத்தின் அறிவோடி..
பக்குவமாய் வசைபாடி..
பகட்டில்லாத பார்வையோடி..
பாமரனாய் வாழ்ந்தோடி..
வம்சங்களுக்குள் வளைந்தாடி..
வரலாற்றில் சிறந்தோடி..
முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்ற
முன்னோர்களுக்கு இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்..


சமையலுடன் ஒரு உரையாடல்

ஆர்வக்கோளாறில் ஆரம்பித்து
ஆசையில் பழகி ஆயுள் முழுவதும் தொடரும்
என்று அறியாமல்
உன்னை கையாளத் தொடங்கினேன்..
அலுப்பாக இருந்தாலும் சரி..
சலிப்பாக இருந்தாலும் சரி..
எந்த சலுகையும் கிடையாது..
பாராட்டும் கிடையாது..
பண்டிகையின் விடுமுறையும் கிடையாது..
ஓய்வும் கிடையாது ஊதியமும் கிடையாது..
என்ன சமைப்பது என்று விருப்பத்தோடு பல நாள்..
சமைக்க வேண்டுமே என்று
வெறுப்போடு சிலநாள்..
விடுவேனா என்று விடாமல் தொடர்கிறாய்..


விளம்பரங்களினால் வெளிப்படையானவைகள் எத்தனை..?
ஊடகங்களினால் ஒளிந்திருக்கும் உண்மைகள் எத்தனை..?
வியாபார யுக்தியால் விற்பனைக்குள்ளானவைகள் எத்தனை..?
காலமாற்றத்தினால் கலப்படமானவகைகள் எத்தனை..?
ஊருக்காக என்ற பெயரில் ஊழல்கள் எத்தனை..?
வருமானத்தை திருடும் வகையில் வரிகள் எத்தனை..?
தொழில் நுட்பத்தால் தொலைந்து கொண்டிருப்பவைகள் எத்தனை..?
வளர்ந்து வரும் அறிவியலினால் அழிந்துவரும் அனுபவங்கள் எத்தனை..?
இதுபோன்ற விடையில்லா வினாக்கள் தான் எத்தனை..?


வேண்டாம் எனும் பதில் இருக்கும் வரைதான்
வேண்டுமா என்ற கேள்வி நிலைத்திருக்கும்..
எதிர்பார்ப்புகள் இல்லாத வரைதான்
எதார்த்தம் நிலைத்திருக்கும்..
கர்வம் வராத வரைதான்
கௌரவம் நிலைத்திருக்கும்..
தலைக்கனம் தவிர்க்கும் வரைதான்
தன்மை நிலைத்திருக்கும்..
ஆசை அதிகம் ஆகாத வரைதான்
ஆனந்தம் நிலைத்திருக்கும்..
உழைப்பு குறையாத வரைதான்
உடல் வலிமை நிலைத்திருக்கும்..
தனம் இருக்கும் வரைதான்
தானம் நிலைத்திருக்கும்..
தற்பெருமை இல்லாத வரைதான்
தரம் நிலைத்திருக்கும்..
தன்னிலை மாறாத வரைதான்
தவம் நிலைத்திருக்கும்..


இந்த வருடம் இழந்தவைகளின் இழப்பும் உண்டு..
அழிந்தவைகளின் அனுபவம் உண்டு..
இல்லாதவர்கள் இளைத்ததும் உண்டு..
இருப்போர் இன்பம் கண்டதும் உண்டு..
அத்தியாவசியத்தை அறிந்ததும் உண்டு..
ஆனாவிசியத்தை தவிர்த்ததும் உண்டு..
முகங்கள் மறைந்ததும் உண்டு
முகக்கவசம் எனும் முத்திரையே நினைவில் உண்டு..
விடை தெரியா வினாக்களும் உண்டு..
விடை கொடுக்காத வேதனையும் உண்டு..
வந்தவைகளை எல்லாம் வென்றோமேன்று
எச்சூழலையும் எதிர்கொள்வோம் இன்று.. – kavithai thoguppu-54


இன்றைய சூழலில் தன்னிச்சையாக செயல்படுவதே
எதார்த்தம் மற்றவை எல்லாம் ஏமாற்றம்..
உனக்கென வேண்டியதை உன் கையில் மட்டும் தேடு
ஊன்றுகோலின் உதவி நாடுவது ஊனமெனக்கொள்..
சுற்றமும் சூழலும் இன்று சுயநலமும் சூழ்ச்சியுமாகின..
தேடல்கள் எல்லாம் தேவைக்காக என்றாகின..
தனக்கான இருப்பு இம்மியளவும்
இருக்க வேண்டிய கட்டாயமே மேலோங்கின..
இது அறிவுரையும் அல்ல அக்கறையும் அல்ல
அனுபவம் சார்ந்த வரிகள்..

– தேவிகா திருப்பூர்

You may also like...

3 Responses

  1. a.packiaraj says:

    very nice

  2. தி.வள்ளி says:

    தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் முல்லை சரமாய் மணத்தது ..யதார்த்த வாழ்வின் அவலங்களை அழகாய் சுட்டிக்காட்டின.. வாழ்த்துகள் கவிஞருக்கு

  3. Kavi devika says:

    அன்பு வாழ்த்துகள் அறிமுக கவிஞருக்கு.. தொடரட்டும் தங்கள் கவி பயணம் இனிதே நீரோடையில்…..