நாலடியார் (38) பொதுமகளிர்
ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-38
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம்.
காமத்துப்பால் – இன்பதுன்ப இயல்
38. பொதுமகளிர்
செய்யுள் – 01
“விளக்கொளியும் வேசையல் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல – விளக்கொளியும்
தெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்”
விளக்கம்: விளக்கினது ஒளியும் பொதுமகளிரது அன்பும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால், இரண்டும் வேறானவை அல்ல. விளக்கின் ஒளி எண்ணெய் வற்றிய போது நீங்கும்; பொது மகளிரின் அன்பு கைப் பொருள் இல்லாதபோது நீங்கும்.
செய்யுள் – 02
“அங்கோட் டகலல்குல் யிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன் – செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து”
விளக்கம்: அழகிய பக்கங்கள் உள்ள அல்குலையுடைய தேர்ந்தெடுத்த அணிகலன் அணிந்த பொதுமகள் என்னிடம் செல்வம் பெருகி இருந்தபோது ஒன்று பட்டு ஒருகணமும் பிரியாதவள் போல ‘நாம் மலைமீதேறி குதித்து இறப்போம்’ என்றாள். என்னிடம் பொருள் தீர்ந்தபின், காலில் வாத நோய் வந்ததென அழுது நடித்து என்னுடன் மலையுச்சிக்கு வராது விலகி சென்றாள்.
செய்யுள் – 03
“அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது”
விளக்கம்: அழகிய இடமகன்ற தேவர் உலகில் தேவர்களால் தொழப்படும் திருமால் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போன்ற மேனியுடைய பொது மகளிர் தம் கையால்
கும்பிட்டு அனுப்பி விடுவாள்.
செய்யுள் – 04
“ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர் – காணவே
செங்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு”
விளக்கம்: அன்பில்லாத மனதையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிருக்கு பொருள் இல்லாதவர் நஞ்சு போல விரும்பத் தகாதவர் ஆவர். பலரும் காணும் செக்காட்டுவோர் ஆயினும் பொருள் வைத்திருப்பவர் பொது மகளிருக்கு சர்க்கரை போன்று இனியவராவர்.
செய்யுள் – 05
“பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்”
விளக்கம்: இனிமைமிக்க தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலை காட்டி மீனுக்கு மற்றொரு தலை காட்டும் விலாங்கு மீன் ஒத்த செய்கையுடைய பொதுமகளிரின் தோள்களை மிருகத்தை போன்ற அறிவற்றவர்கள் தழுவுவார்கள்.
செய்யுள் – 06
“பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ”
விளக்கம்: நூலும் மணியும் போன்றும், இணை பிரியாத அன்றில் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டு பிரியமாட்டோம் என்று சொன்ன பொன்னாலான வளையலை அணிந்தவள் போர் செய்யும் ஆட்டுக்கடா போல குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னும் ஆசை கொண்டு அவளிடம் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்.
செய்யுள் – 07
“ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை”
விளக்கம்: காட்டுப் பசுவினை போல் இன்பமுண்டாக தழுவி, தம்மை சேர்ந்தவருடைய பொருளை எல்லாம் கவர்ந்து கொண்டு அவர் வறுமையுற்றதும் அவரைப் பார்த்து குப்புற படுத்துக் கொள்ளும் பொது மகளிரின் அன்பை தமது என்று ஏமாந்திருப்பவர், பலரால் ஏளனமாக சிரிக்கப் பெறுவர்.
செய்யுள் – 08
“ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்
தாமார்ந்த போதே தகர்கோடாம் – மானோக்கின்
தந்நெறிப் பெண்டீர் தடமுலை சேராரே
செந்நெறிச் சேர்துமென் பார்”
விளக்கம்: தம்மை நாடி வந்தவர் தம் அழகில் மயங்கி இருந்த போது அவருடைய பொருளை பறித்து கொண்டு பின் அவர்கள் வறுமையுற்ற போது ஆட்டுக்கடா போல் முறுக்கிக் கொள்ளும் குணமும் மான் போன்ற பார்வையும் உடைய பொதுமகளிரை சான்றோர்கள் விரும்ப மாட்டார்கள்.
செய்யுள் – 09
“ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் – தேறி
எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்”
விளக்கம்: ஒளிவீசும் நெற்றியை உடைய பொதுமகளிர், துன்பம் செய்யும் மனதை பிறர் அறியாதவாறு மறைத்து வைத்து பேசும் ஆசை மொழிகளை நம்பி, ‘இவள் எனக்குரியவள்’ என நினைப்பார் நினைக்க, உண்மையில் அப்பொதுமகளிர் யாருக்கும் உரிமை உடையவர் அல்லர்.
செய்யுள் – 10
“உள்ளம் ஒருவன் உழையா ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் – தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்”
விளக்கம்: ஒளி பொருந்திய நெற்றியை உடைய பொதுமகளிரின் மனம் ஒருவரிடத்தே இருக்க அதனை மறைத்து தம்மை அடைந்தவரிடம் ஆசையுடன் பேசும் போலி சொற்களை அறிந்த போதும் பாவமுடைய உடம்பினர் பொது மகளிரை விட்டொழித்தலை அறியார்.
– மா கோமகன்