கல்லணை ஆஞ்சநேயர்

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar.

kallanai anjaneyar

சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார். இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது.

இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர். இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது. இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது. பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர்.

இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன. ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார்.

கனவுகள் பற்றிய நம்பிக்கை

இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர். எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர். இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார் அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன். என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது கனவுகளைப் பற்றி விளக்கினார். அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.

கும்பாபிஷேகமும் நடந்தேறியது

நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய்.

நானே இந்த அணையைக் காப்பவன். அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன். மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது. இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார். மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார். அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது. அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார். பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது.

அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் இன்றும் இந்தக் கோவிலின் நித்திய பூஜைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதன் ஆதாரங்களை இன்றும் தஞ்சை மாவட்டத்தின் பொதுப்பணித் துறையின் பழைய ஆவணங்களிலிருந்து பெறலாம். இந்த கட்டுரையை பகிர்ந்த சமூக வலைதள நண்பருக்கு நன்றி – kallanai anjaneyar.

You may also like...

1 Response

  1. கதிர் says:

    வரலாற்று செய்தி நிச்சயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *