நாலடியார் செய்யுள் விளக்கம் (7 – சினமின்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-7

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

07. சினமின்மை

செய்யுள் – 01

“மதித்து இறப்பாரும் இறக்க மதியார்
மிதித்து இறப்பாரும் இறக்க – மிதித்து ஏறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று”
விளக்கம்
தம்மை மதித்து நடப்பார் விடுத்து, மதிக்காது நடப்பாரின் செயல்களை அற்ப ஈயும் மிதித்து தலையில் உட்காருதலைப் போல கருதி, சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இல்லாதவராய் இருப்பார்.

செய்யுள் – 02

“தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது
கண்டுழி எல்லாம் துறப்பவோ – மண்டி
அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்”
விளக்கம்
ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், இடர் வந்தபோதெல்லாம் சினத்தை பொறுத்து கொள்வாரே அல்லாமல் இனிய உயிரை விடுவாரோ? விடமாட்டார்.

செய்யுள் – 03

“காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ் ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து”
விளக்கம்
ஓருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச் சொல், அவனையே வருத்தும். ஆகையால் ஆராய்ந்தறிந்த அறிவும் கேள்வி ஞானமும் உடைய சான்றோர் எப்போதும் சுனம் கொண்டு கடுமையான சொற்களை சொல்ல மாட்டார்கள்.

செய்யுள் – 04

“நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்து அதனை
உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப
துள்ளித் தூட் முட்டுமாம் கீழ்”
விளக்கம்
மேலோர், தமக்கு நிகரில்லாதவர் தம்மை எதிர்த்து தீய சொல் சொன்னால் அதற்காக மனம் புழுங்கி சினம் கொள்ள மாட்டார்கள்..ஆனால் கீழ்மக்களோ பிறர் கூறும் இழி சொற்களை மனதில் நினைத்து நினைத்து பிறரிடம் சொல்லிச் சொல்லி மேலும் மேலும் சினம் அடைந்து துள்ளிக் குதித்து தூணில் முட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

செய்யுள் – 05

“இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப் பயன் எல்லாம்
ஓறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை”
விளக்கம்
வாலிப பருவத்தினரது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறை பொருள் இல்லையென்றாலும் செய்யும் கொடையே சிறந்த கொடையாகும். அதைப் போல எல்லா எதிர்ப்புகளையும் வெல்லதக்க உடல் வலிமையும், மன உறுதியும் உடையவன் சினத்தை அடக்கி கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமையாகும்.

செய்யுள் – 06

“கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் – ஒல்லை
இனு நீற்றல் பை அவிந்த நாகம் போல் தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு”
விளக்கம்
கல்லால் எறிந்தது போல, கீழ்மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் அறிய, மந்திரித்து இடப்பட்ட திருநீற்றால், சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருருமையால் பெரியோர் சினம் கொள்ளாது பொறுத்துக் கொள்வர்.

செய்யுள் – 07

“மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் – ஆற்றாமை
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை
பேர்த்து இன்னா செய்யாமை நன்று”
விளக்கம்
பகைவராக எண்ணி, அப்பகைமை பண்பிற்கேற்ப காரியங்களைச் செய்யும் போது, அறிஞர்கள் தாமும் எதிர்த்து பகைமை கொள்ளமாட்டார்கள். இதனை “இயலாமையாகிய பலவீனம்” எனக் கூறிய போதிலும், பகைவர் தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும், தாம் அவர்களுக்கு திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.

செய்யுள் – 08

“நெடுங் காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றி பரக்கும் அடும் காலை
நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்”
விளக்கம்
கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது. மென்மேலும் வளரும். மேன் மக்களின் சினமானது, வெப்பம் அடைந்த நீர் தானாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைவது போல, இயல்பாகவே அடங்கி விடும்.

செய்யுள் – 09

“உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்ற செய்யினும் – உபகாரம்
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல்”
விளக்கம்
தாம் செய்த உதவியை சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியாக தீமை செய்தாலும், தாம் அவருக்கு திரும்ப உதவி செய்வார்களேயன்றி தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியில் பிறந்தவர்களிடம் இல்லை.

செய்யுள் – 10

“கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை – நீர்த்து அன்றிக்
கீழ் மக்கள் கீழ் ஆய சொல்லியக்காள் சொல்பவோ
மேன் மக்கள் தம் வாயால் மீட்டு”
விளக்கம்
சினம் கொண்ட நாய் நம்மை கடிப்பதை போல, நாமும் திரும்பி அதைக் கடிப்பது இல்லை. அதுபோல தகுதியின்றி கீழ்மக்கள் கீழ்த்தரமான சொற்களை சொல்லும் போது மேன் மக்கள் அவர்களுக்கு எதிராக அச்சொற்களை திருப்பி சொல்ல மாட்டார்கள்.

– கோமகன்

You may also like...