புதைமணல்
நினைவுச்சிறகுகள் ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை “புதைமணல்” – puthaimanal sirukathai.
பவுர்ணமி நிலவின் மிதமான வெளிச்சமும், குளிர்ச்சியான இளந்தென்றல் காற்றும், மயிலிறகாய் மனதை வருடும் பவழமல்லி வாசமும் மனதிற்கு ஒரு இதத்தை தர,அபர்ணா தோட்டத்து பெஞ்சில் அமர்ந்தாள்.இந்த மாதிரி இயற்கையை ரசித்து எவ்வளவு நாளாயிற்று என்ற எண்ணம் அபர்ணாவின் மனதில் எழுந்தது.
அபர்ணாவின் அம்மா சங்கரி, அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.” நான் சொல்வதை கேளு அபர்ணா! கோபப்படாதே! எத்தனை நாள் இப்படியே இருப்ப? உனக்கு ஒரு துணை கண்டிப்பாக வேண்டும். நம்ம கும்பக்கோணம் சித்தப்பாவோட சகலை பையன் டெல்லியிலே நல்ல வேலையில இருக்கானாம், அபர்ணா சரின்னு சொன்னா அவனை வரச் சொல்றேன்னு சித்தப்பா சொல்றாரு” என்றவாறே மகளை ஏறிட்டாள், “அம்மா! புரிஞ்சுக்கோ! திரும்பத்திரும்ப கல்யாணப் பேச்சை எடுக்காதே! நான் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விரும்புறேன். என்னை தொந்தரவு பண்ணாதே!” என்றாள். மகள் பிடி கொடுக்க மறுக்கிறாளே என்ற ஆதங்கத்துடன் சங்கரி எழுந்து உள்ளே போனாள் – puthaimanal sirukathai.
கடந்த இரண்டு ஆண்டு இல்வாழ்க்கையின் கசப்பு அபர்ணாவின் மனதில் எழ, எச்சில் கூட்டி விழுங்கினாள். இனி நான் எதையும் நினைக்கப் போவதில்லை கடந்து போன வாழ்க்கை கடந்து போனது தான் .அது பற்றி இனி நினைக்கக் கூடாது.. என்று சற்றுமுன் தானே நினைத்தேன்… ஆனால் நடைமுறையில் அது எளிதில் சாத்தியப்பட போவதில்லையென்று தோன்றியது.
நரக வாழ்க்கை
அப்பப்பா இரண்டு ஆண்டுகளும் நரக வேதனை வாழ்க்கை. கணவன் தினமும் குடியும் போதையும் தான். அது போதாததற்கு சந்தேக புத்தி வேற.. தன் இரண்டாண்டு திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய…அன்று நீதிமன்றம் கொடுத்த மண விலக்கு ஒருவித நிம்மதியை கொடுத்தாலும், மனதை ஏதோ ஒரு சோகம் அழுத்தியது.
சங்கரி, மகள் வாழ்க்கையை எண்ணி மனதளவில் நொறுங்கிப் போனாள். மகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டுமே என்ற கவலை அவளுக்கு. எனவே இன்னொரு நல்ல வாழ்க்கையை விரைவில் அமைத்துக் கொடுக்க துடித்தாள்.
எங்கே பிரசாத்?
ஞாயிறு காலை சோம்பலாக விடிந்தது.வேலைக்கு ஓட வேண்டிய தேவை இல்லாததால் மெதுவாக எழுந்து,குளித்து, சாப்பிட்டு விட்டு, வாசலுக்கு வந்தாள். எதிர் வீட்டு மாலதி அவளைப் பார்த்து விட்டு வாசலுக்கு வந்தாள்
“அபர்ணா குட்மார்னிங்”
“குட் மார்னிங் அக்கா! பிரேக்பாஸ்ட் ஆச்சா? நம்ம பிரசாத்தை எங்க காணோம்?” என்றாள் அபர்ணா.பிரசாத், மாலதியின் மகன் ஐந்தாம் வகுப்பு படிப்பவன்.
“உள்ளே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுறான்” என்றாள் மாலதி.
அப்போது வெளியே வந்த சங்கரி” மாலதி! பிரசாத்த எங்க காணும்? உன்பிள்ளை சைக்கிளை விட்டு இறங்காம சுத்தி,சுத்தி வருவான். ஏன் இப்ப வெளியிலேயே ஆள காணோம்” என்றாள்.
“ஆமாம்க்கா நான்கூட கேக்கணும்னு நெனச்சேன். பிரசாத்தை வெளியில பார்த்து நாளாச்சு! எங்க வீட்டுக்கு கூட வரலையே?” என்றாள் அபர்ணா.
“அபர்ணா! சைக்கிள் ஓட்டும் போது ஒரு சின்ன விபத்து… ஒரு பைக் காரன் வேகமா ஓட்டி இடிச்சுட்டான் .பிரசாத் கீழே விழுந்து கால்ல அடிபட்டுடுச்சு. கால்ல ஒரே வலி… இப்ப பரவாயில்ல… இது நடந்து இரண்டு வாரம் ஆச்சு .ஆனா அவன் விபத்து அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளல சைக்கிள் எடுக்கவே பயப்படுகிறான். அவன் அந்த அதிர்ச்சிலேயிருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும்.அது வரை பொறுமையாய் இருக்கேன். சைக்கிளை எடுக்க சொல்றதில்ல. பள்ளிக்கூடத்துக்குக் கூட அவங்க அப்பா தான் கொண்டு போய் விட்டு, கூட்டிட்டு போறாங்க…
எந்தக் கசப்பான அனுபவமும் மறக்க கொஞ்சநாள் ஆகத்தானே செய்யும் அதை நான் புரிஞ்சுகிட்டேன் அதனாலதான் அவனை தொந்தரவு பண்றதில்லை…” என்றாள் மாலதி. சங்கரிக்கும் புரிந்தது.
அபர்ணாவும் அப்படித்தானே அவளுக்கும் அவளது கசப்பான அனுபவங்களிலிருந்து மீள கொஞ்ச நாள் ஆகும். அதுவரை அவளை தொந்தரவு செய்வது சரி கிடையாது பொறுமையாக அவள் மனம் ஆறும் வரை காத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
– தி.வள்ளி, திருநெல்வேலி.
கரெக்ட் கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வர நாளாகும்
வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தத்தை விளக்கி இருக்கும் பாங்கு அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
அருமை. வாழ்த்துகள்
ஊக்குவித்த சகோதரிகளுக்கு நன்றி..