சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை

கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam

santhanathamai puthaga vimarsanam

திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து விடுகிறார்.கவித்துவமான வரிகள்..மேலும் அழகு செய்கிறது. கதை ஒரு இரவின் பொழுதில் துவங்கி விடியற்காலையில் நிறைவுறுகிறது.. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் அருமை..

சந்தனத்தம்மை

கொலைக்களமே கதைக்களமாய்
துவங்குகிறது..
நகரும் பொழுதுகளோடு
நாமும்.. தலைப்புகளும்
அதிர்வுகளை அருகில்
ஈர்க்கும் மரகதமாய்
அன்பினால் அனைவரையும்
ஈர்க்கும் நமது
மரகத நாச்சியாள்..
அனைவரும் வணங்கும் தெய்வமகள்..
ஊரும்.. உறவும் அவளை
தெய்வமாக்கிப் பார்க்கிறது..
அவளின் கைகளினால்
பெற்ற கனியும் சிறப்பு தரும்
என்பது நம்பிக்கை..
அழகுத் திருமகள்
மணக்கும் சந்தனமாய்
மனமெங்கும் நிறைக்கிறாள்..
மகிழ்ந்த மனநிறைவில்
ஊரும்.. உறவும்
அவள் தாள் பணிகிறது..
வணங்கும் கடவுளை
அவளில் காண்கிறது
இட்ட பணி அதுவென்று
அவளும் அதுவாகவே ஆகிறாள்
மலரினும் மெல்லியது காதல்..
அது இந்த மெல்லியலாளையும்
விட்டு வைக்கவில்லை..
கட்டிடம் கட்ட வந்தவன்
காதல் தலைவனாகிறான்..
அவளின் இதயத்தில்
காதல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி
அவனறியாமலே அவளை ஆள்கிறான்..
காதல்.. சாதி பார்ப்பதில்லை
காதல்.. மதம் பார்ப்பதில்லை
பின்
காதல் என்ன செய்யும்
காதல் எல்லாம் செய்யும்
காதல் எல்லாமும் செய்யும்..
விண்ணையும் மண்ணையும்
இணைக்கின்ற மழைத்துளியாய்
இருமனங்களை பிணைக்கிறது
காதல்..
எதிர்ப்புகளைக் கடந்து
விரும்பியவனை மணக்கிறாள்
அன்பும்.. அறனுமாய்
நிறைகிறது இல்லறம்..
இருப்பினும் நிறையவில்லை
மழலைச் செல்வம்..
ஏக்கமும்.. கவலையும் கை சேர
வழி மாறுகிறது
வாழ்க்கைப் பயணம்..
நம்பிக்கை தளராத நாச்சியாளோ
விதியின் சதியையும்
சகித்துக் கொள்கிறாள்..
இயலாமை ஒருவனை
எரிமலையாய் மாற்றிவிடும்
அவளின் கணவனும்
அதற்கு விலக்கல்ல..
மனதில் எரியும்
கோபத் தணல்
மதியை எரிக்க
கற்பின் கனலான
காதல் மனைவியை சந்தேகிக்கிறான்..
தழுவிய கரங்கள்
தாக்கவும் துணிந்தனவோ..
உயிரில் உறைந்தவளை
தன்னிலிருந்து பிரித்துப் பார்க்கிறான்..
கலைந்தாலும்.. பொழிந்தாலும்
தூய்மையானது மழைநீர்
அதுபோன்ற அவளின் மனம்
அவனறிந்ததுதான்.. ஆயினும்
செவிசேர்ந்த விஷ வார்த்தைகள்
சந்தேகப் பேயோடு
சேர்ந்து கொள்ள..
அவன் இதயமும் எரிந்ததுவோ
அகம் நிறைந்த அவளை..
அவன் நிறைந்த அவளை..
வதைத்துக் கொள்கிறான்
சிரிக்கும் மலரை
சிதைத்துக் கொள்கிறான்..
சிந்தை நிறைந்த வக்கிரம் தீரவும்
அவனுள்ளிருக்கும் அவன்
மெல்ல மெல்ல வெளிவருகிறான்
மனைவியின் மரணஒலி
அவனின் மனதை அறைய
தன்னிலை உணர்கிறான்..
தவிக்கிறான்.. துடிக்கிறான்..
அவளில்லா உலகில்
தானும் வாழ விரும்பாமல்
தொலைத்த தன் சுவாசம் தேடி
தன்னுயிர் துறக்கத் துணிகிறான்..

கைவில்லும்.. கால் சிலம்பும்
கற்பின் சிறப்பை
காலங்காலமாய் எடுத்துரைத்தாலும்..
பெண்மையின் மகத்துவத்தை
நாம் அறிந்திருந்தாலும்
ஊழ்வினையெனும் மாயவலைக்குள்
அகப்படாமல் போக முடியாது..
இந்த மரகத நாச்சியாள்
மனம் நிறைந்த சுகந்தமாய்
நுகர வைக்கிறாள்..
நம் நினைவுகளில்
நகராமல் இருக்கிறாள்..
கை தொழுவோம் அவளை..

மனதின் நுணுக்கமான உணர்வுகளை அழகாய் எழுதியிருக்கிறார்.இக்கதையை படிக்கும்போது இரவில் ஒரு காட்டின் சூழல் எப்படியிருக்கும் என்பதை நாமும் உணர முடிகிறது..மாற்றத்திற்கு மனித மனமும் விதிவிலக்கல்ல என்பதை இந்த கதையின் நாயகன் மூலமாய் அறிய முடிகிறது..இத்தகைய சிறப்பு வாய்ந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.. – santhanathamai puthaga vimarsanam

– ப்ரியா பிரபு, நெல்லை

You may also like...

6 Responses

 1. R SRINIVASAN says:

  அருமையான விமர்சனம்.
  எம்.எம்.தீன் அவர்களுக்கு வாழ்த்துகள்

 2. Parvathy says:

  Super akka.விமர்சித்த வார்த்ைதகள் அழகு

 3. S. M. Rajeswari says:

  Super mam

 4. மா.உமா says:

  நாவலை துளிப்பாவாக்கி நச்சென்று வடித்த விதம் புதினத்தை இன்னும் மெருகேற்றுகிறது.

 5. தங்கத்துரையரசி says:

  சிறப்பு