திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar.

thirukarukavur mullaivananathar

கோயிலின் அமைப்பு

அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கே ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு வாயிலும் அமைந்திருக்கிறது. சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவையும்… உள்ளே நுழைந்ததும், வடபக்கம் வசந்த மண்டபம், அடுத்து முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் சுவாமி கோயிலும் வடபக்கம் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் இருக்கின்றன.விநாயகர்,முருகர், துர்க்கை, நவக்கிரகங்கள் , தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

இத்தலத்தின் தல விருட்சம் முல்லைக்கொடி.எனவே இத்தலத்து இறைவன் பெயர் முல்லைவனநாதர். மகப்பேறு அளிப்பதால், கர்ப்ப புரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்த வடுவை இன்றும் காணலாம். புற்றுருவாக இருப்பதால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அம்பிகை குழந்தைப்பேறு அருளுவதால் ‘கர்ப்பரட்சாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலின் சிறப்பு

பல ஆண்டுகள் குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், திருமணம் கூடி வராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரவும்,அன்னை அருளுகிறாள். அன்னை கருகாத்த நாயகியை வேண்டி ,அவள் சன்னதி படியை நெய்யால் மொழுகி, அன்னையின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 48 நாட்கள் உண்டு வந்தால் குழந்தை பேறு கிட்டும் என்பது கண்கூடு. மேலும் கருவுற்ற பெண்கள் இத்தலத்து இறைவியை வேண்டி பூஜித்த அவளது நெய்யை வயிற்றில் தடவி வந்தால், சுகப் பிரசவம் நிகழும் என்பது கண்கண்ட உண்மையாகும் – thirukarukavur mullaivananathar.

இக்கோயிலின் புராண மகிமை

முன் காலத்தில்,’ முல்லை வனம்’ என்ற இவ்விடத்தில் முனிவர்களுக்கு பணிவிடை செய்து வந்த நித்துருவர்- வேதிகை தம்பதிக்கு குழந்தை இல்லையென்ற குறை. முனிவர்கள் உபதேசித்தபடி, முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி குழந்தைப்பேறு வேண்டினர்.

அன்னையின் அருளால் வேதிகை கருவுற்றாள். தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் மயக்கமாக இருந்த போது அங்கு வந்த முனிவர் ஊர்த்துவபாதர் பிட்சை கேட்க, வேதிகையால் அவருக்கு பிச்சையிட முடியவில்லை. அவள் கருவுற்றிருப்பதையறியாத முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் முறையிட அம்பாள் ‘கர்ப்பரட்சாம்பிகை’ யாக தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையில் அதை காப்பாற்றி,’ நைந்துருவன்’ என்ற குழந்தையாக கொடுத்தாள்.

இறைவியின் மகிமையை கண்டுகொண்ட வேதிகை அன்னையை இத்தலத்தில் ‘கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, கருவுற்றவர்களின் கருவை காப்பாற்ற வேண்டும்’ என்று பிரார்த்திக்க,அவள் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் அருள்பாலித்தாள். அதுமுதல் அம்பாளுக்கு கர்ப்பரட்சாம்பிகை ,கருகாத்த நாயகி என்ற பெயர்கள் வழங்கி வரலாயிற்று – thirukarukavur mullaivananathar.

“கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே …”

என்று திருஞானசம்மந்தர் போற்றிப் புகழ்ந்த இத்தலத்தின் மகிமையை அறிந்து கொண்டோம். நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் வந்து தரிசித்துச் செல்லும் திருத்தலமாம் திருக்கருகாவூர் சென்று நாமும் தரிசித்து அன்னையின் அருள் பெறுவோம்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

8 Responses

  1. Rajakumari says:

    பெண்கள் அதிலும் குறிப்பாக குழந்தை வரம் வேண்டி பவர்கள் அவசியம் செ ல்ல வேண்டிய கோயில்

  2. Priya prabhu says:

    நல்லதொரு ஆன்மீகக் கட்டுரை.. கோவிலின் சிறப்பை நன்கு அறிய உதவுகிறது.. அருமை.. 💐💐

  3. Kavi devika says:

    அருமை… நற்தகவல் பகிர்ந்த ஆசிரியருக்கும் நீரோடைக்கும் நன்றி

  4. Nachiyar says:

    அருமை. வாழ்த்துகள்

  5. Priya prabhu says:

    அருமையான கட்டுரை.. கோவிலைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.. நன்றி 💐💐

  6. பாரதி says:

    தெரியாத வரலாற்னற தெரிவித்த னமக்கு மிக்க நன்றி

  7. பாரதி says:

    தெரியாத வரலாற்னற தெரிவித்தற்கு மிக்க நன்றி

  8. தி.வள்ளி says:

    ஊக்குவித்த வாசக நண்பர்களுக்கு மிக்க நன்றி