காதலிக்கு ஒரு கடிதம்..!

[இருவரின் காதல் விதியின் சதியால் ஒரு கட்டத்தில்பிரிந்து விடுகிறார்கள், அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஆனால் வேறு வேறு திசைகளில். ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான், அவள் விட்டுச் சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அப்பொழுது அவனது எண்ண ஓட்டங்கள் பிரதிபலிப்பே எனது இந்த படைப்பு ]

என்னவளே!

எப்படி இருக்கிறாய் என்ற சம்பிரதாய வார்த்தைகளோடு நான் என் கடிதத்தை ஆரம்பிக்க விரும்பவில்லை, காரணம் இந்த கடிதம் உன்னை வந்தடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. 3500 உறவுகளுக்கு பிறகு என் பேனா உனக்காக தலை குனிகிறது!

எனக்கு மணம் முடிந்திருந்தாலும் என் மனதில் உன் அத்தியாயம் இன்னும் முடியவில்லையடி! உன்னை நினைக்கலாமா என்று என் மூளை பரிசீலனை செய்து கொண்டிருந்த வேளையிலே என் இதயம் தீர்மானமே போட்டுவிட்டது!

என்னவளே! உன் பெயரைக்கூட நான் எழுத விரும்பவில்லை, காரணம் என் மைத்துளிகளை என் கண்ணீர்த்துளிகள் அழித்துவிடக் கூடாது என்பதற்காக. 10 ஆண்டு பாலைவன வருடங்களுக்கு முன்பு உன்னை முதன் முதலாய் சந்தித்த பொது நினைத்துப் பார்க்கவில்லை, என் 20 களின் முற்பகுதியில் மட்டுமே உனக்கு இடம் உண்டு என்று !

kaathalikku oru kaditham

எங்கு இருக்கிறாய் அன்பே ! உன் புதிய வாழ்க்கையில் நீ வசதியாக இருப்பாய் என நம்புகிறேன்!,,,அன்பே உனக்கு நினைவு இருக்கிறதா நமது முதல் சந்திப்பு அந்த கல்லூரி வாசலில், அதே கல்லூரி தான் இன்னும் தன் கம்பீரத்தை இழக்காமல் இருக்கின்றது. பாடங்கள் கற்றுக்கொள்ளும் கல்லூரிக்கு என் வாழ்க்கை பாடமாக வந்தவள் நீதானே! நான்கு கண்கள் சந்தித்துக்கொண்ட அந்த வேளையில் , இரு இதயங்கள் மௌன மொழியால் பேசிக்கொண்ட வேளையில், இரு உயிர்கள் ஒன்றாகிப் போன அந்த காதல் உலகத்தில், என் மனதை கட்டிப்போட்டவள் நீதானே! பிறகு கல்லூரி நாட்களோடு நம் காதல் நாட்களும் வேகமாக நகர்ந்தனவே!

தோல்வியின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி வெற்றியின் விலாசம் கொடுத்தவளே! உயிரே அந்த வசந்தகால மாலைப்பொழுதுகளின் நினைவுகள் இன்னும் உன் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? அந்த மாலைப்பொழுதில் மயக்கத்தில் உன் புன்னகை மழையில் நான் ஆசை தீர நனைந்த நாட்களையெல்லாம் மனதில் அசைபோட்டுப் பார்க்கிறேன்.

என் வாழ்க்கைத் துணை என்னையும், என் மனதையும் நன்றாக பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு நானே உலகம், அவள் உலகத்தில் வேறு யாரையும் அவள் அனுமதிப்பதில்லை. என் மைத்துளிகளும், கண்ணீர்த்துளிகளும் சிந்திக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவிலும் அவள் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள். வாழ்க்கை மாறிவிட்டது ஆனால் உன் நினைவுகள் இன்னும் மறைந்திடவில்லை, சில சமயம் என் பொய் சிரிப்பை கண்டுபிடித்துக் கொண்டு நண்பர்கள் கேட்பார்கள் ! எப்படி சொல்வேன் அவர்களிடம் அந்த உண்மை கண்ணீரை! என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி வரை அந்த மர்ம முடிச்சை நான் அவிழ்ப்பதாய் இல்லை!

இதயமே சில்லு சில்லாய் உடைந்து போன அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் என் இதயம் துடிக்குதடி ! கண்ணீரோடு பிரிவோம் என்று கண்ணியமாய் சொன்னாயே. உன் இதயத்திற்கு யார் அந்த உறுதியை தந்தது? வார்த்தைகள் வசப்படாமல் கண்களால் பிரிவு உபசார விழா நடாத்தினாய்.
காதலின் முதலும் முடிவும் கண்ணீராகத்தான் இருக்கும் என்று அன்று தான் புரிந்து கொண்டேன் ! கண்ணீரைப்போலவே காதலும் உப்பாகத்தான் இருக்குமென்று இப்போது தான் புரிந்துகொண்டேன் !

தோற்றது நீயுமல்ல! நம் காதலுமல்ல! ஜெயித்தது விதி!

போகட்டும், உன் வாழ்க்கைப் பாதையில் இனியாவது வசந்தங்கள் குடிகொள்ளட்டும்! எனக்குப் பிறகு அதிகமாய் உன்மீது அன்பு வாய்த்த அம்மா எப்படி இருக்கிறார்? வேலையே வாழ்க்கையெனக் கொண்டு வேள்வி நடத்திய அப்பா எப்படி இருக்கிறார்? நீ அதிகமாய் நேசித்த உன் அண்ணன் மகள் அந்த குட்டி தேவதை வளர்ந்து விட்டாளா? விட்டு விட்டு பெய்கின்ற மழைத்துளி போல விக்கி விக்கி அழுகின்றேனடி உன்னை நினைத்து. முடியவில்லை அதனால் வார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வருகிறேன்.

என் வாழ்க்கையின் கலங்கரை விளக்காய் ஆனவளே! வெறும் கல்லாய் இருந்த என்னை வைரக்கல்லாய் மாற்றியவளே! சூரியனாய் என்னை மாற்றிய நிலவே ! என் வாழ்க்கை விடிந்துவிட்டது, நீ ஏன் அஸ்தமனமாகிவிட்டாய்?

– சரவணப்பிரகாஷ்

 

பொறுப்பாகாமை

You may also like...

2 Responses

  1. R. Karthick says:

    உன் முகமே ஒரு ஆழகு
    நீ பார்க்கும் பொழுது என் மனமே தடுமாறும்

  2. SIVARAMAKRISHNAN says:

    அழகு